இடதுசாரி
இளைஞர்களைக் கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI)த்தின் மாத இதழான "இளைஞர்
முழக்கம்" எனக்கு மாதந்தோறும் வரும். அப்படியே இந்த 2013 பிப்ரவரி இதழும்
வந்தது. எனது தந்தை அதைப் படித்துக் கொண்டிருந்தார். அவர் தலையங்கத்தைப் படிப்பது
எனக்குத் தெரிந்தது. என் தந்தைக்குப் பின்னால் நின்று தலையங்கத் தலைப்பை உற்றுப்
பார்த்தேன். "இனி விஸ்வரூபமாய் கிளம்பும்.." என்றது தலைப்பு.
நான்
அந்த தலையங்கத்தைப் படிக்காமலேயே எனது தந்தையிடம், "அப்பா, இந்தத் தலையங்கம்
எப்படித் தெரியுமா இருக்கும்? விஸ்வரூபத்திற்கு தடையை ஏற்படுத்திய இஸ்லாமிய அமைப்புகளைப்
பெயரளவில் கண்டித்து, மற்றபடி இந்து அமைப்புகளை அடி அடி என்று
அடித்திருப்பார்கள்." என்றேன்.
எனது
தந்தை, "படிக்க விடுடா" என்றார்.
சரி
படிக்கட்டும் என்று நான் எழுந்து உள்ளே சென்றுவிட்டேன். காலை உணவு அருந்தி விட்டு,
எனது தந்தையின் அருகில் அமர்ந்து இன்று வந்த "தினகரனை"ப் புரட்டினேன்.
எனது
தந்தை, "என்னவோ சொன்னே, தலையங்கம்
நல்லாத்தானேடா இருக்கு, சரியாத்தான் சொல்லியிருக்காங்க, நீ சொன்ன
மாதிரியெல்லாம் இல்லை." என்றார்.
நான்,
"என்னப்பா சொல்றீங்க, சான்சே இல்லையே, எங்கே பத்திரிகையக் கொடுங்க
பாப்போம்" என்று சொல்லி இதழை வாங்கினேன். கட்டுரையைப் படித்தேன்.
அத்தலையங்கம் கீழ்வருமாறு. (இளைஞர் முழக்கத்தின் இணையதள முகவரி www.mattru.com என்று அந்தப் புத்தகத்தில் கொடுத்திருந்தார்கள். அதற்கு லிங்க் கொடுத்து
வாசகர்களை அக்கட்டுரையைப் படிக்க வைக்கலாம் என்று பார்த்தேன். அந்த இணையம் செயல்பாட்டில்
இல்லை போலும், அதனால் நானே தட்டச்சிட்டு கீழே தருகிறேன். கீழ் வரும் கட்டுரை இளைஞர்
முழக்கம் 2013 பிப்ரவரி இதழின் தலையங்கமாகும்.)
இளைஞர்
முழக்கம் - தலையங்கம்
"இனி
விஸ்வரூபமாய் கிளம்பும்.."
இன்னும்
சில வருடங்களில் இந்தியாவிற்குள் பல நூற்றுக்கணக்கான தணிக்கை அமைப்புகள்
உருவாகும் ஆபத்து இப்போது உருவாகத் துவங்கியிருக்கிறது.
இந்தியா
ஒரு மதச்சார்பற்ற நாடு, மத சகிப்புத்தன்மையும், ஜனநாயகமும், சுதந்திரமும் கொண்ட
நாடு. வேற்றுமையிலும் ஒற்றுமை உள்ள நாடு என்ற பெருமை நாளைய தலைமுறைக்குப்
போய்ச்சேருமா என்று தெரியவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத சமூகமாக இந்தியச்
சமூகத்தை மாற்றுவதற்கான அரசியலை, மிக லாவகமாய் நிகழ்த்துகிறார்கள். சொந்த
பாரம்பரியங்களே, சுய பெருமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் என்ற பெயரில்
அடையாளங்களின் மீதான அரசியலை வன்மத்துன் செய்கிறார்கள் சில அரசியல் இயக்கங்கள்.
விஸ்வரூபம்
திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையொட்டி நடைபெற்றுள்ள
நடப்புகள், எதிர்கால இந்தியச் சமூகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற
கவலையும், விவாதமும் ஒரு சேர நம்முன் நிற்கின்றன. விவாதிக்காமல் விலகிச்
செல்லுதல் எந்த வகையிலும் நல்லதல்ல.
ஒரு
திரைப்படம் அல்லது எந்தவொரு படைப்பாய் இருந்தாலும், அது படைப்பாளியின்
கருத்தியலோடு இணைந்தது. படைப்பின் சிறப்பையும், படைப்பாளியின் பங்கையும்
தேவைக்கேற்ப சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது மிக அவசியமாகும். பாரபட்சமற்ற
விமர்சனமும், பாராட்டைப் போல் மிக இணையான முக்கியத்துவம் கொண்டதாகும். சமூகம்
குறித்து சிந்திக்கும் படைப்பாளிகளுக்கான, கலைஞர்களுக்கான அங்கீகாரத்தை சமூகம்
நிச்சயம் வழங்க வேண்டும். நடிகர் கமல்ஹாசன் அப்படியான ஒரு அங்கீகாரத்துக்கு
முழுத்தகுதி உள்ளவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட படைப்பாளி எனவும் கூற இயலாது.
1992ல்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, மதவெறிக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
"ஹேராம்", "என்னைப் போல் ஒருவன்", "அன்பே சிவம்"
ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகமயமாக்கலுக்கு எதிராகவும், மதவெறிக்கு எதிராகவும்,
மதச்சகிப்புத் தன்மைக்காவும் ஓங்கிக் குரல் கொடுத்த கலைஞர் நாத்திகப்
பிரச்சாரத்தையும் தன் திரைப்படங்களில் கொண்டு வந்த அவருடைய முயற்சி, பெரியார்
சிந்தனைகளின் வெளிப்பாடாகும். மத சகிப்புத்தன்மைக்கான கூட்டங்களிலும்,
அமைப்புகளிலும் நேரடியாகச் செயல்பட்டளவில் இயங்கியவர். அவருடைய படைப்பான
"விஸ்வரூபம்", இதை நீங்கள் வாசிக்கையில் எந்த வகையான புதுப்
பிரச்சனையைச் சந்திக்கும் என முன்கூட்டியே சொல்ல இயலவில்லை. அவர் எது செய்தாலும்
சரி என்று வாதிடுவது பகுத்தறிவல்ல. எனினும், தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஒரு
மாபெரும் கலைஞன் கமல்ஹாசன் என்பதையும், அவருக்காக தமிழகம் குரல் எழுப்ப வேண்டும்
என்பதையும் மறுக்க முடியாது. மேலும், அவரின் படைப்பை, அதன் கருத்தியலை விமர்சனம்
செய்யாமல் தடை செய்ய வேண்டும் என்று நேரடியாகக் கோருவதும் ஏற்புடையதாகத்
தெரியவில்லை. அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இதுவே பொருந்தும்.
ஒரு
படைப்பு ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவுக்கு எதிராக இருப்பதாக அவர்கள் கருதினால்,
அப்படைப்பை எதிர்க்கும் உரிமையும், அதைப் புறக்கணிக்கும் உரிமையும் அவர்களுக்கு
முழுமையாக உண்டு. எதிர்ப்பை ஒரு படைப்பாகவும் வெளியிடலாம். அதே நேரத்தில், இரு
பிரிவு மக்களுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து, ஒரு படைப்பை
உருவாக்கி, அவர்களிடேயே மோதலை உருவாக்கும் சூழல் ஏற்படுத்தி, சமூக அமைதிக்கும்
குந்தகம் விளைவிக்கும் நிலை உருவானால், அப்படைப்பை தடை செய்யவும் கோரலாம்.
தவறில்லை. ஆனால், இப்போது மோதல் புதிய வடிவத்தில் உருவாகிறது.
இஸ்லாம்
மக்களுக்கு விரோதமானது என்று கூறி அதைத் தடை செய்திட இஸ்லாம் அமைப்புகள் போராடி
வருகின்றன. இச்சூழலைப் பயன்படுத்தி இந்து மதவாத அமைப்புகள், தங்கள் சொந்த
நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, எதிரியாகக்
காட்ட இஸ்லாம் அமைப்போ அல்லது கிறிஸ்தவ அமைப்போ ஒரு ஊரில் இருக்க வேண்டும்,
அவர்கள் ஏதாவது செய்தால் போதும், பார்த்தீர்களா, நம்ம நாட்டில் வந்து அவங்க
இப்படிப் பண்ணுறாங்க, அனுமதிக்கலாமா? என்று இந்து மதவாத அமைப்புகள் தங்கள்
மதவாதச் செயலைத் தீவிரமாகக் கொண்டு செல்வதற்கான அரசியல் சூழலாக இதைப்
பயன்படுத்திவிடுகின்றனர். இப்போதும் அப்படித்தான், "ஆதிபகவான்"
படத்திற்கு தடை விதிக்க வேண்டுமாம், அது இந்துக் கடவுள்களை
கேவலப்படுத்துகிறதாம், ஏற்கனவே, "ராம்" என்று பெயர் வைத்து, அவரை
மனநோயாளியாக காண்பித்து விட்டார்களாம். இது காண்பிக்க வேண்டுமாம். எங்கள்
சாதிப்பெண்ணை, அந்தச் சாதிக்காரன் காதலிப்பது போல் எப்படிக் காட்டலாம், இதனால்
எங்க சாதிக்கு அவமானம் என நாளை வேறொருவர் சொல்லலாம். எங்க ஊரைப்பற்றி, இப்படி
எப்படிக் காட்டலாம் என மற்றொருவர் குரல் எழுப்பலாம். எல்லாரும் நான் பார்த்த
பின்னதான், படம் திரைக்கு வரணும்னு முடிவெடுத்தால் என்னவாவது?
இஸ்லாம்
அமைப்பிற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடவும், மக்களின்
பொதுப்புத்தியில் சில கருத்துகளை ஏற்றவும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த
துவங்கியுள்ளனர் இந்து மதவாத அமைப்புகள். இது நல்லதல்ல என்பதே நமது கவலை.
|
"இஸ்லாம்
மக்களுக்கு விரோதமானது என்று கூறி அதைத் தடை செய்திட இஸ்லாம் அமைப்புகள் போராடி
வருகின்றன" என்று ஒற்றை வரியில் கண்டிப்பாக இல்லாமல் செய்தியாகச் சொல்லிவிட்டு,
மீதி அனைத்துமே இந்து அமைப்புகளைக் கண்டித்தே இருப்பதை எனது தந்தைக்குச்
சுட்டிக்காட்டினேன்.
"ஆமாண்டா
யாருக்குமே தெரியாதத நீ கண்டுபிடிச்சு சொல்லிடே. உண்மையைத் தானேடா
சொல்லியிருக்காங்க" என்றார்.
"எது உண்மை? அதுசரி,
நான் சொன்னமாதிரி எதுவுமே வரவில்லைனு சொன்னீங்களே" என்றேன்.
கேட்
திறந்து, எனது தந்தையின் நண்பர் வந்தார், அவர் ஒரு கிறிஸ்தவர், ஏற்கனவே விஸ்வரூபம்
தடை செய்யப்பட்டது என்று கேள்விப்பட்டவுடன் இஸ்லாமிய அமைப்புகளை வசைபாடியவர்,
"கடல்" படத்திற்கு, கிறிஸ்தவர்கள் போராடியபோது, கிறிஸ்தவர்கள் பக்கம்
நியாயம் இருக்கிறது என்று முரண்பட்டு வாதிட்டவர். இப்போது கேட்டைத் திறந்து கொண்டு வந்தார்.
சரியான
சமயத்தில்தான் வந்திருக்கிறார் என்று நினைத்து, என் தந்தையை விடுத்து அவரிடம் இந்தத் தலையங்கத்தைக் காட்டி, இதைப் படித்து
பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள் என்றேன்.
"சார்,
வேண்டாம். அவன் முரண்பாட்டோ மொத்த உருவம், கண்டதக் கேப்பான்" என்றார் என் தந்தை.
என்
தந்தையின் எச்சரிக்கையை மீறி அந்த இதழை வாங்கிப் படித்தார் எனது தந்தையின் நண்பர். "சூப்பரா
எழுதியிருக்கார்" என்று சொல்லி என்னிடம் புத்தகத்தைக் கொடுத்தார்.
"இந்தக்
கட்டுரையை எதற்காக எழுதியிருக்கிறார்கள்?" என்று அவரிடம் கேட்டேன்.
"விஸ்வரூபம்
படத்தை தடை செஞ்சத எதிர்த்து எழுதியிருக்காங்க" என்றார்.
"யார்,
அந்தத் தடையை ஏற்படுத்தியது?" என்றேன்.
"இது
தெரியாதா உனக்கு, இஸ்லாமுக்கு விரோதமாக இருக்கிறதுனுதானே தடை வந்தது."
என்றார்.
"அப்ப
தடையை ஏற்படுத்தினவனத்தானே கண்டிக்கனும்" என்றேன்.
"ஆமாம். அதைத்தானே செஞ்சிருக்காங்க"
என்றார்.
"எங்கே,
இந்த முழு கட்டுரையில் "தடையை ஏற்படுத்தும் இஸ்லாமிய அமைப்புகளைக்
கண்டிக்கிறோம்" என்று ஒரு வரியைக் காட்டுங்கள்" என்று திரும்ப அவரிடம்
கொடுத்தேன்.
புத்தகத்தை
வாங்கித் துருவித் துருவிப் பார்த்தார்.
"சரி
சார், தேடியது போதும், இந்து அமைப்புகளை எத்தனை முறை
குத்திக்காட்டியிருக்கிறார்?" என்று கேட்டேன்.
"ஆரம்பிச்சுட்டான்
சார், இவன் வேலைய. அதான் அப்பவே சொன்னேன் வேண்டான்னு, அவன் விதண்டாவாதி சார்"
என்றார் எனது தந்தை.
மேற்கண்ட
விவாதங்களை மனக்கண் முன் ஓடவிட்டபோது, ஓசை வலைப்பூவில் "பகுத்தறிவின்
மதவாதம் - விஸ்வரூபம் (சிறுகதை)" நினைவுக்கு வந்தது. இந்த வகையில் ஓசை
ஒரு தீர்க்கதரிசி போல் என் மனக்கண் முன் தெரிந்தார்.
அந்தச்
சிறுகதையில், இங்கர்சால் வேலை செய்யும் பத்திரிகையின் ஆசிரியர், எழுதித்தரும்
இரண்டாவது கட்டுரையைப் போலவே இந்த "இளைஞர் முழக்கத்தின்" தலையங்கமும்
எனக்குப் பட்டது.
எனது தந்தை ஒரு முன்னாள் தி.க. அனுதாபி. எனது தந்தையின் நண்பர் ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட். ஆனால் இருவருக்குமே இப்போது அவற்றில் பெரிய பிடிப்பில்லை. இப்படிப்பட்டோர் இதைப் போன்ற கட்டுரையை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? இதைப் போன்ற
பிரச்சனையில் பலர் (சமுதாயம்) எனது தந்தையின் நிலையிலும், எனது தந்தையின் நண்பர்
நிலையிலுமே இருக்கின்றனர். இந்து
அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, எந்தப் படம் தான் தடை செய்யப்பட்டது? இந்து அமைப்புகளை இந்த விஷயத்தில் கண்டிக்க இப்போது அவசியம் என்ன? அவர்களின் குரலுக்குப் பயந்து "ஆதிபகவன்" படத்தைத் தடை செய்துவிடுவார்களா?
எப்போதுதான் உள்ளதை (உள்ளத்தை) மறைத்து சமூகத்தின் முன் தன்னை நல்லவர் (மதச்சார்பற்ற பகுத்தறிவுவாதி) என்று அடையாளம் காட்ட, இல்லாததைக் கற்பனை செய்வது நிற்கப் போகிறது?
எப்போதுதான் உள்ளதை (உள்ளத்தை) மறைத்து சமூகத்தின் முன் தன்னை நல்லவர் (மதச்சார்பற்ற பகுத்தறிவுவாதி) என்று அடையாளம் காட்ட, இல்லாததைக் கற்பனை செய்வது நிற்கப் போகிறது?