தலைப்பு ஒன்றும் விளங்கவில்லையா? விஷயத்தைச் சொல்லாமலே விளங்கவில்லையா என்று கேட்கிறீர்களே! என்கிறீர்களா?
"The Immortals of Meluha" என்பது கல்கத்தாவைச்
சேர்ந்த அமிஷ் திரிபாதி என்ற அறிமுக எழுத்தாளர் எழுதிய ஆங்கில நாவலாகும். Siva Trilogy என்ற தொகுப்பின் முதல்
நாவலான The
immortals of Meluha இந்தியா முழுவதிலும் பெரும் வெற்றிபெற்ற ஒரு படைப்பாகும். இந்த நாவலை இன்றுதான் படித்து முடித்தேன். படித்து முடித்ததும் பெரும் திருப்தி கொண்டேன். ஆகையால், இது குறித்து ஒரு விமர்சனம் எழுத வேண்டும் என்று எழுத விழைகிறேன்.
மெலூஹா என்றால் என்ன?
அது
சிந்து சமவெளி நாகரீகத்தின் பழைய பெயர் என்று அறிகிறோம். சுமேரிய இலக்கியங்களில் மெலூஹா
என்ற பெயர் அடிக்கடி காணப்படுவதாகவும் அறிகிறோம். பல அறிஞர்கள் அந்த இடம் ஹரப்பன்
நாகரிகத்தைக் குறிப்பதாகச் சொல்கின்றனர். அந்த காலத்தில் சுமேரியர்களுக்கும் ஹரப்பர்களுக்கும்
இடையில் பெரும் வணிகத் தொடர்புகள் இருந்தன. கி.பி.2200க்கும் முன்பு வழக்கில்
இருந்த சமேரிய இலக்கியங்களில் மெலூஹா என்பது கிழக்கிலிருந்ததாகக் (இந்தியா அல்லது சிந்து
சமவெளி) குறிக்கப்படுகிறது. தமிழ் (திராவிட) மொழியின் மேலகம் (உயர்ந்த நாடு அல்லது
மேல் உலகம்) என்ற வார்த்தை திரிந்து மெலூஹா ஆனது என்று பின்லாந்து அறிஞர்கள்
அஸ்கோவும் (Asko)
சிமோ
பப்போலாவும் (SimoPapola) கூறுகின்றனர்.
மெலூஹா என்பது சூரியவம்சிகளின் நாடு என்றும், புனிதமானவர்களின் நாடு என்றும்
நாவலில் சொல்லப்படுகிறது. இந்த நாடு, காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம்,
டில்லி, அரியானா, ராஜஸ்தான், குஜராத், பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானின் சில
கிழக்கு பகுதிகளை உள்ளடக்கியது. தேவகிரி என்பது மெலூஹாவின் தலைநகரம் ஆகும்.
மெலூஹாவின் எதிரிகள்
மெலூஹாவின் எதிரிகள் சுவதீப் நாட்டுக்காரர்கள்.
அவர்கள் சந்திரவம்சிகள், அந்த நாடு தனி நபர்களின் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.
அது, உத்தரகண்ட், உத்தரபிரதேஷ், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சிக்கிம்,
அசாம், மேகாலயா, பங்களாதேஷ், நேபால் மற்றும் பூட்டானின் சில பகுதிகளை
உள்ளடக்கியது. அயோத்தியா சுவதீப்புக்கு தலைநகரமாக விளங்கிற்று.
அடுத்தது, சந்திரவம்சிகளுக்கு உதவும் நாகர்களின்
நாடு, தண்டக வனம் என்றும் அழைக்கப்படும் அடர்ந்த காட்டுப்பகுதியாகும் அந்த நாடு.
இது மகாராஷ்டிரா, வடக்கு ஆந்திரவாவின் சில பகுதிகள், வடக்கு கர்னாடகத்தின் சில
பகுதிகள், சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் மத்திய பிரதேஷின் சில பகுதிகளை உள்ளடக்கியது.
பஞ்சவதி இந்த நாட்டிற்குத் தலைநகரமாகும்.
நாவலுக்கான பெயர்க்காரணம்
இம்மார்ட்டல்ஸ் (Immortals) என்பது இறவாதவர்கள் என்ற பொருளாகும்.
இந்து இலக்கியங்களில் வரும் (உயர்ந்த நாட்டில்
அதாவது மேலகத்தில்) சிவன், தக்ஷன், கணேசன், கார்த்திகேயன், பகீரதன், சூரபத்மன்
ஆகியோரை இணைத்து கற்பனையும் சாத்திர அறிவும் கலந்து ஆசிரியர் கதையைச் சொல்வதால் இந்த நாவலுக்கு
இந்த பெயர் "மேலகத்தின் இறவாதவர்கள்" (The Immortals of Meluha) வந்தது என்று நினைக்கிறேன்.
கதைக்களம்
மண்ணில் வாழ்ந்தவர்களிலேயே பெரும்
மன்னனாக மதிக்கப்படும் ராம பிரானால் பல நூற்றுண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட
சரியான முன்மாதிரி பேரரசாக நிறுவப்பட்ட நாடு மெலூஹா ஆகும். சூர்யவம்சிகளால் ஆளப்படும் அந்த
வல்லரசு, மெல்லச் சாகும் சரஸ்வதி நதியால் துயரத்திற்குள்ளானது. சந்திரவம்சிகளும்,
சபிக்கப்பட்டத் தோற்றம் உடைய நாகர்களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தீவிவாதச்
செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததும் மெலூஹாவின் துயரத்திற்கு ஒரு காரணமாக
அமைந்தது.
மெலூஹாவின் மன்னன் தக்ஷன், இந்தியாவிற்கு வடக்கே இருந்த
திபெத்திற்கு அங்கே வாழும் மக்களை
மெலூஹாவுக்கு வந்து வாழுமாறு நந்தி மூலம் தூது அனுப்புகிறான். அப்படி அழைக்கப்பட்டவர்களில்
பெரும் வீரரான சிவனும் ஒருவர், அவர் அங்கே கனங்களுக்குத் தலைவராக இருக்கிறார். (அங்கே
வாழ்ந்த மக்கள் கனங்கள் என்றே அழைக்கப்பட்டனர். அவர்களே சிவகனங்கள் என்று இன்று
அழைக்கப்படுகின்றர் என்று கொள்ளவும்) எப்போதும் போர் போர் என்று பிராகிரிதிகளுக்கு
எதிராகப் போர் செய்து கொண்டே இருந்த சிவன், இப்படிப்பட்ட அமைதியான தேசத்திலிருந்து
அழைப்பு வந்ததும் அதை ஏற்றுக் கொண்டு, தனது கனங்களுடன் மெலூஹாவிற்குச் செல்கிறார்.
அவர்கள் காஷ்மீரத்தின் ஸ்ரீநகருக்கு வருகின்றனர். அங்கே மெலூஹர்களின் தலைமை
மருத்துவச்சியான ஆயுர்வதி அவர்களை வரவேற்கிறாள். அங்கே எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஒரே நிறத்திலிருக்கின்றன. எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். மெலூஹர்களின் வாழ்வு முறையைக்
கண்டு கனங்கள் அதிசயிக்கிறார்கள்.
ஆயுர்வதி அங்கே வந்த கனங்கள் அனைவருக்கும்
சிவனுக்கும் ஒரு மருந்தைக் (சோமரசம்) கொடுக்கிறாள். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை நோயையும் கொண்டுவரக்கூடதல்லவா, அதற்கான முன்னெச்சரிக்கையாக வருபவர்களுக்கு மருந்து கொடுக்கப்படுகிறது. அதனால் அன்றிரவு எல்லா
கனங்களுக்கும் கடுமையான ஜூரம் அடிக்கிறது. அனைவரும் வேர்த்து
விறுவிறுத்திருக்கிறார்கள். சிவனுக்கு வேர்வை மட்டுமே வருகிறது, ஆனால் ஜூரம்
அடிக்கவில்லை. ஆயுர்வதி அனைவருக்கும் முதலுதவி செய்கிறாள். சிவனைக் கவனிக்க
வருகையில் அவரது தொண்டை நீல நிறமாக மாறியிருப்பதைக் காண்கிறாள். உடனே அவள்,
தரையில் மண்டியிட்டு, "எங்களைக் காக்க வந்த ஆபத்தாந்தவரே, நீலகண்டனே"
என்று விழுந்து வணங்குகிறாள். நீலத் தொண்டை உள்ள ஒருவர் வந்து, ஆபத்திலிருந்து
தங்களைக் காப்பார் என்பது மெலூஹர்களின் நம்பிக்கை.
மெலூஹாவின் தலைநகரான தேவகிரிக்கு சிவன் அழைத்துச்
செல்லப்படுகிறார். அங்கே மன்னன் தக்ஷனைச் சந்திக்கிறார். தக்ஷனும் அவரை நீலகண்டனாக
உணர்கிறார். ஆனால் படைத்தளபதி பர்வதேஷ்வர் அவ்வாறு நினைக்கவில்லை. நீலகண்ட
புராணத்திலும் அவருக்கு நம்பிக்கையில்லை. நந்தியுடனும், வீரபத்திரனுடனும் சுற்றித்
திரிகையில், அழகு மற்றும் புதிர் நிறைந்த மங்கை ஒருவளைச் சந்திக்கிறார். அவள்
அமைதியான, அறிவு ஒளிரும் முகத்தைக் கொண்டிருக்கிறாள். அவள் தக்ஷனின் மகளான, இளவரசி
சதி தேவியார் என்பதை சிவன் அறிகிறார். மேலும் அவள், அவளது முன் ஜென்ம
பாவங்களுக்காக தீண்டத்தகாதவளாக (விகர்மா) இருக்கிறாள் என்பதையும் அறிகிறார். சிவன்
அவளை நெருங்க முயலும்போதெல்லாம், சதி அதை தவிர்க்கிறாள். சதியைச் சந்திக்கும்போதெல்லாம் சிவன் ஒரு நாகனுடன் மோத வேண்டி வருகிறது.
தொடர்ச்சியாக சிவன் சதியின் இதயத்தை வெல்கிறார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைக்கையில், விகர்மா சட்டம் அவர்களைத் திருமணம்
செய்து கொள்ள தடை செய்கிறது. ஆகையால், அதுவரை தன்னை நீலகண்டன் என்று ஏற்றுக்
கொள்ளாத சிவன், திருமணத்திற்காக தன்னைத்தானே நீலகண்டனாக அறிவித்துக் கொண்டு,
விகர்மா சட்டத்தை ரத்து செய்கிறார். தக்ஷன் சதியை சிவனுக்கு திருமணம் செய்து
கொடுத்து மகிழ்கிறான். ஆனால், பர்வதேஷ்வர் சதிக்கு திருமணம் நடந்ததை நினைத்து
மகிழ்ந்தாலும், ராமனின் சட்டம் புறக்கணிக்கப்படுவதை நினைத்து வெறுக்கிறார்.
சிவன் தேவகிரியில் தங்கியிருக்கும்போது, மெலூஹாவிற்கு
எதிரான சந்திரவம்சிகளின் தீவிரவாதத் தாக்குதலை அறிகிறார். சில காலம் கடந்து,
மெலூஹாவின் தலைமை அறிவியலாளரான பிரகஸ்பதியை சந்திக்கிறார் சிவன். பிரகஸ்பதி,
சிவனையும், அரச குடும்பத்தையும் மந்தர மலைக்கு அழைக்கிறார். கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கான ஆராய்ச்சிக்
கூடமாக இருக்கும் மந்தர மலைக்கு அவர்களை அழைத்து, சோமரசம்
எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதைச் சொல்கிறார். அதனால்தான் மெலூஹர்கள் 300
வருடங்களுக்கு மேல் வாழ்வதாகவும் சொல்கிறார். இந்த சோமரசத்தை உற்பத்தி செய்வதற்கு,
பெரும் அளவில் சரஸ்வதி நதியின் நீர் தேவைப்படுகிறது என்பதையும் விளக்குகிறார்.
சிவன் இந்த மருந்தால் தான் தனது தொண்டை நீல நிறமாக மாறியது என்பதை உணர்கிறார்.
சிவனும் பிரஹஸ்பதியும் நல்ல நண்பர்களாகிறார்கள். அரச குடும்பம் தேவகிரிக்குத்
திரும்புகிறது.
சிவன் சதியைப் பார்த்த நாளிலிருந்தே ஒரு நாகனின்
தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறார். அரசகுடும்பம் மந்தர மலையை விட்டு
அகலும்போதும், அப்படி ஒரு தாக்குதலை அந்த நாகன் நடத்துகிறான்.
ஒருநாள் காலையில் பெரும் வெடிச்சத்தம் கேட்கிறது.
அது மந்தர மலையில் இருந்து வருவதாக அனைவரும் உணர்கிறார்கள். அங்கே சென்று
பார்க்கையில் அந்த இடமே வெடித்து சிதறிக் கிடக்கிறது. அறிவியலாளர்கள் அனைவரும்
மாண்டு போகிறார்கள். அவர்களுடன், பிரகஸ்பதியும் மாண்டு போகிறார். இதில் நாகர்களின்
கை இருப்பதாக சிவன் உணர்கிறார். அவர்களுக்கு உதவுவதும் ஊக்குவிப்பதும்
சந்திரவம்சிகள்.
தனது நண்பர் பிரகஸ்பதியின் இறப்பால் கோபமடையும்
சிவன், சந்திரவம்சிகள் மீது போர் அறிவிக்கிறார். படை சந்திரவம்சிகளின் நாடான சுவதீப்பை
நெருங்குகிறது. பெரும் போர் மூள்கிறது. சிவன் போரில் பல புது யுக்திகளைக்
கடைப்பிடிக்கிறார். இறுதியில் மெலூஹர்கள் வெற்றியடைகின்றனர். சந்திரவம்சி மன்னன்
பிடிபடுகிறான். பர்வதேஷ்வர் இப்போது சிவனை நீலகண்டனாக உணர்கிறார். தன் தந்தையை
மீட்க வரும் இளவரசி ஆனந்தமயி, சிவனின் தொண்டையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து,
தங்கள் நாட்டிலும் நீலகண்டன் வந்து தீங்கிலிருந்து தங்களை இரட்சிப்பார் என்ற
நம்பிக்கை இருக்கிறது என்பதை தெரிவிக்கிறாள். சிவன் குழம்புகிறார். சுவதீப்பைக் காண்கிறார். அது மெலூஹாவைப் போல் அல்லாமல் ஏற்றத்தாழ்வுடன் இருக்கிறது. பணக்காரன் மன்னனைவிட பணக்காரனாக இருக்கிறான். அதே வேளையில் பிச்சைக்காரனும் அந்த நாட்டில் இருக்கிறான். மெலூஹாவில் பிச்சைக்காரர்களே கிடையாது. மெலூஹாவில் கேளிக்கைகள் கிடையாது. ஆனால், இங்கே கேளிக்கைகள் நிறைந்து காணப்படுகிறது. சிவன் அயோத்தியில்
இருக்கும் ராமன் ஆலயத்திற்கு செல்கிறார். அங்கே அவர் அடிக்கடி சந்திக்கும்
வாசுதேவ் பண்டிட்டைச் சந்திக்கிறார். அவர் சில புதிர்களைச் சொல்கிறார். கோயிலை
விட்டு வெளியே வருகையில் சதி வெளியே நின்று கொண்டிருப்பதையும், ஒரு நாகன்
மரத்திற்குப் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதையும் கவனிக்கிறார். சிவன்
சதியைக் காக்க ஓடுவதோடு முதல் பாகமான The Immortals of Meluha முடிகிறது.
ரசிக்கத்தக்க பல சம்பவங்களை உருவாக்கி ஆசிரியர்
நாவலை சுவாரசியமாக்கியிருக்கிறார்.
குறிப்பாக, சிவன் விரும்பி, சதி விரும்பியும்
விரும்பாமலும் இருக்கும்போது, நடைபெறும் நாட்டியப் பயிற்சி, சிவனின் நடராஜ
கோலத்திலிருக்கும் பிரபஞ்சத்துடனான தொடர்பு, சதி தன்னை தீண்டத்தகாதவள்தான் என்று
விளக்குவது, சதியை ஏற்கனவே திருமணமான விதவை என்று காட்டியும், வாசகர்களை முகம்
சுளிக்காமல் ஏற்க வைப்பது. வாசுதேவ் பண்டிட்டுகளின் புதிர்கள், நாகர்களின் தோற்றம்
மற்றும் சில நல்ல பண்புகளை விவரித்தல். நாகர்களுடனான ஒரு சிறிய தாக்குதலில் தன்
மீது வீசப்பட்ட கத்தியை தாங்கி சதி வீழ்ந்ததும், சிவன் அவளுக்கு வருந்துவது, சதி
இறந்துவிடுவாளோ என்ற ஏக்கத்தை வாசகளர்களிடம் ஏற்படுத்துவது, சுவதீப்பை வெற்றி
கொண்டவுடன், தான் தவறு செய்துவிட்டோமோ என்று சிவன் உணர்வது. போன்ற இடங்களில்
ஆசிரியர் ஜெயித்திருக்கிறார்.
நாவலைப் படிக்கும்போதே, நமது புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளெல்லாம்
உண்மையில் இப்படித்தான் நடந்திருக்குமோ என்று எண்ண வைக்கிறார் ஆசிரியர்.
புராணங்களும், பழைய நம்ப முடியாத கதைகளும், நமது பழம்பரம்பரையினரின் நினைவுகளை
உள்ளடக்கியது, அதில் பல உண்மைகள் அடங்கியிருக்கும் என்பதை நம்மை ஏற்க வைக்கிறார்
ஆசிரியர்.
இந்த நாவல் வெளியாகி விற்பனையில் பெரும் சாதனை
செய்திருக்கிறது. இதுவரை நாற்பது கோடி ரூபாயை எட்டியிருக்கிறது இந்த நாவலின்
விற்பனை.
இதைப் படித்த தமிழர்கள் பலருக்கு, இதுபோன்ற
நாவல்கள் தமிழில் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் ஆசிரியர் என்றே நான்
நம்புகிறேன். அடுத்த பாகமான "The Secret of Nagas" நாவலையும்
வாங்கிவிட்டேன். இனி தான் படிக்க வேண்டும்.