திராவிடத்தையே (ஆரியத்தையும் சேர்த்துத்தான்)
அந்நியமென்று நினைக்கும் "நாம் தமிழர்" கட்சிக்கு, இப்போது இஸ்லாமியப்
பிரிவினைவாதி யாசின் மாலிக் சகோதரனாகத் தெரிகிறார். தங்கள் கட்சிக் கூட்டமொன்றில் (வீழ்வோம் என்று நினைத்தாயோ! இன எழுச்சி கருத்தரங்கமாம்)
யாசின் மாலிக்கை அழைத்து பேசவும் வைத்திருக்கிறார் சீமான். யாசின் மாலிக் அந்தக்
கூட்டத்தில் என்ன பேசினார்? "இலங்கையில் ஆயிரக்கனக்கான அப்பாவி
தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும்
விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து
அரசுக்கு பயமா? என்று எண்ண தோன்றுகிறது.
ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது (ஏன் இந்தியாவை விட ஜனநாயக முகமாக பாகிஸ்தானும் சீனாவும் தெரிகிறதா?). தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை.
காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் (மக்களா? தீவிரவாதிகளா? Sleeper Cellகளா?)ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தால் விடுதலை போராட்டத்தை முடக்கிவிட முடியாது. போராட்டத்தில் மனிதர்கள் கொல்லப்படலாம். ஆனால் தத்துவத்தையும், கொள்கைகளையும் அழித்துவிட முடியாது." என்று பேசியிருக்கிறார்.
யாசின் மாலிக் போன்றோரின் தத்துவம்தான் என்ன? அவர் சொல்வதுபோல
நம்முடைய (இஸ்லாமிய பிரிவினைவாதிகளுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும்) வலிகள்
ஒன்றா? சுதந்திரத்திற்கு முன் காஷ்மீரத்தில் எத்தனை பண்டிட்டுகள் இருந்தார்கள்?
இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள்? எத்தனை பண்டிட்டுகள் அங்கே படுகொலை செய்யப்பட்டார்கள்?
அவர்களுக்கு ஆதரவாக ஒரு கிளர்ச்சியேனும் நடைபெற்றதுண்டா? அவர்களின் எண்ணிக்கை
குறைந்ததற்கு காரணம் இந்திய அரசா? யாசின் மாலிக் போன்றோரா? இன்றும் பண்டிட்டுகள்
திரும்பி வந்தால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டுகின்றனரே! பண்டிட்டுகள் காஷ்மீரத்து
மண்ணின் பூர்வகுடிகள் இல்லையா? இவ்வளவுக்கும் இந்தியாவின் முதல் பிரதமரே ஒரு
காஷ்மீரத்து பண்டிட். இருந்தும் ஒன்றும் கிழிக்க முடியவில்லை.
"நாம் தமிழர்" கட்சி கூட்டத்தில்
அரங்கேறிய இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆயிரம் தான் கடுமையாகப் பேசினாலும் சீமான் தேசிய நீரோட்டத்தில் இருக்கிறார் என்றே பலரும்
நினைக்கையில், தங்கள் கட்சி கூட்டத்திற்கு யாசின் மாலிக்கை அழைத்து, தனது
எண்ணத்தைத் தெளிவாகக் காண்பித்திருக்கிறார் சீமான்.
யாசின் மாலிக், காஷ்மீரத்தைத் தனியாகப் பிரித்துக்
கேட்கும் பிரிவினைக்காரர், அதேபோல், சீமானும் தமிழகத்தைத் தனியே பிரித்துக்
கேட்கும் பிரிவினைக்காரராகப் போகிறார்.
ஈழம் என்று பேசினாலே, அடுத்து தனித்தமிழகம் என்று
கேட்பார்களோ என்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்தின் வாய்க்கு
சரியான அவலைத்தான் கொடுத்திருக்கிறார் சீமான்.
தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
–மகாகவி சுப்பிரமணிய பாரதி
ஏன் ஐயா பாரதியின் பாடலைப் பயன்படுத்தி (கட்சிக் கூட்டத்திற்கு), பிரிவினைவாதியை உங்கள் கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள்?
சீமான் போன்றோர் பெரும்பாலும், அரசியல் ஆதாயத்துக்காகவும், பொருளாதார மேம்படலுக்காகவும்
மட்டுமே ஈழம் கோருகின்றனரோ என்ற அதிருப்தியும் மக்களிடம் ஏற்பட இது வழிவகுத்திருக்கிறது. இப்படி
யாசின் மாலிக் போன்றோரை அழைப்பதால் தனி ஈழம் அமைந்து விடும் என்று நினைக்கிறாரா
சீமான்? இல்லவே இல்லை. தன் தைரியத்தைக் காட்டும் விதமாக ஸ்டன்ட் அடிக்கிறார் ஃபிலிம்
பார்ட்டி. என்னதான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் போட்டாலும் வெளியே வந்து
சிம்ம கர்ஜனை செய்ய முடிகிறதல்லவா? பிறகு எப்படி வராது இந்த தைரியம்?
தானாக தனி ஈழம் அமைந்தாலும், அதை அமைக்க விடமாட்டேன்
என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் இவர் போன்றோர்.
என்று "நாம் தமிழர்" சட்டசபைத் தேர்தலையோ,
நாடாளுமன்றத் தேர்தலையோ தனியாகத் (இதுவரை பாமக இருந்ததைப் போல அல்லாமல்) தேர்தலைச்
சந்திக்கின்றனரோ, அப்போது அவர்களின் பலம் என்ன? (நாம் தமிழர் கட்சியின் மீது
மக்களுக்கு சிறிது நம்பிக்கை இருந்தது என்னவோ உண்மைதான்) எத்தனை மக்கள் இவர்களை
நம்புகின்றனர் என்பது தெரியும்.
ஆனால், தங்களுக்கு பலம் இல்லை என்று தெரிந்தால்,
வசதியாக இந்திய ஜனநாயகத்தில் (தேர்தலில்) எங்களுக்கு நம்பிக்கையில்லை, தேர்தலைச் சந்திக்க
மாட்டோம், பின்னிருந்து வேலை செய்வோம், மறைந்திருந்து வேலை செய்வோம் என்று
சூளுரைப்பார்கள். எங்களால்தான் பெரிய கட்சி தோற்றது, திராவிடக் கட்சி தோற்றது
என்பார்கள்.
இவர் போன்ற பாதி புரட்சியாளர்கள் தீவிரவாதிகளே! பயங்கரவாதிகளே!
அந்தப் பட்டியலில் இடம்பெறப் போகிறாரா செபஸ்டியன் சீமோனும்?
அடுத்து அல்கைதாவில் இருந்து ஆளைத்தேடுங்க நாம்
தமிழர்களே…