23 Mar 2012

பொதுவுடைமை! தனிவுடைமை!

        எனது நண்பர் ஒருவர் அச்சக உரிமையாளர். அவர் என்னை அலைபேசியில் அழைத்தார். "என்னவென்று" கேட்டேன். "ஒரு நண்பருக்கு ஒரு மென்பொருள் நிறுவித் தர வேண்டும்" என்று கேட்டார். நான் "ஆகட்டும் சார்! இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன்." என்றேன்.

        சிறிது நேரம் கழித்து நான் அவர் அச்சகத்திற்குச் சென்றேன். அங்கே அவரது நண்பர் இருந்தார். அவரை எனது நண்பர் "தோழர்' என்றழைத்தார். என்னவென்று விசாரித்ததில் அவர் ஒரு நாத்திக இயக்கதைச் சார்ந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. "சார்! அவர் கம்யூனிஸ்டா என்று விசாரித்தேன்".
"அப்படி இல்லை அவர் ஒரு தொழிலாளர் இயக்கத்தைச் சார்ந்தவர். அந்த இயக்கத்தில் ஒரு பதவியில் இருக்கிறார் மற்றபடி கட்சி அப்படி இப்படி என்றெல்லாம் இல்லை" என்று பதிலளித்தார் என் நண்பர்.

        அவர் வீட்டிற்குச் சென்றோம். மென்பொருளை நிறுவினோம். அப்போது எனது நண்பரும் அவர் நண்பரும் உரையாடியதில் எனக்கு ஒரு பொருள் கிடைத்தது போன்ற உணர்வு. நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கிறுக்குகிறேன். "சரியோ! தவறோ! யாமறியோம்"

        கூடங்குளம் அணுஉலை சம்பந்தமாக பேசிக்கொண்டார்கள். "அணு மின்சாரம் தேவை" என்றார் என் நண்பர். "தேவையில்லை. அணுவும் தேவையில்லை, அனலும் தேவையில்லை, காற்றும், சூரியசக்தியும் போதுமென்றார்" என் நண்பரின் நண்பர்.

        "முதலாளித்துவம் அப்படி ஒன்றும் மோசமானதில்லை. நம்மை அதுதான் காக்கின்றது. நமக்குப் பிழைப்புத் தருகின்றது" என்றார் என் நண்பர். "ஐயகோ! முதலாளித்துவம் பெருங்கொள்ளை, பெருமுதலாளிகளின் சூதாட்டமே முதலாளித்துவம். ஆகவே, சோசலிசமே ஆகச்சிறந்தது" என்றார் என் நண்பரின் நண்பர்.

        "சரி நண்பா! முதலாத்துவத்தைவிட சோசலிசமே சிறந்தது என்கிறாய் நீ. சிறு உதாரணம் கூறுகிறேன். கேள்." இது என் நண்பர்.

 "என்ன சொல்" இது நண்பரின் நண்பர்

"முதலாளிகள் பல பேர், எட்டு மணிநேரம் தொழிலாளிகளைப் பிழிந்து எடுத்தாலும். அந்த எட்டாவது மணிக்குப் பிறகு ஆகச்சிறந்த சோஷலிசவாதிபோல் அந்தத் தொழிலாளியை அருகே அணைத்து குசலம் விசாரிக்கிறான். அதை நானே என் கண் எதிரே கண்டிருக்கிறேன்."

"ஆனால் உன்னைப் போல சோசலிசம், கம்யூனிசம், கம்யூன், பொதுவுடமை, சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி என்றெல்லாம் பேசுபவர்கள் தொழிலாளர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைச் சற்றே சிந்தித்துச் சொல்ல முடியுமா?" என்றார் என் நண்பர்.

"அப்படி என்ன செய்துவிட்டார்கள்?" என்றார் என் நண்பரின் நண்பர்.

"ஏன் மற்றவர்களை இழுக்க வேண்டும். உன்னைக் கேட்கிறேன். நீ உன் அப்பார்ட்மெண்ட் காவலாளியிடம் எப்படி நடந்து கொண்டாய், நீ சோசலிசவாதிதானே! 'ஏ வாட்ச்மேன்! என்ன செய்து கொண்டிருக்கிறாய்! வேலையை ஒழுங்காகச் செய்! உனக்கு எதற்காகச் சம்பளம் கொடுக்கிறோம்.' இது நீ உதிர்த்த சொற்கள்தான். நீ சோசலிசவாதி. என்னைப் போன்ற... , ஐயோ! சாரி!.... நீ அறிவாளி அல்லவா...... இரு...... அதாவது உன் எண்ணப்பபடி என்னைப் போன்ற கேடுகெட்ட முதலாளித்துவவாதி (அச்சக உரிமையாளர் ஒரு முதலாளித்துவ்வாதியா! தோழர்களே!) கூட என்ன சொல்வான் தெரியுமா? "என்ன சார்! கொஞ்சம் பாத்துக்குங்க சார்! உங்கள நம்பித்தானே நாங்க நிம்மதியா தூங்குறோம்" என்றுதான் சொல்வான்."

"ஆனால், தோழன் என்று கருதும் உன்னைப் போன்ற பொதுவுடமைவாதிதான் முதலாளிகளுக்கெல்லாம் முதலாளியாய்த் திரிகிறான். அவனைத் தட்டிக்கேட்க ஆளில்லை. அவனைத் தவிர உலகத்தில் வேறு அறிவாளியே கிடையாது. அவன் மூன்றாவது பெயிலாகியிருந்தாலும் கூட, அவன் பொதுவடைமைவாதி என்ற ஒரே காரணத்தால் எம்.பி.ஏ. படித்தவர்கள்கூட அவனிடம் பிச்சை எடுக்க வேண்டும். அந்த அளவுக்கு சோசலிசவாதி (அ) நாத்திகவாதி என்ற முத்திரையை ஏந்திக் கொண்டால் மெத்தப் படித்த மேதாவி ஆகிவிடலாம்." என்றார்.

        என் நண்பரின் நண்பர் "நீ மேலோம்பொதுவாக சிறு சிறு விஷயங்களைப் பார்க்கிறாய். சோசலிசம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா! தோழா! நானும் நீயும்  சோசலிசத்தை வெளியில் இருந்து பார்க்கிறோம். அதனால் தான் அது உனக்கு அந்நியமாகத் தெரிகிறது. உள்ளே கரைந்தால் தான் அதன் ஆழம் புரியும்." என்றார்.

           நான் கிறுகிறுத்துப் போய் கிறுக்காவதற்கு  முன், யாரிடமாவது சொல்ல வேண்டுமே என்றே இங்கே கிறுக்கியிருக்கிறேன்.