ஒரு நாள் ஒரு மலையாளி நண்பர் என் அலுவலகத்திற்கு வந்தார். தன் மகனுக்கு ஒரு பயோ-டேட்டா அடிக்க வேண்டும் என்றார். அதை நான் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போதே, அவர் "இன்னும் சில வேலைகள் உள்ளன. என்னுடைய சில வீடுகளுக்கு சிலர் வாடகைக்கு வந்துள்ளனர். அதற்கான ஒப்பந்தங்களைத் தட்டச்சு செய்ய வேண்டும்." என்றார்.
"சரி சார்! கண்டிப்பாக நான் தட்டச்சு செய்து தருகிறேன்" என்றேன்.
"இப்போது கவர்மெண்ட், ஒரு Form-ஐக் கொடுத்து வாடகைக்கு வந்திருப்பவர்களின் விபரங்களை நிரப்பித் தருமாறு கேட்கின்றனர்" என்றார்.
நான் "அப்படியா சார்! எதற்காக அப்படிக் கேட்கின்றனர்" என்றேன்.
"இப்போதுதான் ஆங்காங்கே திருட்டுகள் நடக்கின்றனவே." என்றார்.
"அதற்காக" என்றேன்.
"இல்லை. வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் நிறைய பேர் ஆங்காங்கே வாடகைக்கு அமர்ந்து கொண்டு திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை மிகவும் சிரமப்படுகின்றது. ஆகையால், இப்படி ஒரு லிஸ்ட் தயார் செய்து கொண்டால். திருடர்களைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாமே." என்றார்.
அப்படியே வங்கிக் கொள்ளைகள் சிலவற்றையும், இன்னும் சில திருட்டுகளையும் பட்டியலிட்ட அவர், அப்படித் திருடுபவர்களிடம் நிறைய ஆயுதங்கள் இருப்பதாகவும் சொன்னார். நானும் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தேன்.
"இப்படியே போனால் வடக்கே இருந்து வருபவர்களுக்கு விசாதான் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது" என்றார்.
"என்ன சார்! அப்படிச் சொல்றீங்க. நாமளும் அவர்களும் வேறு வேறு நாடுகளில் உள்ளவர்கள் போல் சொல்றீங்களே" என்றேன்.
"கிட்டத்தட்ட அப்படிதான் சார்! அவன் அங்கேயிருந்த வர்றதே இங்கே கொள்ளையடிக்கத்தானே. ஏழையா இருந்தா சின்ன திருட்டா செய்யுறான். கொஞ்சம் பணம் வச்சிருந்தா வட்டிக்கடை, நகைக்கடைன்னு போட்டுக் கொள்ளையடிக்கிறான்" என்றார்.
"சார்! இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம் சார்!" என்றேன்.
"வந்தவனுங்க எல்லாம் நல்லா வீடு கட்டி சந்தோஷமா இருப்பானுங்க. நம்மதான் சார் அல்லாடனும். அவன் வேலையே செய்யாம சம்பாதிப்பான். நாம கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும் சம்பாதிக்க முடியாது" என்றார்.
"சார்! கஷ்டப்பட்ட காசு நல்லதச் செய்யும், கஷ்டப்படாம வந்த காசு அல்லதைச் செய்யும்" என்றேன்.
அந்த சமையத்தில் வேறொரு வாடிக்கையாளர் வர. அவரிடம் என்ன வேலை, எப்படிச் செய்ய வேண்டும் என்ற விபரங்களைக் கேட்டேன்.
அதற்குள் மலையாளி நண்பர், "சரி சார்! நான் ஹாஸ்பிடலுக்குப் போகணும், சுகர் இருக்கு. பிளட் பிரஷர் வேற என் வேலைய கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுக் கொடுத்திடுங்க சார்!" என்றார்.
"உங்கள் வேலை முடிந்துவிட்டது சார்!" என்று தட்டச்சு செய்ததை அச்செடுத்துக் கொடுத்தேன்.
"சார்! இன்னும் நாலு வீட்டு ஒப்பந்தம் அடிக்கணும் சார்! மறந்துடாதீங்க என்றார்"
"நான் கண்டிப்பாக" என்றேன்.