4 Apr 2012

தாயகம் காப்பது கடமையடா


ஒரு நணபர் வந்தார். அவர் ஒரு மலையாளி. பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது "ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று பல பேர் பேசக் கேட்டிருப்பீர்களே! அதன் அர்த்தம் தெரியுமா?'' என்றார்.
நான் சொன்னேன் "சாவு ஆறு வயதிலும் வரும், நூறு வயதிலும் வரும். பாரபட்சம் பார்க்காது. வந்தே தீரும் அதுதானே அர்த்தம்" என்று.

"இதை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. நான் உங்களை வேறு மாதிரியானவராக அல்லவா பார்த்தேன்" என்றார்.
"அதுதானே அர்த்தமாக இருக்க முடியும். வேறு ஏதாவது இருக்கிறதா என்ன?' என்றேன்.
"மகாபாரதம் படித்திருக்கிறீர்களா?" என்றார்.
"ஏதோ மேலோட்டமாக" என்றேன் தயங்கலாக.
"அதானே, நம்ம மக்கள் என்னைக்குத்தான் இதையெல்லாம் படிக்கப் போறாங்களோ. அதை ஒரு இலக்கியம்னு நினைச்சாவது படிக்க வேண்டாமா?" என்றார்.
"இல்லை, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்" என்றேன்.
"இருக்கிறது. மகாபாரதப் போர் துவங்கப்போகும் சமயம். குந்தி தேவி கர்ணனுக்காக பரந்தாமனிடம் உயிர் பிச்சைக் கேட்கிறாள்."
"இல்லை அர்ஜூனனுக்காக கர்ணனிடம் குந்தியல்லவா உயிர்ப்பிச்சைக் கேட்டாள்." என்றேன்.
"அதுவும் உண்டு. இதுவும் உண்டு, மீதியைக் கேளுங்கள்" என்றார்.
"சரி" என்றேன்.
"அப்படி குந்தி, பரந்தாமனிடம் கர்ணன் குறித்து கேட்கும் போது, பரந்தாமன் 'அத்தை, முடிந்த போன கதையை நீ மறுபடியும் கேட்கலாகாது. நீ பெற்றதில் எவராவது ஒருவர் மாள வேண்டும் என்பது விதி. அதற்காகத்தானே நான் அர்ஜூனனுக்காக கர்ணனிடம் பேசச் சொன்னேன். இனி, கர்ணன் உன் பிள்ளைகளோடு சேர்ந்து ஆறாக (ஆறு பேராக) இருந்தாலும் சாவான். அல்லது கௌரவர்களோடு சேர்ந்து நூறாக இருந்தாலும் சாவான்' என்றான் அதுதான் பேச்சுவழக்காக ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று மாறியது" என்றார்.
அவர் சொன்னது, மெய்யோ, மெய்யல்லவோ, நான் புதிய சங்கதியை அன்று தெரிந்து கொண்டேன்.
மனதில் "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா" பாடல் ரீங்கரிக்கிறது.