16 Jun 2012

உலகில் சிறந்தது கம்யூனிசமா?

        ஜனநாயகத்தைவிட சிறந்தது சோசலிசம், சோசலிசத்தைவிட சிறந்தது கம்யூனிசம். அது ஒரு பொன்னுலகமாக இருக்கும் எனச் சொல்லும் கம்யூனிஸ்ட்களே! இன்றைய மக்கள் சீனத்தின் நிலை என்ன?


        சைக்கோ சீரியல் கில்லருக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனை, வர்க்க எதிரிக்கு உடனே மரண தண்டனை. இது தான் மக்கள் சீனத்தின் நியாயம், தர்மம். ஜனநாயகம் பேசினால் காலத்திற்கும் வீட்டுக்காவல் (பெயர் தெரியும் அளவுக்கு பிரபலமாக இருந்தால் மட்டுமே அந்த பாக்கியம். இல்லையேல் சத்தமில்லாமல் சோலியை முடித்து விடுவார்கள். நமது கேரள கம்யூனிஸ்டுகள் ஒத்துக்கொள்வது போல) இதுவெல்லாம் பழைய கதைகள். இப்போது புதிய கதை. இன்று தினமலரில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு.

       
            பீஜிங் : சீனாவில், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள, அபராதம் செலுத்தாத காரணத்தால், இளம் பெண்ணுக்கு, ஏழாவது மாதத்தில் அரசு அதிகாரிகள், கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர்.

            உலகிலேயே சீனாவில் அதிக ஜனத்தொகை உள்ளதால், அந்நாட்டில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை உள்ளது. மீறி பெற்றுக் கொண்டால் கடும் அபராதம் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

இதன் மூலம் சீனாவில் ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் ஷான்சி மாகாணத்தை சேர்ந்தவர், பெங் ஜியாமி. முதல் குழந்தை உள்ள நிலையில், இந்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை உருவானது. இதை கேள்விப்பட்ட சுகாதார மைய அதிகாரிகள், அவரை அபராதம் செலுத்த வேண்டும் அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.

                        பெங்கின் கணவர் டெங் ஜியுவான். இரண்டாவது குழந்தைக்கு ஆசைப்பட்ட டெங், அபராதம் கட்ட முயற்சித்தார். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள, 3.5 லட்ச ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். உரிய காலத்தில் அவர் இந்த அபராதத்தை கட்டாத காரணத்தால், கடந்த 2ம் தேதி, உள்ளுர் சுகாதார அதிகாரிகள், பெங்கை, வலுகட்டாயமாக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.

                        அங்கு அவருக்கு பிரசவ ஊசி போட்டு, ஏழு மாத சிசுவை வெளியே எடுத்தனர். சிசு வெளியே வந்ததும், அதன் தலையில் ஊசி போட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவத்தை கண்டு பெங் கதறி அழுதார்.

                        இந்த சம்பவத்துக்கு சீன மனித உரிமை இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளிநாட்டு மனித உரிமை அமைப்பினர் குறிப்பிடுகையில், "ஹிட்லர் காலத்தில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை' என்றனர்.

- நன்றி தினமலர் 16.06.2012

கம்யூனிசம் பேசும் நமது தோழர்கள் இதற்கும் தக்க பதில் வைத்திருப்பார்கள். தர்க்க சாஸ்திரிகளும் தோற்றுவிடுவார்கள் இவர்களிடம்.

"உங்க வீட்ல என்ன குழம்பு வைக்கணும், என்ன பொருள் வாங்கணும்றதா அமெரிக்கா காரன்தாங்க முடிவு பண்ணுவான். அதுதாங்க சந்தை பொருளாதாரம்னு" வாய் கிழிய பேசுவாங்க. ஆனா! இவங்க ஆட்சி நடக்குற நாட்டுல, நான் எத்தனை குழந்தை, எப்ப பெத்துக்கணும்னு எல்லாம் இவங்கதான் முடிவு செய்வாங்க. குழந்தை பெத்துக்கவே இவங்க கிட்ட கேட்டுத்தான் பெத்துக்கணும். அதுவும் பெத்துக்க அனுமதி கிடைச்சா 3.5 லட்சம் லஞ்சமா கொடுத்துட்டுதான் பெத்துக்கணும். பெட்ரோல் வேணுமா? அனுமதி வேணும். இணையதளம் பார்க்க வேண்டுமா? அனுமதி வேண்டும். அதுவும் Google, Facebook போன்ற முக்கியமான வலைத்தளங்களை தடை செய்துவிடுவார்கள். என்னே உங்கள் பொன்னுலகம்.

தற்போதைய சீன அதிபர் ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் நான் கம்யூனிச பொன்னுலகிற்குள் நுழையும் கடைசி படிக்கட்டில் நிற்கிறோம் என்று பேசியிருந்தார். பெட்டி செய்தி காட்டுகிறதே கம்யூனிச பொன்னுலகத்தின் நிலையை. எங்களுக்கு வேண்டாங்க உங்க கம்யூனிசம்.