18 Jun 2012

கலாம் என்றால் கலகமா?

நமது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் குறித்து அடிக்கடி தேவையற்ற விமர்சனக் கருத்துகள் வரும்போது கேட்க கவலையாக இருக்கிறது. அரசியல்வாதிகள் அவர்களாகவே அவரது பெயரை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு பரிந்துரைக்கின்றனர், அதை எதிர்த்து சிலர் அவரைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றனர்.
இது வரை நம் நாட்டில் அந்த நாற்காலியை அலங்கரித்தவர்களில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைத் தவிர்த்து, வேறு யாரும் அப்துல் கலாம் அவர்களுக்கு இணையாகச் சொல்லும் அளவுக்கு இருந்ததில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர் நமது நாட்டுக்கு கிடைத்த பெரிய கௌரவம். நமது நாட்டின் ஜனாதிபதி பதவிக்கே ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்தவர் கலாம் என்றால் அது மிகையல்ல.
இடதுசாரிகள் அவரைப் பற்றி வெளியில் ஒரு விதமாகவும் கட்சிக்குள் ஒரு விதமுமாகவே கூறிவந்திருக்கிறார்கள். அவரைப் பற்றித் தேவையில்லாத விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் அவர்களின் பங்கு அலாதியானது.
"அவர் விஞ்ஞானியே அல்ல, அவர் ஒரு டெக்னிஷியன்தான்" என்பது அவர்களது நீண்ட நாளைய விஞ்ஞானப் பார்வை. அப்படி வந்த விமர்சனங்கள் இப்போது முற்றி கீழ்கண்டவாறு நமது அரசியல் தலைவர்களைப் பேச வைக்கிறது.
கடந்த, 15ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நிருபர்களைச் சந்தித்த போது, ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு குறித்த கேள்விக்கு, "கலாம் என்றாலே கலகம் என்று பொருள்" என, பதிலளித்தார். (நன்றி: தினமலர்)
மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் ஆதரவு என்று பேசும் இந்த செக்யூலர் அரசியல் கட்சிகள் இப்போது ஏன் அந்த சிறுபான்மையினர் ஆதரவை கடைப்பிடிக்க மாட்டேன் என்கிறார்கள்? குறைந்தபட்சம் தமிழக அரசியல் கட்சிகளாவது அவரை ஆதரிக்க வேண்டாமா? அவர் அப்படி என்ன கலகம் செய்துவிட்டார்?
ஐயா! அரசியல்வாதிகளே! அவர் உங்களைவிட அப்படியென்ன கலகம் செய்துவிட்டார்? உங்கள் பார்வையில் நல்லவர்கள் எல்லாம் கலகக்காரர்கள.

இனம், மொழி, மதம் இப்படி என்னென்ன பிரிவுகள் மக்களைப் பிரிக்குமோ, அதையெல்லாம் கடந்து அரசியல்வாதிகள் அவரை ஆதரிக்க வேண்டும் என்பதே பலர் விருப்பம். இது மக்கள் பங்கெடுக்கும் தேர்தலாக இருந்தால் வேறு விஷயம். நம் அரசியல்வாதிகள் கையிலல்லவா இந்த தேர்தல் இருக்கிறது. தங்கள் சுயலாபங்களுக்காக அல்லவா ஓட்டளிப்பார்கள். தங்களுக்கு லாபம் என்றால் மீண்டும் பிரதீபா பாட்டிலைக் கூடத் தேர்ந்தெடுப்பார்கள். எல்லாம் தலையெழுத்து.