6 Aug 2012

பைக் பார்க்கிங்


ஒரு முரட்டு மனிதர் அந்த பள்ளியின் காம்பொண்டுக்குள் டூ வீலரை ஓட்டிச் சென்றார். பள்ளி விடும் நேரம் அது. ஆகவே, பெற்றோர் வரிசையாக தங்கள் தங்கள் வண்டிகளுடன் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். அவரும் தன் பேத்தியை அழைத்துப் போகவே வந்திருந்தார்.

வண்டியை பொறுமையாக ஓட்டிச் சென்று வாகனம் நிறுத்துமிடத்தில், குழந்தையை அழைத்து வந்தவுடன் சிரமப்படாமல் உடனே எடுத்துச் செல்லும் வகையில் வண்டியைத் திருப்பி வைக்க முயன்றார்.


பின்னால் வரிசையாக வண்டிகள் நிற்கவே மிகவும் சிரமப்பட்டார். பின்னால் வந்த ஒரு வாலிபர் "சீக்கிரம் சார்! அப்படியே நேராதான் விட்டுட்டுப் போறது. திருப்பி திருப்பி நின்னுகிட்டு யாரையும் உள்ள வர விட மாட்டேங்கிறீங்க'

முரட்டு மனிதர் முறைத்தார், "இந்தக் கூட்டத்துல குழந்தையும் வச்சுட்டு எப்படி திருப்புறது. திருப்பி நிறுத்திடலான்னா விடமாட்டீங்களே'' என்று அதட்டினார். மனதுக்குள் "சோம்பேறிப் பசங்க! இவனுங்க திருப்பி வைக்கலைன்னா நானும் திருப்பி வைக்கக் கூடாதா?'' என்று திட்டிக் கொண்டார்.

ஏப்படியோ சிரமப்பட்டு வண்டியைத் திருப்பி நிறுத்திவிட்டார். பின்னால் வந்தவர்கள் அனைவரும் அவரை ஏதோ வேற்றுகிரகவாசியைப் போல் பார்த்துவிட்டுச் சென்றனர்.

பள்ளியின் உள்ளே சென்று குழந்தையைத் தேடினார். காணவில்லை. குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் இடமெங்கும் தேடினார். காணோம். திடுக்கிட்டார். கைபேசியில் வீட்டுக்கு ஒரு கால் போட்டு கேட்டுவிடலாம் என்றால், கைபேசியை வண்டியில் வைத்துப் பூட்டியது நினைவுக்கு வந்தது. பதட்டத்துடன் வண்டிக்கு ஓடி வந்தார். குழந்தை வண்டியிலேயே அமர்ந்துகொண்டு "ஹாய் தாத்தா'' என்றது.

"என்னம்மா, இப்படி பண்ணீட்டே. தாத்தா பயந்தே போயிட்டேன்'' என்றார்.

"ஹம்மா'' என்று பெருமூச்சுவிட்டபடி திரும்பிப் பார்த்தார். வாகனங்கள் நிறுத்துமிடம் காலியாக இருந்தது.