17 Aug 2012

தமிழனா? இந்தியனா?

"தமிழன் மட்டும்தான் ஏமாளியாக இந்தியா, இந்தியா என்று வாய்கிழியப் பேசி ஏமாந்து போகிறான். வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவனும் அவனது மாநிலப்பற்றோடு மட்டும் தான் இருக்கிறான்.'' என்றார் ஒரு தமிழ்த்தேசியவாதி.

"இங்கு மட்டும்தான் தமிழன் தமிழன் என்று மாநிலப் பற்றோடு இருப்பதாக அல்லவா பலர் பேசுகிறார்கள்" என்றேன்.

"கன்னடரைப் பாருங்கள், நீர்ப் பிரச்சனை வந்தால் எல்லா கட்சிக்காரனும் ஒரே குரலில்தான் பேசுவான். கேரளத்தைப் பாருங்கள் எந்த பிரச்சனையென்றாலும் எல்லா கட்சிக்காரனும் ஒரே குரலில்தான் பேசுவான். மராட்டியனைப் பாருங்கள் அவனும் அப்படியே" என்றார்.


"அதனால் அவர்களுக்கு தேசப்பற்று இல்லை. இந்தியா என்றால் ஒன்றுபடமாட்டார்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?" என்றேன்.

"ஏனென்றால்! இந்தியா என்றுமே ஒன்றாயிருந்ததில்லை. இந்தியா ஒரு தேசமாகவே இருந்ததில்லை. வெள்ளைக்காரனுக்குப் பின்புதான் இந்தியா ஒன்றுபட்டது. அதனால் எவனுக்கும் இந்தியா என்ற தேசப்பற்றெல்லாம் இருக்காது. தமிழனை மட்டும்தான் இப்படி இந்திக்காரர்கள் ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். தமிழனும் ஏமாளியாய் இருக்கிறான்" என்றார்.

"சரி தமிழன் இந்தியன் என்று சொல்வதால் எப்படி ஏமாறுகிறான் என்று சொல்லுங்கள் தோழர். நீங்கள் ஏதோ சொல்லப்போக ஏதோ சொல்வதாக நினைக்கிறேன்" என்றேன்.

"தமிழன் சிறந்த உழைப்பாளி, எளிதாக எந்தத் தொழில்நுட்பத்தையும் புரிந்து கொண்டு அதை ஆளுமை செய்பவன். அதனால், ஒவ்வொரு உழைப்பாளி தமிழனும் உழைத்து இந்த மாநிலத்தை வளமாக்குகிறான். 

இப்படிச் சேர்ந்த செல்வத்தில் இருந்து  கிடைக்கும் மின்சாரத்தை அடுத்த மாநிலங்களுக்கு மானியத்தோடு கொடுக்கிறான். யாருக்கு இழப்பு? இந்திக்காரன் இங்கே வந்து வட்டிக்கடை வைத்து சம்பாதிக்கிறான். தமிழன் வட்டி என்ற பெயரில் சுரண்டப்படுகிறான். சென்னையில் இந்திக்காரன் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கிறது. சென்னையில் வேற்று மாநிலத்தவர் தொழிலதிபர்களாகவும், சுரண்டுபவர்களாகவும், தமிழன் உழைப்பாளியாகவும், சுரண்டப்படுபவனாகவும் இருக்கிறான். 

குஜராத்காரன் மீன்பிடித்து பாகிஸ்தான் கப்பல்படையிடம் சிக்கினால் இந்திய மீனவரைக் கைது செய்தது பாகிஸ்தான் என்கிறார்கள். தமிழ் மீனவன் சிங்கள கப்பற்படையிடம் தமிழ் மீனவர் கைது செய்யப்பட்டனர் என்கிறார்கள். தமிழன் இந்தியனாகவா பார்க்கப்படுகிறான். அதனால்தான் சொல்கிறேன் தமிழன் இந்தியன் என்று சொல்வதால் ஏமாளி ஆகிறான்." என்றார்.

"தோழர்! நீங்கள் இடதுசாரி சிந்தனைக்காரர்கள் என்று சொல்கிறீர்கள். மேட்டைச் சரி செய்து பள்ளமான இடத்தில் அந்த மண்ணை இட்டு நிரப்பினால் தானே, நீங்கள் நினைக்கும் சமத்துவமான தேசம் உருவாகும். அப்படித்தானே மின்சாரத்தை மானியமாகக் கொடுக்கிறார்கள். அது எப்படி ஏமாளித்தனமாகும். சென்னையில் இருக்கும் இந்திக்கார தொழிலதிபர்களைச் சொல்கிறீர்களே. மும்பையில் இருக்கும் தமிழர்கள், பெங்களூரில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடாது இங்கு ஓடி வந்துவிட வேண்டும் என்று சொல்வீர்களா? தமிழன் இந்தியாவில் மட்டுமல்ல தோழர், உலகம் முழுவதும் இருக்கிறான். அங்கெல்லாம் இருந்து விரட்டப்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?

தமிழ் மீனவன், இந்திய மீனவன் என்று போடுவதெல்லாம் தமிழ் இனப்பற்றுள்ள தமிழ்ப்பத்திரிக்கைகளே. அகில இந்திய பத்திரிகைகளையும் கொஞ்சம் பாருங்கள் தோழர். அப்படியே அப்பத்திரிகைகளிலும் தமிழ் மீனவர் என்று பெயர் வந்திருந்தால், அதற்குக் காரணம் நாம்தானேயொழிய அவர்களாக அப்படிச் சொல்லவில்லை." என்றேன்.

"இந்த இந்துத்துவாக்காரர்கள் இப்படித்தான் பேசுவார்கள். சரி! இந்தியான்னு ஒரு தேசம் வரலாற்றில் இருந்தது என்பதற்கு சாட்சி ஒன்றாவது சொல்லுங்கள் பார்ப்போம்" என்றார்.

"அப்படி வெளிப்படையான ஒரு தோற்றம் இல்லாவிட்டாலும். நாம் கலாச்சாரத்தால் என்றுமே ஒன்றுபட்டே இருந்திருக்கிறோம். சில பழக்க வழக்கங்களைப் பாருங்கள் குமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒன்றாகவே இருக்கும். ஆனால் அதைத்தாண்டிய மற்ற தேசங்களைப் பாருங்கள் எல்லாம் வேறாக இருக்கும்.

தமிழரல்லாத இந்தியர்களிடம் வேற்று நாட்டவர் என்ற உணர்வே வரலாறில் எங்கும் தென்படுவதாக எனக்குத் தெரியவில்லை." என்றேன்.

"நான் கேட்டது அதுவல்ல. எல்லைக்கோடுகளால் என்று இந்தியா நிர்ணயிக்கப்பட்டது? " என்றார்.

"மஹாபாரதம் படித்துப் பாருங்கள். அங்கே பாண்டவர்களுக்குக் கப்பம் கட்டும் பாண்டியர்களையும் சோழர்களையும் சந்திப்பீர்கள். கப்பம் கட்டி அரசாள்வது என்பது பாண்டவர்களின் மேலதிகாரத்தை ஏற்பதேயாகும். அசோகர் காலத்தில் பெரும்பகுதி இந்தியா ஒரே குடையின் கீழ் இருந்துள்ளது, முகலாய அக்பர் காலத்தில் இந்தியா ஒரே குடையின்கீழ் இருந்துள்ள. ராஜராஜ சோழன் காலத்தில் வடக்கில் ஹர்ஷரும், தெற்கில் ராஜராஜனுமாக தேசம் இரண்டாக இருந்திருக்கிறது." என்றேன்.

"நான் கேட்பது இதுவல்லவே, தேவையில்லாத கதையெல்லாம் சொல்கிறீர்கள்" என்றார்.

அவரிடம் மேற்கொண்டு என்னால் பேச முடியவில்லை. அதன்பிறகு எங்கள் பேச்சு வேறு திசைக்குச் சென்றுவிட்டது. ஆனால் அவர் கேட்ட கேள்விகள் என் மனதை குடைந்து கொண்டே இருந்தன.

கேள்விக்கு கேள்வி பகுத்தறிவு ஆகாது என்று எனக்குத் தெரியும். இருந்தும் நான் இவ்வளவு கூறியும் என் நண்பரைப்போல் பலர் கேட்பதால் கேட்கிறேன். தமிழகம் என்று ஒன்றுபட்டு இருந்திருக்கிறது? இன்று தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களே. என்று நாம் நீங்கள் கேட்கும் எல்லைக்கோடுகள் அளவில் ஒற்றுமையாக இருந்துள்ளோம். ஏன் தமிழன் தமிழன் என்று கூவிக் கூவி அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

தமிழன் தமிழ்நாடு என்ற பெயரால் என்றுமே ஒன்றாயிருந்ததில்லை அதனால் தமிழ்நாடு இல்லையென்றாகிவிடுமா? மொழியால் என்றுமே நம் தேசங்களுக்கு நாம் பெயர் வைத்ததில்லை. பகுத்தறிவு வெடித்து சிதறிய பிறகுதான் நமக்கு மொழிப்பித்து பிடித்துவிட்டது. இப்போது மொழியை இனமாக்கிவிட்டார்கள். தமிழில் இருந்து உருவான கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் எல்லாம் ஆரியர்களாகிவிட்டார்கள்.  தமிழ்நாடு என்ற மாநிலத்திற்குள் பிறந்தவர்கள் மட்டுமே திராவிடன் என்று ஆகிவிட்டார்கள்.

"தமிழ் இரத்தம், இந்தி இரத்தம்" என்று பேசி பேசியே தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். பேசுவது சோசலிசம், கம்யூனிசம், ஆனால் செயல் அத்தனையும் காழ்ப்புணர்ச்சி, பிரிவினைவாதம், இனவாதம், வியாபாரம், சுரண்டல். இவர்கள்தான் மதச்சார்பற்ற செக்யூலர் கடவுளர்கள்கள். தமிழர்களே! இவர்களையே வழிபடுங்கள் உருப்பட்டுவிடுவீர்கள்.