20 Aug 2012

யாருக்கும் வெட்கமில்லை! | இளைய சமுதாயம் எங்கே செல்லும்!

இத்தலைப்பைக்குறித்து சிந்திப்பதற்கு முன்னர், இளைய சமுதாயத்தை நாம் (இளைய சமுதாயம் அல்லாத அடுத்த தலைமுறை) எங்கே இட்டுச் செல்கிறோம் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்ப்போம்.

தயவு செய்து முற்போக்காகச் சிந்தித்துப் பார்க்காதீர்கள் (ஏனென்றால் மிகப் பெரும்பான்மையான சமயங்களில் முற்போக்கு என்ற சொல்லை வைத்துக் கொண்டு மிகவும் பிற்போக்காகத் தான் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்). சற்று பின்னோக்கியே சிந்தித்துப் பாருங்கள்.

என் தந்தை வயதிலான நபர் ஒருவர் அன்று (அதாவது ஒரு 30 வருடங்களுக்கு முன்னால்) மது அருந்த வேண்டும் என்றெண்ணினால் எப்படியெல்லாம் சிரமப்பட்டிருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். பலர் முக்காடிட்டே சாராயக்கடையை அடைந்தனர்

ஆனால் இன்று நிலைமை என்ன? எமலோக வாயில்கள் போல் எப்போதும் வாவென வாயைப் பிளந்து நிற்கும் டாஸ்மாக்கின் வாயில்கள்.


அன்று நான்கூடப் பார்த்திருக்கிறேன். ஒரு உடல் நலிவுற்ற குடிகாரக் கணவரின் ஆசைக்கிணங்க, கடாமார்க் சாராயக்கடைகளில் "ஐயோ எவரேனும் பார்த்துவிடுவார்களோ" என்றெண்ணி அஞ்சி அஞ்சி சரக்கை ஒளிந்து வாங்கும் நம் அப்பாவி மாதர்களை.

இன்று... அதுவும் இன்றுதான் என் கண்ணாறப் பார்த்தேன் ஒரு குடிகாரத் தந்தை தன் 5 வயது மகனை டாஸ்மாக்கிற்கு அழைத்து வந்ததை. என்ன ஒரு அதீத முன்னகர்வு. இதைப் போன்ற அதீத மாறுதல்கள் சமுதாயத்திற்கு என்ன மாறுதலைச் செய்து விட முடியும். இது மிகப் பெரிய புரட்சியாக அல்லவா இருக்கிறது. ஆனால் இந்த புரட்சி நம் சமுதாயத்தில் என்ன விதமான மாறுதலைக் கொண்டு வரப் போகிறது.

நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.

இன்று எனது நண்பர் ஒருவரது இல்லத் திருமண விழா நடந்தது. என்னுடைய நண்பர் தனது தொழில்முறை நண்பர்களுக்கு விருந்தோம்பலாக  ஒரு பாரில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். நானும் சென்றிருந்தேன்.

அங்கு... நான் சந்தித்த ஒரு மனிதர் தன் 5 வயது பாலகனையும் அழைத்து வந்திருந்தார். எல்லோரும் குடித்தனர், புகைபோக்கிகளாகத் தங்கள் வாய்களை அலங்கரித்தனர். புகையிலைச்சுருளைத் தன் வாய்களில் வைத்துப் புதைத்தனர். அந்தச் சின்னஞ்சிறு வாண்டு அவர்கள் ஒவ்வொருவரின் முகங்களையும் கிருஷ்ண பரமாத்மாவைக் கவனிக்கும் அர்ஜூனனாக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது.

தன் தந்தையின் முன்னால் இருந்த ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து, அதனுள் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்துத் தன் வாயில் வைத்தது அந்தக் குழந்தை "ஏய்! எடுக்காதே!'' என்று கேட்க யாருக்கும் திராணியில்லை. ஏன் இப்படி அனுமதிக்கிறீர்கள் என்று கேட்க (நான் உட்பட) யாருக்கும் துப்பில்லை. தகப்பன் தன் சுயநினைவை இழந்திருந்தார். வருவோர் போவோர் எல்லாம் அந்தக் குழந்தையை ஏதோ கட்டபொம்மனைக்காட்டிக் கொடுத்த எட்டப்பனைப் போல் பார்த்தனர்.

இது அந்தக் குழந்தையின் குற்றமா? நாம் யாரை வஞ்சிக்கிறோம். குடித்து மல்லாந்து கிடக்கும் அப்பனை எழுப்பி, அவனைக் கண்டிக்க யாருக்கும் வக்கில்லை. ஆனால் அந்தக் குழந்தையை முறைக்க யாருக்கும் கொஞ்சம் கூட வெட்கமில்லை.

பழைய பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது.....

ஜேசுதாஸ் பாடிய 

"ஊருக்கும் வெட்கமில்லை... யாருக்கும் வெட்கமில்லை''

தேசத்தைக் காக்க (தேசமெல்லாம் வேண்டாங்க உலகத்தையே காக்க) எப்பேர்ப்பட்ட தலைமுறையைத் தயார் செய்கிறோம் நாம்.



மேற்கண்ட படத்தில் உள்ள பேக்கிரவுண்டை எப்படி நீக்குவது?