25 Dec 2020

கர்ணன் - துரோணரின் சீடனே!

Karna

கர்ணன் துரோணரின் சீடனே என்பதை நிறுவும் மஹாபாரதப் பகுதிகளில் சில பின்வருவன:


(நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், பிற்காலத்தில் தேடுவதற்கு எளிதாக இருக்கவும் இந்தப் பதிவு)
*** சீடர்களின் பட்டியலில் கர்ணனின் பெயர்

பிராமணர்களில் சிறந்தவரான துரோணரிடம் ஆயுதப் பயிற்சி பெற வேறு பிற நாட்டு இளவரசர்களும் அந்த இடத்தில் குழுமினர்.(10)
விருஷ்ணிகள், அந்தகர்கள், மற்றும் பல்வேறு நிலங்களில் உள்ள இளவரசர்கள், சூத குலத்தவனான ராதையின் மகன் (கர்ணன்) ஆகியோர் அனைவரும் துரோணருக்குச் சீடர்களானார்கள்.(11)
- ஆதிபர்வம் 134:10, 11
****
அரங்கேற்றக் களத்தில் கர்ணன்
பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட அந்த வீரன், அரங்கத்தைச் சுற்றி நோட்டம் விட்டுத் துரோணருக்கும் கிருபருக்கும் {அதிகம் மதியாதவனைப் போல} அலட்சியமாக வணக்கம் செலுத்தினான்.(6) அந்த மொத்தக்கூட்டத்தினரும் நடப்பதை அசைவில்லாமல் பார்த்து, "யார் இவன்?" என்று நினைத்து, அந்த வீரனைப் பற்றி அறிந்து கொள்ளப் பேராவல் கொண்டனர்.(7)
- ஆதிபர்வம் 138:6,7
***
துரோணருக்குச் செலுத்த வேண்டிய குருதக்ஷிணைக்காக துருபதனுடன் நேர்ந்த போரில் பங்கேற்ற கர்ணன்.
அந்த வீரர்களும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, ஆசானுக்குக் தங்கள் காணிக்கையைக் கொடுக்க எண்ணி, அவரையும் அழைத்துக் கொண்டு வேகமாகத் தங்கள் தேர்களில் ஏறிப் புறப்பட்டனர்.(4) அந்த மனிதர்களில் காளைகள், போகும் வழியெங்கும் பாஞ்சாலர்களை தாக்கியபடியே சென்று, பெரும் பலம்வாய்ந்தவனான அந்தத் துருபதனின் நகரத்தை முற்றுகையிட்டுத் தாக்கினர்.(5)
துரியோதனன், கர்ணன், பெரும் பலம்வாய்ந்தவனான யுயுத்சு, துச்சாசனன், விகர்ணன், ஜலசந்தன், சுலோசனன் ஆகியோரும்,(6) பெரும் ஆற்றலைக் கொண்ட க்ஷத்திரிய இளவரசர்கள் பலரும் சேர்ந்து தாக்குதலில் முதன்மையானவனாக ஒருவருக்கொருவர் போட்டியிட்டுச் சென்றனர்.(7) - ஆதிபர்வம் 140:4-7
***
குண்டலத்தை இந்திரனிடம் கொடுத்துவிடாதே என்று எச்சரித்த சூரியனிடம் கர்ணன்:
ஜமதக்னேயரிடமும் {பரசுராமரிடமும்}, உயர் ஆன்ம {மகாத்மாவான} துரோணரிடமும் பெரும் பலம் பெற்ற ஆயுதங்களை நான் பெற்றிருப்பது குறித்து நீ அறிவாய். ஓ! தேவர்களில் முதன்மையானவனே {சூரியனே}, எனது நோன்பைத் தொடர எனக்கு அனுமதி அளிப்பாயாக! வஜ்ரம் தாங்கியவன் {இந்திரன்} என்னிடம் இரந்து கேட்டு வரும்போது, நான் எனது உயிரையும் அவனுக்குக் கொடுப்பேன்.
- வனபர்வம் 300
***
கர்ணனின் இருப்பிடத்தை முதன்முதலில் குந்தி அறிந்த போது சொல்லப்படும் வைசம்பாயனரின் வர்ணனை
தெய்வீக கவசத்துடன் கூடிய தனது மகன் தேரோட்டியின் (அதிரதனின்) மூத்த மகனாக அங்கர்கள் {அங்க நாட்டினர்} மத்தியில் வளர்ந்து வருகிறான் என்பதைப் பிருதை {குந்தி} தனது ஒற்றர்கள் மூலம் {சாரன் வாயிலாக} அறிந்தாள். காலத்தின் செயல்பாட்டில் {ஓட்டத்தில்} தனது மகன் வளர்ந்ததைக் கண்ட அதிரதன், அவனை {கர்ணனை} யானையின் பெயரால் பெயரிடப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அனுப்பினான். கர்ணன் ஆயுதங்களைக் கற்கும்பொருட்டுத் துரோணரிடம் சென்றான். அந்த வலிமைமிக்க இளைஞனுக்கு {கர்ணன்} துரியோதனனிடம் நட்பு ஏற்பட்டது. துரோணர், கிருபர் மற்றும் ராமன் {பரசுராமர்} ஆகியோரிடம் நான்கு வகை ஆயுதங்களையும் அடைந்த அவன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளி என்று இவ்வுலகில் புகழைப் பெற்றான்.
- வன பர்வம் 307
***
சாந்தி பர்வத்தில் யுதிஷ்டிரனிடம் நாரதர் சொல்வது
இதற்காகவே குந்தியின் கன்னிப்பருவத்தில், போரைத் தூண்ட வல்ல ஒரு பிள்ளை அவளிடம் கருத்தரிக்கப்பட்டான்.(4) பெரும் சக்தி கொண்ட அந்தப் பிள்ளை, சூத நிலையை அடைய வேண்டியிருந்தது {சாரதியின் பிள்ளை என்ற நிலையை அடைய வேண்டியிருந்தது}. அதற்கடுத்து அவன் {கர்ணன்}, அங்கீரச குலக்கொழுந்துகளில் முதன்மையான உன் ஆசானிடமே (துரோணரிடம்) ஆயுத அறிவியலை அடைந்தான்.(5)
- சாந்தி பர்வம் 2:4,5
#கர்ணன் #துரோணர்