12 Apr 2021

கர்ணன் திரௌபதியால் அவமதிக்கப்பட்டானா? சுயம்வரத்தில் புறக்கணிக்கப்பட்டானா?

Arjuna bending the bow in the swayamvara

இது போன்ற கேள்விகளுக்குப் பதிலைத் தேடி புறப்பட்டால் நீண்ட நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும் என்ற எண்ணம் தந்த சோம்பலாலும், ஏற்கனவே மண்டிக்கிடக்கும் பணிகளின் சுமையினாலும் சுருக்கமான விடைகளைச் சொல்லித் தப்பித்து வந்தேன். இந்தக் கேள்வி ஆண்டாண்டு காலமாக மீண்டும் மீண்டும் கேட்கப்படுவதை உணர்வதாலும், சுருக்கமான விடைகள் ஒருபோதும் பலனளிக்காது என்ற எண்ணத்தினாலும் பதிலளிக்க முற்படுவோம் என்று இன்று துணிந்தேன்.

சரி, இனி கதைக்குள் புகுவோம்.

பாண்டவர்களை வாரணாவதம் அனுப்பி அரக்கு மாளிகையில் வைத்து எரிக்க முற்பட்டனர் கௌரவர்கள். அங்கிருந்து தப்பிய பாண்டவர்கள் தலைமறைவாகப் பல காலம் திரிந்து, திரௌபதியின் சுயம்வரத்தைக் குறித்துக் கேள்விப்பட்டுப் பாஞ்சாலம் செல்கிறார்கள். பாண்டவர்கள் வாரணாவதத்தில் எரிந்து மாண்டனர் என்றே கௌரவர்கள் நம்பினார்கள். அவர்களும் திரௌபதியின் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட்டு அங்கே செல்கிறார்கள். அங்க மன்னன் கர்ணனும் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட்டு அதில் கலந்து கொள்கிறான். சுயம்வரத்தில் ஒரு போட்டி. அங்கிருக்கும் கனமான வில்லை எடுத்து, அதில் நாண்பூட்டி, அங்கிருக்கும் ஐந்து கணைகளை எடுத்து, மேலே உயரத்தில் இருக்கும் துளையின் வழியாக ஏவி ஓர் இலக்கை வீழ்த்த வேண்டும்.

வங்கப் பதிப்பைப் பொறுத்தவரையில், "சுயம்வரத்தில் வைக்கப்பட்டிருந்த வில்லைத் தூக்க முடியாமலும், நாண்பூட்ட முடியாமலும் பல மன்னர்கள் வீழ்கின்றனர். கர்ணன் வந்து வில்லை உயர்த்துகிறான். நாணும் பூட்டுகிறான். கணையை எடுத்து வில்லில் பொருத்தும் போது, திரௌபதி, "சூதனை நான் மணக்க மாட்டேன்" என்று சொல்லி நிராகரிக்கிறாள். கர்ணனும் எரிச்சலடைந்து வில்லை வீசியெறிந்துவிட்டுச் செல்கிறான்."

தென் பதிப்பைப் பொறுத்தவரையில், "மன்னர்கள் பலர்வீழ்கிறார்கள். கர்ணனும் அந்த வில்லில் நாண்பூட்ட முடியாமல், அந்த வில்லால் தூக்கி வீசப்பட்டு வீழ்கிறான்." திரௌபதி அவனைச் சூதன் என்று சொல்லி நிராகரிக்கவில்லை.

இவற்றில் எது சரியாக இருக்கக்கூடும்? 

இந்தக் கேள்விகக்கான விடையைக் காண நம்பத்தகுந்த அதிகாரப்பூர்வமான பதிப்புகளை நாடுவதே உற்றவழி.

இங்கே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவை

1. வங்கப் பதிப்பை ஒட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கிசாரி மோஹன் கங்குலியின் மஹாபாரதம். https://sacred-texts.com/hin/m01/index.htm

2. வங்கப் பதிப்பை ஒட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மன்மதநாததத்தரின் மஹாபாரதம்.

மேற்கண்ட இரண்டு பதிப்புகளையும் படிக்க www.arasan.info வில் இருக்கும் நமது தமிழ்மொழி பெயர்ப்புப் பயன்படும்.

3. பூனே செம்பதிப்பை ஒட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிபேக்திப்ராயின் மஹாபாரதம். இது கிண்டில் பதிப்பாகவும் கிடைக்கிறது. https://www.amazon.in/Mahabharata-1-Translated-Bibek-Debroy-ebook/dp/B06XY9RRPK/ref=sr_1_5?dchild=1&qid=1618167710&refinements=p_27%3ABibek+Debroy&s=books&sr=1-5

4. கும்பகோணம் பதிப்பை ஒட்டி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ம.வீ.ராமானுஜாச்சாரியரின் மஹாபாரதம்.

5. ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளத்தக்க அதிகாரப்பூர்வமான பதிப்பாக இல்லாவிட்டாலும், தமிழ் மொழியின் அழகை எடுத்துக் காட்ட ஒரு வாய்ப்பைத் தருகிறதே என்பதற்காக வில்லி பாரதம். http://www.tamilvu.org/library/l3800/html/l3800ind.htm

வில்லி பாரதத்தைப் பொறுத்தவரையில் ஒரு விளக்கத்தைத் தர வேண்டியிருக்கிறது. வில்லிபாரதத்தின் பதிப்புரையில், "வடமொழியில் உள்ள மற்றொரு நூலும் வில்லிக்கு வழிகாட்டியிருக்கின்றது. அதுவே, அகஸ்திய பட்டர் பாடிய 'பால பாரதம்'. இப் பாலபாரதம் இருபது சருக்கங்களில் பாரதக் கதையைச் சுருக்கமாகத் தருகிறது. எளிய இனிய வடமொழி நடையை இது மேற்கொண்டுள்ளது. இந்நூலைச் சுலோகத்துக்குச் சுலோகம், சொல்லுக்குச் சொல், அப்படியே வில்லி தழுவியுள்ளார் என்றும், பாலபாரதத்தின் மொழிபெயர்ப்பாய் அமைந்ததே வில்லிபாரதம் என்றும் சிலர் கூறிவருகின்றனர். இது முற்றிலும் உண்மை அன்று. பாலபாரதத்தின் முதல் ஆறு சருக்கங்களுக்கும் வில்லிபாரதத்துக்கும் பெரிதும் ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால், போகப் போக இரண்டும் இடையிடையே வேறுபட்டுச் சென்று, இறுதியில் முற்றும் வேறுபட்டு விடுகின்றன. எனவே, விரிந்த பாரதக் கதையைச் சுருக்கமாகத் தமிழில் அமைப்பதற்குப் பாலபாரதத்தின் சுருக்கமுறை வில்லிக்குப் பயன்பட்டிருக்கலாம். 'வில்லி புத்தூராரின் பாரதம் முழுவதும் பாலபாரதத்தின் மொழிபெயர்ப்பாக அமைந்தது என்று சொல்ல இயலாது' என்று கூறி, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் தமது வில்லிபாரத உரைப் பதிப்பின் முகவுரையில் வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியர் விளக்கியுள்ளார்" என்ற விளக்கம் இருக்கிறது. எனவே, இந்நூலை ஆய்வுக்காக அதிகாரப்பூர்வமானதாக எடுத்துக் கொள்ள இயலாது.

மேற்கண்ட 5 பதிப்புகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உள்ளபடியே பார்த்து, ஓர் ஆய்வைச் செய்வோமா?

கர்ணன் வில்லை எடுத்தானா? நாண்பூட்டினானா? கணையைப் பொருத்தினானா? திரௌபதி மறுத்தாளா? அல்லது கர்ணன் வில்லில் நாண் பூட்ட முடியாமல் வீழ்ந்தானா? என்பதைக் காண்போம் வாருங்கள்.

வங்கப் பதிப்பைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கிசாரி மோஹன் கங்குலியின் மஹாபாரதத்தில் ஆதிபர்வம் 189ம் அத்தியாயத்தில்"And (some amongst) those kings in exerting with swelling lips each according to his strength, education, skill, and energy,--to string that bow, were tossed on the ground and lay perfectly motionless for some time. Their strength spent and their crowns and garlands loosened from their persons, they began to pant for breath and their ambition of winning that fair maiden was cooled. Tossed by that tough bow, and their garlands and bracelets and other ornaments disordered, they began to utter exclamations of woe. And that assemblage of monarchs, their hope of obtaining Krishna gone, looked sad and woeful. And beholding the plight of those monarchs, Karna that foremost of all wielders of the bow went to where the bow was, and quickly raising it strung it and placed the arrows on the string. And beholding the son of Surya--Karna of the Suta tribe--like unto fire, or Soma, or Surya himself, resolved to shoot the mark, those foremost of bowmen--the sons of Pandu--regarded the mark as already shot and brought down upon the ground. But seeing Karna, Draupadi loudly said, 'I will not select a Suta for my lord.' Then Karna, laughing in vexation and casting glance at the Sun, threw aside the bow already drawn to a circle". என்று இருக்கிறது. https://sacred-texts.com/hin/m01/m01190.htm

வங்கப்பதிப்பைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மன்மதநாததத்தரின் மஹாபாரதத்தில், ஆதிபர்வம் அத்தியாயம் 189, பக்கம் எண் 259ல், "18-19. Those kings could not even in their imagination string that bow of extraordinary stiffness. And those kings, in exerting with swelling lips to string that bow, each according to his strength, education, skill and energy, were all tossed to the ground and motionless for some time. Their strength gone, and their crowns and garlands loosedned from their persons, they panted for breath. Their ambition for winning that maiden was soon coolde down. Tossed by that stiff bow, their garlands and bracelets and other ornaments, were disordered and they uttered exclamations of woe. Having their hope of obtaining Krishna gone that assemblage of kings looked sad and woeful. 21. Seeing the plight of all those kings, that foremost of all wielders of bow, Karna, went to the place where the bow was. He quickly raised it up, stringed it and placed the arrows on the string. 22. Seeing the son of Surya, Karna of the Suta tribe who was like a fire or moon or the sun, resolved to shoot the mark, those foremost of bowmen, the Pandavas, considered that the mark had already been shot and brought down to the ground. 22. Seeing him Draupadi said in a loud voice, "I shall not choose a Suta for my husband." Laughing in vexation and casting a glance towards the sun, Karna threw aside the bow already drawn to a circle." என்றிருக்கிறது.

நம்முடைய தமிழ்மொழிபெயர்ப்பு, "அந்த மன்னர்களில் சிலர், தங்கள் பலம், கல்வி, திறன், சக்தி ஆகியவற்றைப் பயன்ப்படுத்தித் தங்கள் உதடுகள் வீங்க அந்த வில்லுக்கு நாணேற்ற முயன்றனர். ஆனால், அப்படிச் செய்த அவர்கள் தரையில் தூக்கி வீசப்பட்டுச் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தனர்.(18) தங்கள் சக்தி வீணானதால், தங்கள் மகுடங்களும், மாலைகளும் நழுவப் பெரு மூச்சு வாங்கியபடியே, இனியும் தங்களால் அந்த அழகான கன்னிகையை வெல்ல முடியாது என்று அமைதியடைந்தனர்.(19) அந்தக் கடினமான வில்லால் தூக்கி வீசப்பட்டு, மாலைகளும், கை வளையங்களும் கலைந்து அவர்கள் பெரும் துயர் கொண்டனர். அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகள் கிருஷ்ணையை {திரௌபதியை} அடையும் நம்பிக்கை இல்லாமல், துக்கத்துடன் இருந்தனர்.(20) வில் தரிக்கும் அனைவரிலும் முதன்மையானவனான கர்ணன், அந்த ஏகாதிபதிகளின் துயரைக் கண்டு, அந்த வில்லிருக்கும் இடத்திற்குச் சென்றான். அவ்வில்லை விரைவாகத் தூக்கி உயர்த்தி, அதற்கு நாணேற்றி, அந்த நாண் கயிற்றில் கணைகளைப் பொருத்தினான்.(21)சூத இனத்தைச் சேர்ந்தவனும், சூரியனின் மகனுமான கர்ணன், நெருப்பையோ, சோமனையோ, சூரியனையோ போல, இலக்கை {குறியை} அடிக்கத் தீர்மானித்ததைக் கண்ட வில்லாளிகளில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகன்கள், அந்தக் குறி ஏற்கனவே அடிக்கப்பட்டு, தரையில் வீழ்த்தப்பட்டுவிட்டதாகக் கருதினர்.(22) ஆனால், கர்ணனைக் கண்ட திரௌபதி, "ஒரு சூதனை என் தலைவனாக நான் கொள்ள மாட்டேன்" என்று உரக்கச் சொன்னாள். அப்போது, கர்ணன், எரிச்சலுடன் சிரித்து, சூரியன் மீது தன் பார்வையைச் செலுத்தி, ஏற்கனவே வட்டமாக வளைக்கப்பட்டிருந்த அந்த வில்லை வீசியெறிந்தான்[1].(23)" என்பதாகும். https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section189.html

வங்கப்பதிப்பில் "கர்ணன் வில்லை எடுத்தான், நாண்பூட்டி கணையும் பொருத்தினான். ஆனால் திரௌபதி சூதன் என்று சொல்லி அவனை நிராகரித்தாள். கர்ணன் எரிச்சலும், வெட்கமும் அடைந்து வில்லை வீசியெறிந்தான்" என்பது இதன் மூலம் நமக்குத் திண்ணமாகத் தெரிகிறது.

நிற்க...

பூனே பதிப்பைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிபேக்திப்ராயின் மஹாபாரதத்தில் கர்ணன் நாண்பூட்ட முயற்சிப்பதோ, திரௌபதி அவனை நிராகரிப்பதோ சொல்லப்படவே இல்லை. 178ம் அத்தியாயத்தில், "Then one after another those kings exhibited their valour for Krishna. But the bow was so strong that with all their strength, they could not string it. The firm wood of the bow recoiled and flung those brave rulers of men on the ground. They failed in their desire and could be seen on the ground, miserable and broken in spirit. That firm bow caused them pain and shattered their bracelets and earrings. Having lost hopes of obtaining Krishna, that assembly of kings was crestfallen என்று மட்டுமே இருக்கிறது. அஃதாவது, "அப்போது அந்த மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கிருஷ்ணைக்காக {திரௌபதிக்காகத்} தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். ஆனால், அவர்கள் தங்கள் பலம் முழுவதையும் பயன்படுத்தினாலும் அவர்களால் அந்த வில்லில் நாண்பூட்ட முடியவில்லை. வில்லின் உறுதியான மரம் வளைந்து, அந்தத் துணிவுமிக்க மன்னர்களைத் தரையில் தூக்கிவீசியது. அவர்கள் தங்கள் விருப்பத்தில் நிறைவேற்றிக் கொள்ளாமல் தோல்வியுற்று, உற்சாகத்தை இழந்தவர்களாகப் பரிதாப நிலையில் தரையில் காணப்பட்டார்கள். உறுதிமிக்க அந்த வில் அவர்களுக்கு வலியை உண்டாக்கியது, அவர்களின் கங்கணங்களும், காது குண்டலங்களும் தெறித்தன. கிருஷ்ணையை அடையும் நம்பிகையை இழந்த அந்த மன்னர்க்கூட்டம் தலைகுனிந்து நின்றது" என்றிருக்கிறது. கர்ணன் வில்லில் நாண்பூட்டியதோ, திரௌபதி மறுத்ததோ, பிறகு கர்ணன் வில்லை வீசி எறிந்ததோ சொல்லப்படவில்லை; கர்ணன் வில்லில் நாண்பூட்ட முடியாமல் தோற்றதும் சொல்லப்படவில்லை என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனி தென்பதிப்பென்று சொல்லப்படும் கும்பகோணம் பதிப்பின் தமிழ்மொழிபெயர்ப்பு என்ன சொல்கிறதென்று பார்ப்போம். 202ம் அத்தியாயத்தில் "அகங்காரமுள்ளவனும், அஸ்திரங்களில் நிச்சயமான ஞானமுள்ளவனும், ராஜலக்ஷணங்களெல்லாம் பொருந்தினவனும், மஹாபலசாலியும், சூரனும், திருதராஷ்டிர புத்திரனுமான துரியோதனராஜன் அங்கே ஸஹோதரர்களின் நடுவில் விரைவாக எழுந்தான்; திரௌபதியைக் கண்டு களிப்புற்று வில்லினருகில் வந்தான். அவன் வில்லை எடுத்துக் கொண்ட பிறகு, வில்லைத் தரித்த இந்திரனைப் போல் விளங்கினான். அவன் தனுஸை நாணேறிடத் தொடங்கினான். ஏறிடப்பட்ட அந்தவில் இன்னும் எள்ளளவிருக்கையில் திரும்பியடித்தது. அப்போது துரியோதனராஜன் கைவிற்பிடியை விட்டதனால் வன்மையுள்ள அந்த வில்லினால் அடிக்கப்பட்டு அண்ணாந்து விழுந்தான். வில்லினால் அடிக்கப்பட்ட அந்த அரசன் வெட்கத்துடன் சென்றான். அவனுக்குப் பிறகு ஸூர்யபுத்திரனும், ஸூதபுத்திரனும், ஸ்ரேஷ்டனுமான கர்ணன், வில்லினிடம் வந்து அதைத் தூக்கினான். அவனாலும் ஏறிடப்பட்ட அந்த வில் மயிரிழையளவில் திரும்பியடித்தது. மூன்று லோகங்களையும் ஜயிக்கத்தக்கவனும், பலத்தினால் மூன்று லோகங்களிலும் பெயர் பெற்றவனுமான அந்தக் கர்ணனும் அந்த வில்லினால் தோல்வியடைந்தானென்றதனால், எல்லோரும் அந்த வில்லினிடம் பயமுற்றனர். கர்ணனும் அந்த வில்லினால் இவ்வாறு தோற்கச் செய்யப்பட்டுப் போகவே, ராஜஸ்ரேஷ்டர்கள் தாமரை மலர் போன்ற முகங்கள் கவிழ்ந்து கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. கர்ணன் தோல்வியுற்றதைப் பார்த்து, உலகத்தில் வீரர்களான ராஜஸ்ரேஷ்டர்கள் வில்லெடுப்பதிலும், திரௌபதியை அடைவதிலும் ஆசையற்றவராயினர்" என்றிருக்கிறது.

கும்பகோணம் பதிப்பில், கர்ணன் வில்லின் நாண்பூட்டமுடியாமல் தோல்வியுற்றான் என்று நமக்குத் தெரிகிறது.

கும்பகோணம் பதிப்பின் மூலம் பின்வருமாறு

இதி நிஶ்சித்ய மனஸா பூ⁴ய ஏவ ஸ்தி²தஸ்ததா³।
ததோ து³ர்யோத⁴னோ ராஜா தா⁴ர்தராஷ்ட்ர: பரந்தப:॥ 1-202-29(8965)

மானீ த்³ருʼடா⁴ஸ்த்ரஸம்பன்ன: ஸர்வைஶ்ச ந்ருʼபலக்ஷணை:।
உத்தி²த: ஸஹஸா தத்ர ப்⁴ராத்ருʼமத்⁴யே மஹாப³ல:॥ 1-202-30(8966)

விலோக்ய த்³ரௌபதீ³ம்ʼ ஹ்ருʼஷ்டோ த⁴னுஷோ(அ)ப்⁴யாஶமாக³மத்।
ஸ ப³பௌ⁴ த⁴னுராதா³ய ஶக்ரஶ்சாபத⁴ரோ யதா²॥ 1-202-31(8967)

த⁴னுராரோபயாமாஸ திலமாத்ரே(அ)ப்⁴யதாட³யத்।
ஆரோப்யமாணம்ʼ தத்³ராஜா த⁴னுஷா ப³லினா ததா³॥ 1-202-32(8968)

உத்தானஶய்யமபதத³ங்கு³ல்யந்தரதாடி³த:।
ஸ யயௌ தாடி³தஸ்தேன வ்ரீட³ன்னிவ நராதி⁴ப:॥ 1-202-33(8969)

ததோ வைகர்தன: கர்ணோ வ்ருʼஷா வை ஸூதனந்த³ன:।
த⁴னுரப்⁴யாஶமாக³ம்ய தோலயாமாஸ தத்³த⁴னு:॥ 1-202-34(8970)

தம்ʼ சாப்யாரோப்யமாணம்ʼ தத்³ரோமமாத்ரே(அ)ப்⁴யதாட³யத்।
த்ரைலோக்யவிஜயீ கர்ண: ஸத்வே த்ரைலோக்யவிஶ்ருத:॥ 1-202-35(8971)

த⁴னுஷா ஸோ(அ)பி நிர்தூ⁴த இதி ஸர்வே ப⁴யாகுலா:।
ஏவம்ʼ கர்ணே வினிர்தூ⁴தே த⁴னுஷா ச ந்ருʼபோத்தமா:॥ 1-202-36(8972)

சக்ஷுர்பி⁴ரபி நாபஶ்யன்வினம்ரமுக²பங்கஜா:।
த்³ருʼஷ்ட்வா கர்ணம்ʼ வினிர்தூ⁴தம்ʼ லோகே வீரா ந்ருʼபோத்தமா:॥ 1-202-37(8973)

நிராஶா த⁴னுருத்³தா⁴ரே த்³ரௌபதீ³ஸங்க³மே(அ)பி ச॥ 1-202-38(8974)

தஸ்மிம்ʼஸ்து ஸம்ப்⁴ராந்தஜனே ஸமாஜே
நிக்ஷிப்தவாதே³ஷு ஜனாதி⁴பேஷு।
குந்தீஸுதோ ஜிஷ்ணுரியேஷ கர்தும்ʼ

https://sanskritdocuments.org/mirrors/mahabharata/mbhK/tamil/mahabharata-k-01-tamil.html

சம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் மேற்கண்ட கும்பகோணம் பதிப்பின் மூலத்தைக் கொண்டும் ஒப்புநோக்கலாம். வங்கப்பதிப்பின் மூலம் எனக்குக் கிட்டவில்லை. கிட்டியவர்கள் அதைக்கொண்டும் ஒப்புநோக்கலாம்.

வில்லி பாரதம், திரௌபதி மாலையிட்ட சருக்கம் 50-53ம் பாடல்கள்

பலரும் உடன் அகங்கரித்து, மேரு சாரப் பார வரி சிலையின்
நிலை பார்த்து மீண்டார்;
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமைதனைக்
குறித்து, மனம் பதைக்கப் போனார்;
பலரும் மலர்க் கைப் படுத்திப் பெயர்க்க மாட்டார், பணைத்
தோள் நொந்து, 'அமையும்' என, பயந்து நின்றார்;
பலரும் எடுத்து, அணி மணி நாண் பூட்ட வாராப் பரிசொடு
மற்று அதன் வலிமை பகர்ந்தே, விட்டார். 50

வல்லியம்போல் நடந்து, தனு இரு கையாலும் வாரி எடுத்து,
எதிர் நிறுத்தி, மல்லல் வாகுச்
சல்லியனும் நாண் ஏற்ற முடியாது, அந்தத் தனுவுடனே
தன் தனுவும் தகர, வீழ்ந்தான்;
வில்லியரில் முன் எண்ணத் தக்க வின்மை வேந்து அடு
போர்ப் பகதத்தன், வில் வேதத்தில்\
சொல்லியவாறு எடுத்து ஊன்றி, மற்றைக் கையால் தொல்
வலி நாணியும் எடுத்து, தோளும் சோர்ந்தான். 51

பூ கதன் ஆகிய அன்றே, பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து,
உலகு ஆளப் புனைந்த மௌலி
மாகதனும் வில் எடுத்து, வரி நாண் வில்லின் மார்பளவும்
போக்கினான்; வன் போர் நீலன்,
'சாகதன்' என்று அவை துதிக்க, நெடு நாண் கொற்றத் தனு ஒரு
சாண் எனக் கொணர்ந்தான்; 'சாணே அல்ல,
வேக தனு நால் விரல்' என்று உரைக்க, நாணி வீக்கினான்,
வலம்புரித் தார் வேந்தர் வேந்தே. 52

கலை வருத்தம் அறக் கற்ற கன்னன் என்னும் கழற் காளை,
அரன் இருந்த கயிலை என்னும்
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன, மன் அவையில்
வலியுடனே வந்து தோன்றி,
நிலை வருத்தம் அற நின்று, பரிய கோல நீள் வரி நாண்
மயிர்க்கிடைக்கீழ் நின்றது என்ன,
சிலை வருத்தம் அற வளைத்து, வளைந்த வண்ணச் சிலைக் கால்
தன் முடித் தலையைச் சிந்த, வீழ்ந்தான். 53

பொருள்: பலரும் ஒரு சேர செருக்கடைந்தவர்களாக மேரு மலையைப் போன்ற கனத்தக் கட்டமைந்த அந்த வில்லின் தன்மையைப் பார்த்து {அஞ்சித்} திரும்பினர். பலரும் ஒரு கையினால் பிடிக்க அடங்கா வில்லின் பருத்த தன்மையைக் கருதி மனம் பதைத்தனர். பலரும் மலர் போன்ற தங்கள் கைகளால் பிடித்து அசைக்கவும் முடியாதவர்களாகப் பருத்த தோள்கள் நோவு கண்டு இது போதுமென்று அஞ்சி நின்றனர். பலரும் {அவ்வில்லை} எடுத்து, அழகிய உறுதியான நாண்கயிற்றைப் பூட்ட {தம்மால்} முடியாது என்று கருதி அவ்வில்லின் பெருமையைச் சொல்லியவாறே முயற்சியைக் கைவிட்டனர்.(50) வலிமைமிக்கத் தோள்களைக் கொண்டவனும் {சல்லியனும்}, புலி போலச் சென்று வில்லை இரு கைகளால் வாரியெடுத்து எதிர் நிறுத்தி, நாண் ஏற்ற முடியாமல் அந்த வில்லுடன் சேர்ந்து தானும் வீழ்ந்தான். வில்வீரர்களில் முதலில் வைத்து எண்ணத்தக்கவனும், வேந்தர்களை அழிக்கும் வகையில் போரிடக்கூடியவனுமான பகதத்தன், தனுர்வேதத்தில் சொன்னபடி ஒரு கையால் வில்லை எடுத்து நிறுத்தி, மற்றொரு கையால் வலிமைமிக்க நாண்கயிற்றைப் பிடித்து, கைசோர்ந்தவனாக வில்லை விட்டுவிட்டான்.(51) பூமியை அடைந்து, பகைவர் அனைவரும் போற்ற உலகை ஆளப் புனைந்தவனும், மகுடந்தரித்தவனுமான மாகதன் {மகத மன்னன் ஜராசந்தன்} {ஒரு கையால்} வில்லையெடுத்து, {மறுகையால்} நீண்ட நாண்கயிற்றை மார்பு வரை இழுத்தும் நாண்பூட்ட இயலாதவனானான். வலிமைமிக்கவனாகப் போரிடும் நீலன், "அருஞ்செயல் செய்பவன் இவன்" எனச் சபையோர் துதிக்க நெடு நாண்பூட்ட வெற்றிக் கொள்ளும் ஒரு சாண் தூரத்திற்கு இழுத்தும் இயலாதவனானான். நஞ்சாவட்டைப் பூமாலையை அணிந்த அரசர்க்கரசன் {துரியோதனன்}, நான்கு விரல் தூரம் வரை நாண்கயிற்றை இழுத்தும், அதற்கு மேல் இயலாதவனானான்.(52) நூல்களை வருத்தமில்லாமல் கற்றறிந்தவனும், வீரக்கழலையுடைய இளம் வீரனுமான கர்ணன், சிவபிரான் வீற்றிருக்கும் கயிலையெனும் மலையை வருத்தமில்லாமல் பெயர்த்தெடுத்த அரக்கனை {இராவணனைப்} போல, அரச சபையில் இருந்து வலிமையோடு எழுந்து முன்வந்து, நிலையில் வருத்தமில்லாமல் நிலையாக நின்று, பருத்ததும், நீண்ட முறுக்குள்ளதுமான நாண்கயிறானது, ஒரு மயிரினளவே கீழ்நின்றதென்று சொல்லுமளவுக்கு வருத்தமில்லாமல் வளைத்து நின்றபோது, வளைந்த அந்த அழகிய வில்லின் கால் நிமிர்ந்து, மகுடந்தரிக்கப்பட்ட தன் தலையில் தாக்கப்பட்டுக் கீழே வீழ்ந்தான்.(53)

வில்லிபாரதத்திலும் கர்ணன் வில்லின் நாண்பூட்ட முடியாமல் தோல்வியுற்றான் என்றே நமக்குத் தெரிகிறது.

இங்கே Tamilvu வலைத்தளத்தில் காணப்படும் பாலபாரதத்தினுடைய உரையின் ஒரு பகுதி நமக்குச் சிறு வெளிச்சத்தைக் காட்டுகிறது. அது பின்வருமாறு : கர்ணன் அவ்வில்லை எளிதில் எடுத்துவளைத்து நாணேற்றி விரைவாக அம்பைத்தொடுத்து எய்யச் சித்தனான அளவில் திரௌபதி உரத்தகுரலோடு 'நான் பாகன்மகனை விவாகஞ்செய்துகொள்ளேன்' என்று மறுத்துக் கூறவே, அவன் உடனேவருத்தத்தோடு வில்லை எறிந்துவிட்டு மீண்டனனென முதனூல்கூறும். "சாபம்மஹாந்தம் தபநஸ்யஸூநௌ - அதிஜ்யமாதந்வதி ரோமமாத்ரே ஸ தம் விசிக்ஷேப" என்றது, பாலபாரதம்" என்றிருக்கிறது. இது http://www.tamilvu.org/slet/l3800/l3800uri.jsp?song_no=545&book_id=57&head_id=54&sub_id=1375 ல் இருக்கிறது. இங்கே முதனூல் என்று பாலபாரதம் சொல்லப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது கண்டது வரை நாம் தொகுத்துப் பார்த்தால், வங்கப் பதிப்பிலும், பாலபாரதத்திலும் திரௌபதி கர்ணனை மறுத்த செய்தி இடம்பெறுகிறது என்றும், செம்பதிப்பான பூனே பதிப்போ கர்ணன் வில்லெடுப்பதையோ, திரௌபதி மறுப்பதையோ சொல்லவில்லை என்றும், கும்பகோணம் பதிப்பிலும், வில்லி பாரதத்திலும், கர்ணன் வில்லையெடுத்து நாணேற்ற முயன்று தோல்வியுற்றான் என்பதைச் சொல்கிறது என்றும் தெரிகிறது. 

இவற்றில் எதை நாம் எடுத்துக் கொள்வது? கர்ணன் நாண்பூட்டும் நிகழ்வு மஹாபாரதத்தில் வேறு எந்த அத்தியாயங்களிலும் வருகிறதா? என்று பார்த்தால், அடுத்த அத்தியாயத்திலேயே அதற்கான சான்றுகள் இருக்கின்றன.

இனி ஒவ்வொரு பதிப்பிலும் இதற்கு அடுத்து வரும் அத்தியாயம் என்ன சொல்கிறதென்பதைப் பார்ப்போம்.

கிசாரி மோஹன் கங்குலியின் பதிப்பில் ஆதிபர்வம் 190ம் அத்தியாயத்தில், "And that bow which Rukma, Sunitha, Vakra, Radha's son, Duryodhana, Salya, and many other kings accomplished in the science and practice of arms, could not even with great exertion, string, Arjuna, the son of Indra, that foremost of all persons endued with energy and like unto the younger brother of Indra (Vishnu) in might, strung in the twinkling of an eye. And taking up the five arrows he shot the mark and caused it to fall down on the ground through the hole in the machine above which it had been placed." என்றிருக்கிறது. https://sacred-texts.com/hin/m01/m01191.htm

மன்மதநாததத்தரின் பதிப்பில் ஆதிபர்வம் 190ம் அத்தியாயம், பக்கம் எண் 260ல், "19. The bow which Rukma, Sunita, Vakra, Radha's son (Karna), Duryodhana, Salya and many other kings, accomplished in the science and practice of arms, could not string, even with great exertion, was stringed within the twinkiling of an eye, 20. By Arjuna, the son of Indra, that foremost of all powerful men, that hero as powerful as the younger brother of Indra. He took five arrows, 21. Shot the mark, and caused it to come down on the ground through the orifice in the machinery above over which it had been placed." என்றிருக்கிறது.

நம்முடைய தமிழ்மொழிபெயர்ப்பு, "ஆயுதங்களின் அறிவியலிலும், பயிற்சியிலும் சாதித்தவர்களான, ருக்மன், சுநீதன், வக்ரன், ராதையின் மகன் {கர்ணன்},[1] துரியோதனன், சல்லியன் மற்றும் இன்னும் பிற மன்னர்கள், பெருமுயற்சி செய்தும் நாணேற்ற முடியாத அந்த வில்லில், இந்திரனின் மகனும், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையில் இந்திரனின் தம்பியை {விஷ்ணுவைப்} போன்றவனுமான அந்த அர்ஜுனன், கண் இமைப்பதற்குள் நாணேற்றினான்.(19,20) அங்கே இருந்த ஐந்து கணைகளையும் எடுத்துக் குறியை அடித்து, மேலே பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தின் துளை வழியாக அக்குறியைத் தரையில் விழச் செய்தான்.(21)" என்பதாகும். https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section190.html

ஆகக் கர்ணன் வில்லை எடுத்தான், நாண்பூட்டினான், திரௌபதி மறுத்தாள், கர்ணன் வில்லை வீசியெறிந்தான் என்று முந்தைய அத்தியாயத்தில் சொன்ன அதே பதிப்புகள், அடுத்த அத்தியாயத்திலேயே கர்ணனும் வில்பூட்டத் தவறினான் என்பதைப் பதிவு செய்கின்றன. எங்கே தவறு நடந்திருக்கும் என்பதை ஆய்வாளர்களின் ஆய்வுக்கே விட்டுவிடலாம்.

பிபேக்திப்ராயின் பதிப்பில் 179ம் அத்தியாயத்தின் தொடக்கத்தில், ""If Kshatriyas like Karna and Shalya, who are famous in the world, have great stength and are well versed in Dhanur Veda, could not string the bow, how can this weakling Brahmana, with no knowledge of weapons succeed?" என்றிருக்கிறது. அஃதாவது, "உலகில் புகழ்பெற்றவர்களும், பெரும்பலம் கொண்டவர்களும், தனுர்வேதத்தை நன்கறிந்தவர்களும், க்ஷத்திரியர்களுமான கர்ணனாலும், சல்லியனாலுமே இந்த வில்லுக்கு நாண்பூட்ட முடியவில்லை என்றால் ஆயுத அறிவேதும் இல்லாத இந்தப் பலவீனமான பிராமணனால் எவ்வாறு வெற்றியடைய முடியும்?" என்று பிராமணர்கள் சொல்வதாக இருக்கிறது. கர்ணனை க்ஷத்திரியன் என்று அந்தப் பிராமணர்கள் கொள்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே பதிப்பில் அதே அத்தியாயத்தில் மற்றொரு இடத்தில்" Arjuna came to where the bow was and stood there like a stationary mountain. Circumambulating the bow in accordance with rites, the scrocher of enemies bowed his head to the bow and joyously grasped it. In the twinkling of an eye, he strung the bow and grasped the five arrows. Throught the hole in the machine, he suddenly pierced the target and it fell down on the ground." என்று அர்ஜுனன் வென்றது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கர்ணன் வில்லெடுத்ததையோ, திரௌபதி மறுத்ததையோ பதியாத பிபேக்திப்ராயின் பதிப்பு, அடுத்த அத்தியாயத்திலேயே கர்ணனாலும் அந்த வில்லில் நாண்பூட்ட முடியவில்லை என்பதைப் பதிவு செய்கிறது.

கும்பகோணம் பதிப்பின் 203 அத்தியாயத்தில், "தனுர்வேதத்தில் சிறந்தவர்களான ருக்மன், ஸுநீதன், வக்ரன், கர்ணன், துரியோதனன், சல்லியன், ஸால்வன் ஆகிய இவர்களால் முதலில் மிகுந்த முயற்சி செய்தும் எந்த வில் நாணேறிட முடியாமற் போயிற்றோ அந்த வில்லை அப்போது வீரர்களுள் கர்வமுள்ளவனும், கிருஷ்ணனுக்கொப்பான மஹிமையுள்ளவனும், இந்திர புத்திரனுமான அர்ஜுனன் ஒரு நொடியில் நாணேறிட்டான்; ஐந்து பாணங்களையெடுத்து லக்ஷியத்தையும் அடித்தான். செம்மையாக அடிக்கப்பட்ட அந்த லக்ஷியம் உடனே யந்திரத்துவாரத்தின் வழியாகப் பூமியில் விழுந்தது" என்றிருக்கிறது.

கும்பகோணம் பதிப்பும் மீண்டும் கர்ணன் வில்லில் நாண்பூட்டாமல் வீழ்ந்ததைப் பதிவு செய்கிறது.

இதன் மூலம்: யத்பார்தி²வை ருக்மஸுனீத²வக்ரை
ராதே⁴யது³ர்யோத⁴னஶல்யஸால்வை:।
ததா³ த⁴னுர்வேத³பரைர்ன்ருʼஸிம்ʼஹை:
க்ருʼதம்ʼ ந ஸஜ்யம்ʼ மஹதோ(அ)பி யத்னாத்॥ 1-203-23(9001)

தத³ர்ஜுனோ வீர்யவதாம்ʼ ஸத³ர்ப-
ஸ்ததை³ந்த்³ரிரிந்த்³ராவரஜப்ரபா⁴வ:।
ஸஜ்யம்ʼ ச சக்ரே நிமிஷாந்தரேண
ஶராம்ʼஶ்ச ஜக்³ராஹ த³ஶார்த³ஸங்க்²யான்॥ 1-203-24(9002)

விவ்யாத⁴ லக்ஷ்யம்ʼ நிபபாத தச்ச
சி²த்³ரேண பூ⁴மௌ ஸஹஸாதிவித்³த⁴ம்।
ததோ(அ)ந்தரிக்ஷே ச ப³பூ⁴வ நாத³:
ஸமாஜமத்⁴யே ச மஹான்னினாத³:॥ 1-203-25

https://sanskritdocuments.org/mirrors/mahabharata/mbhK/tamil/mahabharata-k-01-tamil.html

வில்லி பாரதம், "திரௌபதி மாலையிட்ட சருக்கம் 54,55,56ம் பாடல்கள்

அரவ நெடுங் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும்
அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி,
உரவு மெலிந்து, எழில் மாழ்கி, செயல் வேறு இன்றி, உள்ளம்
அழிந்து, இருந்ததன்பின், உரும் ஏறு என்ன,
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்றக் கரு முகில்
வாகனன் புதல்வன், கரிய மேனி
இரவிகுலச் சிறுவனைப்போல் எழுந்து, மன்றல் இளங்கொடி
தம்முனை நோக்கி, இயம்பினானே: 54

'மன் மரபில் பிறந்து, இரு தோள் வலியால், இந்த மண் ஆளும்
அவர்க்கு அன்றி, மறை நூல் வாணர்
தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால், சூட்டுமோ
தொடையல், இளந்தோகை?' என்ன,
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன், 'தகவு அன்றோ?
மன்றலுக்குத் தாழ்வோ?' என்றான்;
வில் மரபில் சிறந்த நெடு வில்லை, ஈசன் மேரு கிரி
எடுத்ததென, விரைவில் கொண்டான். 55

கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக,
தனி நெடு நாண் கிளர ஏற்றி,
தளர்வு அறு சாயகம் தொடுத்து, கற்றோர் யாரும், 'தனு நூலுக்கு
ஆசிரியன் தானே' என்ன,
உளர் திகிரிச் சுழல் இலக்கை, அவையோர்தங்கள் ஊக்கமுடன்
விழ, எய்தனன் உரவுத் தோளான்.
வளரும் அருந் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார்; வாச நறு மலர்
சொரிந்து, வானோர் ஆர்த்தார். 56

பொருள்: பாம்பின் வடிவம்பொறித்த நீண்ட கொடியை உயர நாட்டியவன் {துரியோதனன்} முதலாக அங்குள்ள அரசர்கள் அனைவரும் ஒப்பற்ற அவ்வில்லில் திறங்காட்ட முடியாதவர்களாய் வலிமை குன்றி எழில் சோர்ந்து, செய்வததேதுமின்றி உள்ளம் அழிந்த பின், அந்தணர்களுக்கு நடுவில் வேடந்தரித்தவனாக வீற்றிருந்தவனும், வெற்றியை அடைபவனும், கார்மேகவாகனனான இந்திரனின் புதல்வனுமான அவன் {அர்ஜுனன்}, சூரிய குலத்தில் உதித்தவனும், கரிய மேனியைக் கொண்டவனுமான சிறுவனை {இராமனைப்} போல எழுந்து நின்று, திருமணம் செய்து கொள்ளத் தகுந்தவளான அந்த இளங்கொடியின் {திரௌபதியின்} தமையனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி, இடிகளிற்சிறந்த உரத்த குரலில் மிடுக்காக,(54) "க்ஷத்ரிய வர்ணத்தில் பிறந்து, தோள்களிரண்டின் வலிமையினால் இந்த மண்ணை ஆள்கின்ற அரசர்களுக்கன்றி, வேத நூல்களுக்கு உரிமை பூண்ட தொல் மரபில் பிறந்தவர்கள் {அந்தணர்கள்} உங்கள் இலக்கை வீழ்த்தினால், இந்த இளந்தோகையாள் {மயில் போன்ற சாயலுள்ள திரௌபதி} சுயம்வர மாலையைச்சூட்டுவாளோ?" என்று கேட்டான். தன் மரபுக்கு {குலத்தின்} அழகிய திலகம் போன்ற அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, "இது திருமணத்திற்குக் குறைவோ? பெருமையாகாதோ?" என்றான். {உடனே அர்ஜுனன்,} வில்மரபில் சிறந்த அந்த நெடுவில்லை ஈசன் மேரு மலையை எடுத்தது போல விரைவாக எடுத்தான்.(55) வலிமைமிக்கத் தோள்களைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, விளங்குகின்ற மகுடத்தையணிந்த வலிமையுடைய அரசர்களின் நாண்களனைத்தும் இழிவடையும் வகையிலும், அந்தத் தனிநெடு நாண் விளங்கும்வகையிலும் உயரப்பூட்டி, தளர்வில்லா அம்பைத் தொடுத்து, கற்றோரனைவரும், "வில்வித்தைக்கு ஆசான் இவனே" என்று கொண்டாடும் வகையிலும், அவையோர் தந்த ஊக்கத்துடனும், சுழல்கின்ற அந்த இலக்கை வீழ்த்தினான். வளர்கின்ற அரிய தவம், தழல் வேள்வி ஆகியவற்றைச் செய்யும் முனிவர்கள் ஆரவாரம் செய்தனர். வானோரும் வாச நறு மலர்களைச் சொரிந்தனர்.(56)

வில்லிபாரதத்தில் கர்ணன் வீழ்ந்ததை மீண்டும் இங்கே பதிவு செய்ய வில்லை என்றாலும், {கூறியதையே மீண்டும் மீண்டும் கூறாமல்} அர்ஜுனன் வெற்றியடைந்த நிகழ்வு அழகாகப் பதியப்பட்டிருக்கிறது. வில்லிபாரதம், பாலபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டதென்றாலும், இங்கே வியாச பாரத மூலத்தைவிட்டுப் பிறழவில்லை என்றும் தெரிகிறது.

இந்த ஐந்து பதிப்புகளின் படி பார்த்தாலும் கர்ணன் வில்லில் நாண்பூட்ட இயலாமல் தோல்வியுற்றான் என்பதையே ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. அவ்வாறெனில், திரௌபதி அவமதித்த செய்தியும், கர்ணன் விலகிய செய்தியும் பிழை என்றே ஆகும். பாலபாரதத்தை மூலமாகக் கொள்ள முடியுமா? அங்க மன்னன் கர்ணனை வங்கப் பதிப்புகள் விட்டுத் தரவில்லையா? திரௌபதி சூதனெனச் சொல்லி கர்ணனை அவமதித்தாள் என்ற செய்தி இடைசெருகலா? போன்ற கேள்விகளை வங்கப் பதிப்பின் மூலத்தையும் ஒப்புநோக்கி சம்ஸ்கிருத அறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.

***

நமது மொழிபெயர்ப்பில் அமைந்த முழுமஹாபாரதத்தின் ஒவ்வொரு அத்தியாயமும், இத்தகைய நுணுக்கத்துடன் ஒப்புநோக்கப்பட்டவையே. நீளத்திற்கும், செலவாகும் நேரத்திற்கும் அஞ்சி சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் இது போன்ற ஒப்பாய்வுகள் நமது முழுமஹாபாரதத்தில் அத்தியாயமெங்கும் அடிக்குறிப்புகளாக விரவி் நிறைந்திருக்கின்றன. விருப்பமுள்ள நண்பர்கள் நிச்சயம் முழுமஹாபாரத அச்சு நூலை வாங்க வேண்டும். https://www.arasan.info/p/tamil-mahabharata-hardbound-book.html என்ற சுட்டியில் வாங்கிக் கொள்ளலாம். இயலாதவர்கள் இணையத்தில் www.arasan.info ல் எப்போதும் இருக்கும் முழுமஹாபாரதத்தையும் படிக்கலாம். வாய்ப்பிருப்பும் நண்பர்கள் https://www.arasan.info/p/kindle-e-books.html கிண்டில் மின்நூல்களை வாங்கலாம்.

முகநூல் பதிவின் சுட்டி: https://www.facebook.com/arulselva.perarasan/posts/4381750818519755