சுக்கிற்கு உலர்ந்த இஞ்சி, அடுக்கன், அதகம், சுடுபத்திரம் என பல பெயர்கள் வழக்கில் உள்ளன. சுக்கு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. சுக்கினால் செரியாமை, மார்பு எரிச்சல், புளி ஏப்பம், மூலம், இரைப்பு, இருமல், கழிச்சல், மண்டையில் நீர் ஏற்றம், வயிறு குத்தல், கப ஜூரம், காது குத்தல், தலைநோய் ஆகியவை தீரும்.
சுக்கு சுத்தம் செய்யும் முறை: தேவையான அளவு சுக்கை எடுத்து, தேவையான அளவு சுண்ணாம்பை எடுத்து தண்ணீரில் கரைத்து, சுக்கின் மேல் பூசி, கவசம் செய்து, வரட்டி நெருப்பில் சுட்டு எடுத்து, சுக்கின் தோலை நீக்க, சுத்தமான சுக்கு கிடைக்கும். அதன்பிறகு சுக்கை இடித்து, தூளாக்கி எல்லா மருத்துவ முறைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுக்குத்தூளை தேவையான அளவு எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு நல்ல வெல்லம் சேர்த்து, சுக்கு காப்பி தயாரித்து சாப்பிடலாம். இதன் மூலம் வாந்தி, தலைசுற்றல், வயிற்றுவலி, தலைவலி ஆகியவை நீங்கும்.
சுக்குத்தூளில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, கரந்த பசுவின் பால் சூடு ஆறுவதற்கு முன் கலந்து கொடுக்க, பசியே இல்லாதவர்க்கு பசி உண்டாகும். சுக்குத்தூளை வாயில் இட்டு மெல்ல பல்வலி தீரும். சுக்குத் தூளை சிறிது நீரில் சேர்த்து பிசைந்து, மூட்டு வீக்கங்களுக்கு பற்று போட, சில நாட்களில் வீக்கம் குறையும். சுக்கைத் தாய்ப்பால் விட்டரைத்து நெற்றியில் பற்று போட்டு, தவிடு, கோதுமை தவிடு இவைகளை வறுத்து சூட்டுடன் ஒற்றடம் கொடுக்க தலைவலி தீரும்.
சுக்கு தைலம்: சுக்கு ½ கிலோ, பசுவின்பால் ½ கிலோ, நல்லெண்ணெய் ½ கிலோ, சித்தரத்தை, மிளகு, திப்பிலி, கோரக் கிழங்கு, செவ்வள்ளிக் கொடி, கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மேலும் தண்ணீர் விட்டபின் கிழங்கு, அகில்பட்டை, எருக்கன் வேர் பட்டை, கடுகு ரோகினி, கோஷ்டம், கொடிவேலி வேர், தேவதாரு, சந்தனக்கட்டை, வெள்ளை குங்கிலியம், செவ்வியம், ஆமணக்கு வேர், வெள்ளி லோத்திரப்பட்டை, பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, இந்துப்பு இவைகள் அனைத்தும் வகைக்கு 10 கிராம் அளவில் தூள் செய்து, அனைத்தையும் ஒன்று கலந்து, இரும்பு கடாயில் ஊற்றி, 2½ மணி நேரம் விறகு கொண்டு எரிக்க வேண்டும். கரண்டி கொண்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து, மணல் போல் பதம் வரும் நேரத்தில் கஸ்தூரியையும், குங்குமப்பூவையும் 2 கிராம் அளவு எண்ணெயில் போட்டு எண்ணெயை இறக்கி இளஞ்சூட்டுடன் வடிகட்டிக் கொள்ள ``சுக்குத்தைலம்'' ரெடி!
பயன்கள்: இதை தலைக்குத் தேய்த்து ½ மணி நேரம் ஊற வைத்து, வெண்ணீரில் சீயக்காய் தேய்த்து காலை 10 மணிக்குள் குளிக்க வேண்டும். இதனால் மார்பில் கட்டிக்கொண்டிருக்கும் கோழைகள், சளித் தொல்லைகள் தீரும். மூக்கில் நீர் ஒழுகுவது, காது சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். வாதம் சம்பந்தப்பட்ட தொல்லைகள் தீரும். வாயில் இட்டு கொப்பளித்தால் பற்களின் வேரைப் பற்றிய ரோகங்கள், பல்லரணை என்கிற நோயும் தீரும்... அப்பப்பா... என்னே சுக்கின் மகத்துவம்!