ஒரு நண்பருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, சிறுபான்மை சமூகத்தினருக்கான உள் ஒதுக்கீடு பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது நண்பர் சொன்னார், "என்னதான் ஒரு தலித் மதம் மாறினாலும் அவனது சமூக அந்தஸ்தோ, சமூக மரியாதையோ அல்லது எந்த விதத்திலும் அவன் உயர்ந்துவிடவில்லை. ஆகவே, அவன் மதம் மாறினாலும் அவனுக்கான ஒதுக்கீடு அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு கண்டிப்பாகத் தேவை'' என்றார்.
"இது இந்திய மதங்களுள் ஒன்றில் மாறினால் பொருந்தும் என்றால் சரிதான்." என்றேன்.
"எல்லா மதமும் வெளிநாட்டு மதம்தான். இந்து மதம் என்ன இந்திய நாட்டில் தோன்றியதா? எங்கோ இருந்து வந்த பாப்பான் சொல்லிக் கொடுத்த மதம்தானே." என்றார்.
"ஆரியர் வெளியே இருந்த வந்தனர் என்றக்கூற்று எப்போதோ வலுவிழந்து, சரித்திர ஆதரங்கள் முன்னால் மண்டியிட்டுப் போய்விட்டது. ஆனால், இன்னும் பள்ளிப்பாடங்களில் இருந்து எடுக்கத்தான் நமக்கு மனம் வரவில்லை. இந்து மதம் இந்தியாவில் தோன்றியதில்லை என்று நீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்" என்றேன்.
"பார்ப்பனீயம் பேசும் நீங்க ஆயிரம் சொல்வீங்க. கவர்மெண்டே இன்னும் ஏத்துக்கல, நீ ஏத்துக்கோன்னு சொல்றீங்களே. உங்க மதம் நசுக்குனதுல நசுங்குனவங்க வேற மதம் மாறிய உடனே நிமிந்திடுவாங்களா? நீங்க சொல்ற வெளிநாட்டு மதங்கள் எல்லாம் இங்கு சிறுபான்மைதானே. அவங்களுக்கும் சரியான வாய்ப்புத் தரணுமே" என்றார் என் நண்பர்.
"இந்து மதம் அல்லாத பிற இந்திய மதங்கள் அனைத்தும் சிறுபான்மைதான். கிறிஸ்தவமும் இஸ்லாமும் எப்படி சிறுபான்மையாகும். காளிமார்க் முன்னாடி கொக்கக்கோலா சிறுபான்மையா? அதனால்தான் இந்திய மதங்களுக்கு மாறினால் சிறுபான்மை இட ஒதுக்கீடு தவறில்லை என்று சொன்னேன்" என்றேன்.
"நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம, நீங்க சொன்னதையே சொல்றீங்களே! ஒரு தலித் மற்ற மதத்திற்கு மாறிவிட்டதாலேயே அவனுக்கு சமூக நீதி கிடைத்துவிட்டதாக அர்த்தமா?"
"நான் அப்படிச் சொல்லவில்லை. இந்தக் குடிசையில் எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றுதானே அந்த மாளிகைகளுக்கு மாறுகிறார்கள். அந்த மாளிகைகளில் அவர்கள் சௌக்கியமாக அல்லவா இருப்பார்கள். பிறகு எதற்கு இட ஒதுக்கீடு?" என்றேன்.
"மாளிகையிலும் அவர்கள் பெருக்குபவர்களாகவும், மலம் அள்ளுபவர்களாகவும்தானே இருக்கிறார்கள்?" என்றார்.
"அப்படியென்றால், அந்த மாளிகைகளுக்கு ஏன் செல்ல வேண்டும். குடிசையிலேயே தங்கி இருக்கலாமே!"
"உங்க மதத்தில் சாதிக்கொடுமை, சாதிப்பாகுபாடு என்று இவ்வளவு குப்பைகளை வைத்துக் கொண்டு, யாரும் மதம் மாறக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வருகிறது'" என்றார்.
"நீங்கதானேங்க சொன்னீங்கள் அங்கப் போனாலும் மலம் தான் அள்ளுறாங்கன்னு, சாதிக்கொடுமை நீங்க இங்க மதத்துக்குள்ள இருந்து எவ்வளவோ பேர் பாடுபடுகிறார்கள். நாம இருக்கும் இடத்த நம்மதான் சுத்தமா வச்சிக்கணும். என் இடம் குப்ப குப்பன்னு சொல்லி அடுத்த வீட்டுல போய் படுத்துக்கக்கூடாது. அது அந்த தலித்துக்கு சொல்ல, உங்களுக்குச் சொல்றேன்." என்றேன்.
"மதம் மாறிட்டா அப்படி என்னங்க உங்களுக்கு நஷ்டம். உங்களுக்குப் பிடிக்காதவன் உங்கள விட்டு போயிடுறான். உங்களுக்கு சந்தோஷம்தானே." என்றார்.
"எனக்குப் பிடிக்காதவன் நீங்களே சொல்லிக்கிட்டா... அவனை ரொம்ப பிடிச்சவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. கொஞ்சம் கண்ணத் திறந்து பாருங்க. உங்க கண்முன்னாடியே நான் இருக்கேன். திரும்பி எல்லா பக்கமும் பாருங்க கோடிக்கணக்கான பேர் இருக்காங்க. இப்படியே இயேசு கூப்பிடுறாரு... நபி கூப்பிடுறாரு... அல்லா கூப்பிடுறாருன்னு எல்லாரும் மாறிட்டா... யோசிச்சுப் பாருங்க. நம்ம மண்ணோட அடையாளமே போயிடும்." என்றேன்.
"இங்க இருக்கும் எல்லாரும் இந்த மண்ணுல பொறந்தவங்கதான். அப்புறம் எப்படிங்க நம் மண்ணோட அடையாளம் போயிடும்" என்றார்
"ஒரு உதாரணத்துக்கு இந்தியாவில் எல்லோரும் கிறிஸ்தவத்துக்கு மாறிட்டாங்கன்னு வச்சுக்குங்களேன். அவன்கிட்ட உன் புனித பூமி எதுன்னு கேட்டுப் பாருங்க? யெருசலோம்பான், பெத்லஹம்பான், முஸ்லிமா மாறிட்டா மெக்காம்பான், மெதினாம்பான். கண்டிப்பா தன் நாட்டுல ஒரு இடத்தையும் சொல்லமாட்டான். மாறாம இந்துவா இருந்தான்னா... ஏங்க எனக்கு உவரிங்கம்பான் ஒருத்தன், ஏங்க எனக்கு திருச்செந்தூர்ங்கம்பான் இன்னொருத்தன்... ஏங்க எனக்கு காசிங்கம்பான் இன்னொருத்தன். இப்படியே எந்த இந்திய மதங்களில் இருந்தாலும் தன் நாட்டு இடத்தைத்தான் சொல்வான். ஆக, மதம் மாறிட்டா அடிப்படையே மாறிடுதா?" என்றேன்.
"ஏங்க.. புனித பூமின்னு ஒரு விஷயம் மாறிட்டாதான் என்ன? இதுல மண்ணோட அடையாளம் என்ன மாறப் போகுது" என்றார் நண்பர்
"கிறிஸ்தவமும் இஸ்லாமும் எங்கெல்லாம் சென்றனவோ அங்கெல்லாம் வெற்றி வாகை சூடின, இந்தியாவைத் தவிர. ஒன்று வாள்முனையில் அல்லது அந்தக் குடிமக்களை காட்டுமிராண்டிகளாய் சித்தரித்து, தாங்கள் நேரடியாக கடவுளிடம் நாகரிகம் கற்றவர்கள் போல் அந்த அப்பாவி மக்களை ஏமாற்றி, பொருளாசை காட்டி, சமூக அந்தஸ்தைக்காட்டி இப்படித்தான் எல்லா இடங்களிலும் ஏமாற்றி மதம் மாற்றினார்கள். அப்படி மாறின பல தேசங்களைப் பாருங்க... எகிப்து, பாரசீகம் போன்ற தேசங்கள் எவ்வளவு பழைமை வாய்ந்த தேசங்கள். அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஒருகட்டத்தில் மதம் மாறிவர்கள்தான்... உலகமே காட்டுமிராண்டிகளாய் சுற்றித்திரியும் போது இந்தியாவிலும் மேற்சொன்ன தேசங்களில் வளர்ந்த நாகரிகம் இருந்தது. நாகரிகத்தின் உச்சியில் இருந்தவர்கள் அவர்கள். இன்று அவர்கள் தங்கள் பழம்பெருமையை எள்ளளவும் எண்ணிப்பார்ப்பதுண்டா. எகிப்து தேசத்தவனே, தன் பழம்பெருமைகளை எண்ணக் கூச்சப்படுகிறான். ஏனென்றால் இவன் இன்று வளர்ந்துவிட்டானாம். தன் மூதாதையர்கள் காபிர்களாம் (மூடர்களாம்). டேய் உன் மூதாதையர் இருந்ததிலிருந்து தேய்ந்து தேய்ந்து கட்டெரும்பாய் மாறிவிட்டாயே என்று அவனிடம் சென்று சொல்லிப் பாருங்கள். தான் அன்னியர்களின் பிடியில் சிக்கியிருப்பதை உணராதவனாக அவனது மதத்திற்காக உங்களை ஒரு சொருகு சொருகிவிடுவான்." என்றேன்.
"ஏங்க... உங்க குத்தத்த மறைக்க என்னவெல்லாம் கதை அளக்கிறீங்க'' என்றார் என் நண்பர்.
"சரி விடுங்க! இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல'' என்றேன்.