19 Jun 2012

ஆயிரம் உண்டிங்கு சாதி !

 
சாதியம் எங்கு தோன்றியது? வேதங்களிலா? உபநிஷத்துகளிலா? கீதையிலா? புராணங்களிலா? இதிகாசங்களிலா? எங்கு தேடினாலும் சாதி என்ற பிரிவு தெரியாமல் தொழில் அடிப்படையிலான பிரிவினைகள்தானே தெரிகின்றன. அதைச் சாதிகள் எனக் கொள்ள முடியாதே. சரி! ஒரு பேச்சுக்கு அதுதான் சாதி என்றாலும் நான்கு சாதிகள்தானே இருக்க வேண்டும் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்). ஆனால் ஆயிரக்கணக்கிலல்லவா சாதிகள் உள்ளன.


"யார் இந்த பிரிவினைகளை உருவாக்கியிருப்பார்கள்? அதற்கான சான்றுகள் ஏதேனும் உண்டா?"
"பிராமணர்கள் உருவாக்கி இருப்பார்கள்?" என பதில் வருகிறது.

பிராமணர்களுக்கு வேறு வேலையே இருந்திருக்காதோ? இல்லையே. இது நியாயமாகப் படவில்லையே. எங்கும் எதிலும் ஆதாரம் பற்றி பேசுபவர்கள்தான் இப்படி ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார்கள் எனத்தானே படுகிறது. எல்லாம் வெறும் யூகத்தினடிப்படையிலேயே. யூகத்தையே வரலாறாக மாற்றுகிறார்கள்.

இந்த சாதி ஏற்றத்தாழ்வுக்கு, இன்னும் பிராமணர்களையே குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது. செத்த பாம்பிற்குச் சமானம். நாம் பிற்படுத்தப்பட்ட சாதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி என்று சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு இந்து மதக் கட்டமைப்பில் இன்னும் ஆதிக்க சாதிகளாகத் தானே இருக்கிறோம். நம் இன (பொதுவாகச் சொல்கிறேன் - தாழ்த்தப்பட்ட இன) சாதித் தலைவர்கள் சாதியம் பற்றிப் பேசுவதும், பார்ப்பன எதிர்ப்பு பற்றிப் பேசுவது "ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைபட்ட கதை" போல்தானே தெரிகிறது. அப்படி இருந்தும் நாம் பார்ப்பனர்களை மட்டுமே குற்றஞ்சாட்டுகிறோம். அனைவருக்கும் பொது எதிரியாக பார்ப்பனரை மட்டும் ஒதுக்குகிறோம். அவர்களை நாம்தான் தீண்டத்தகாதவர்களாக அடக்கி வருகிறோம் என்ற உணர்வு நமக்கு ஏன் ஏற்படவில்லை?

தமிழ் ஹிந்து இணையதளத்தில் கீழ்கண்ட பதிவைப் படித்தேன். அதை அப்படியே தருகிறேன்.


தமிழ் ஹிந்து இணையதளத்தில் கீழ்கண்ட பதிவைப் படித்தேன். அதை அப்படியே தருகிறேன்.

ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்

 “யர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற வேண்டிய அரும்பணிகள் அநேகம் தெளிவாகவும் குறிப்பாகவும் உள்ளன. ஆனால் அவர்களோ மாறாகஉங்களுடைய தேவைகள் என்ன? உங்களுக்கு ஏன் திருப்தி?” என  ஏளனமாகவும் கேலியாகவும் கேட்கும் நிலைதான் உள்ளது. நாங்கள் வேண்டுவது என்ன? நாங்களும் உங்களை போல மனித இனம்தானே?  எங்களைப் போல நீங்களும் உங்கள் விருப்பத்திற்கு மாறாக கலாச்சாரம் என்கிற பெயரால் மாற்று வகுப்பினரின் ஆதிக்கத்தின் பிடியில் நீண்ட காலம் சிக்கி சீரழிந்து போனால் நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்களைச் சுரண்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  உங்கள் குழந்தைகள் அறிவுப்பசியால் வாடும் போது, தாகத்தால் வாடும் போது, ஆன்மிக உணர்வுடன் தேடும் போது கல்விசாலை, பொதுநீர்நிலை, கிணறு, கோவில் போன்ற பொதுநல வாய்ப்புகள் மறுக்கப்படும் போது என்ன செய்வீர்கள்?

நாங்கள் கற்களோ பாறைகளோ அல்ல. எங்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா? எங்களுக்கும் தேச பெருமையூனூடே பேரும் புகழும் அடைய வேண்டும் என்கிற உணர்ச்சிகள் இருக்காதா? நாங்கள் எத்தனை கொடுமைகளையும், துன்பங்களையும், சுரண்டல்களையும், அவமானங்களையும், அல்லல்களையும் அனுபவிப்பது? எங்கள் தேசாபிமானத்தை நீங்கள் சிதைத்திருக்கிறீர்கள். அவமதிப்புகளை அளவில்லாமல் எங்கள் மீது குவித்து எங்கள் தன்மானமே அழியும் அளவுக்கு ஆக்கியிருக்கிறீர்கள். … யாருடைய பரிவோ பரோபகாரமோ எங்களுக்கு தேவை இல்லை.  நாங்கள் பெற விரும்புவது சமூக முன்னேற்றம், அரசியல் எழுச்சி, பொருளாதார உயர்வுதாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது.”
- பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள்

 தாழ்த்தப்பட்டவரின் குரல் எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? அவர்களை நாமல்லவா ஒடுக்குகிறோம். ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களை அடகு வைத்துவிட்டு குதூகலமடைகிறோம். யாராவது ஒரு பார்ப்பனர் "ஏனப்பா என்னை மட்டும் குறை சொல்கிறாய்?" அவருக்கு விளக்கம் கூறாமல் வசைமாரி பொழிவோம்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் "இந்து மதத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தாங்கவில்லை" என்றப் போலிக் குற்றச்சாட்டைச் சுமத்தி கிறிஸ்தவ மதத்திலோ அல்லது வேறு ஏதாவது அந்நிய மதத்திலோ சேர்ந்து கொண்டு, அங்கும்போய் நமெ சாதிப்பற்றை மறக்காமல் நான் "கிறிஸ்தவ நாடார், கிறிஸ்தவ தேவர், கிறிஸ்தவ முதலியார், கிறிஸ்தவ நாயுடு, கிறிஸ்தவ வன்னியர்" என்றுச் சொல்லிக் கொண்டு அங்கும் போய் நம் சாதிப்பற்றைப் பரப்புவோம்.


 

பேராண்மை எது தெரியுமா? ஆயிரம் உண்டிங்கு ஜாதி ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்ற பாரதியின் கூற்றுக்கேற்றபடி மண்சார்ந்து, அந்த மண்ணில் நடக்கும் அநீதிகளை அகற்ற முயல்வதுதான். மதமாற்றம் புரட்சியல்ல. உண்மையிலேயே மனமாற்றம் உண்டானால் மதம் மாற வேண்டியதுதான். ஆனால் அக்கனமே நாம் அந்நியர் கைப்பிடியில் என்பதை மனதில் கொள்வோம். மண் சார்ந்து வாழ்வோம்.

 


பட்டியலினத்தவரையும் (SC / ST) தாழ்த்தப்பட்டவர்களையும் ஒடுக்கும் பெரும் சக்திகளாக ஆதிக்க சாதி (பிற்படுத்தப்பட்ட, மிகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட) சாதிகளான நாமே இருக்கிறோம் என்பதை எப்போது அறியப் போகிறோம். ஒவ்வொரு ஆதிக்க சாதி இந்துவின் மனநிலையும் மாறினாலே சாதியம் காணாமல் போய்விடும். ஒவ்வொரு ஆதிக்க சாதி இந்துவும் பட்டியலினத்தவருடனும் தாழ்த்தப்பட்டவருடனும் சரி சமமாக (அவர்களை சுயமரியாதையோடு, அவர்களும் தன்னைப்போல் ஒரு மனிதன் என்று எண்ணி) பழகினாலே சாதியம் ஒழிந்துவிடும். தீண்டாமை ஒழிந்துவிடும். இது சாத்தியமே. ஆனால் சாதி ஒழியாது. சாதித் தலைவர்களும் இதை அனுமதிக்க மாட்டார்கள், சாதிக் கட்சிகளும் இதை அனுமதிக்காது. 

பள்ளியில் சேர்க்கும்போதோ, அல்லது வேலையில் சேரும்போதோ அல்லது எந்தவொரு அரசு சம்பந்தமான கோப்புகளுக்கோ சாதியைக் கேட்க மாட்டோம் என்று அரசாங்கம் அறிவித்தாலொழிய சாதி ஒழியாது. இளைஞர்கள் நினைத்தால் சாதியம் ஒழிந்துவிடும், தீண்டாமை ஒழிந்துவிடும். அரசு நினைக்காமல் சாதி ஒழியாது.
 சாதியம் களைவோம்! சாதியை ஒழிப்போம்!!