26 Jun 2012

தர்மன் சூது!"பெண்கள் காலங்காலமாக காமப் பொருளாகவும் மதிப்பீட்டுப் பொருளாகவும்தான் பார்க்கப்பட்டு வந்துள்ளனர் என்பதற்கு சிறந்ததோர் சாட்சி தர்மன் தன் மனைவியை வைத்து சூதாடியது. அது உண்மையாக இருக்குமானால் கண்டிக்கத்தக்கது... ஆனால் இந்த 21 நூற்றாண்டிலும் அப்படி ஒரு சூழல் இருக்கத்தான் செய்கிறது... அப்படி ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதே நெஞ்சை பிழிகிறது ...இதைதான் நியாயபடுத்துகிறதா இந்துத்துவம்? பெண்ணுரிமையை மீட்க இந்துத்துவத்தை வேரறுப்போம்..

 - இந்துத்துவத்திற்கு எதிரான தமிழன்
        இப்படி ஒரு பதிவை முகநூலில் (Facebook) கண்டேன். ஒரு இடதுசாரி தோழர் இட்டிருந்த பதிவு அது. அதற்கு நான் மறுமொழியும் கொடுத்திருந்தேன். மறுமொழி கீழே பெட்டிக்குள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
     பெண்ணை போகப் பொருளாகப் பார்ப்பதை எப்படி இந்துத்துவம் நியாயப்படுத்தும். ஒரு போதும் நியாயப்படுத்தாது. இவையெல்லாம் மகாபாரத்ததை முழுமையாகப் படிக்காததால் வரும் கோளாறுகள். இந்தப் பதிவை எழுதியிருப்பவர் அது உண்மையாக இருக்குமானால் கண்டிக்கத்தக்கது என்று வேறு எழுதியிருக்கிறார். ஏன் படித்துவிட்டே எழுதலாமே.
      தர்மன் இதற்காக மகாபாரதத்தில் பல இடங்களில் கண்டிக்கப்படுகிறான்  என்பதைப் பலர் அறிவதில்லை. தர்மனின் தம்பிகளே "இப்படி சூதாடிய உன் கைகளை வெட்டினால் என்ன? உன்னைப் பொசுக்கினால் என்ன?" என்று கேட்டார்கள். பரந்தாமன் 'எந்த உரிமையில் நீ அவளை வைத்து சூதாடினாய்' என்று கேட்டான். பீஷ்மர் கண்டிக்கிறார்.
ஆனால் அனைவருமே துரியோதனனின் எதேச்சதிகார ஆளுமைக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஆனால், முறையாகப் பார்த்தால் தர்மன் அவளை வைத்து சூதாடவில்லை. துரியோதனனே அவளை வைத்து சூதாடுமாறு நிர்பந்திக்கிறான். சூது எவ்வளவு தீமையானது என்பதற்கான நீதியே அந்தக்கதையில் தெரிகிறது. நீதிமானான தர்மனே ஆனாலும் சூது ஒரு மனிதனை எப்படி சீரழிக்கிறது என்பதற்கு இதைவிட எப்படி அற்புதமாகச் சொல்லிவிடமுடியும். கருத்தை இப்படிப் பார்க்காமல், எதையும் சிவப்புக்கண்ணடியில் பார்த்தால் அர்த்தமும் சிவப்பாகத்தான் தெரியும். இறக்குமதிக் கொள்கை எப்படி அர்த்தத்தையே மாற்றிச் சொல்ல வைக்கிறது பார்த்தீர்களா?
        பெண் ஞானிகளும், பெண் சித்தர்களும் இந்த மண்ணில்தான் அதிகம் தோன்றியிருக்கிறார்கள். வேறு எந்த சமூகத்தில் இப்படித் தோன்றியிருக்கிறார்கள் என்று பட்டியலிடமுடியுமா? கம்யூனிஸ்டுகள் எத்தனை பெண்களைத் தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெண்களை போகப் பொருளாகப் பார்க்கவில்லையா? பல சோசலிச தலைவர்கள் எத்தனை பெண்டாட்டிகள் வைத்திருந்தனர் என்ற கணக்கே பிரமிக்க வைக்கிறதே. புரட்சியாளர் சே-வே தான் சுடப்படும் முன்பு தன் காதலியுடன் (மனைவியல்ல) இருந்தார். என்ன புரட்சி செய்ய அந்தப் பெண்ணைக் காட்டுக்கு அழைத்துச் சென்றார்? சீன அதிபரின் கோபத்திற்குப் பயந்து ஜப்பானுக்குத் தப்பிப் போன சமையல்காரர் ஒருவர் அந்த அதிபரின் அந்தரங்கங்களை புட்டுபுட்டு வைத்தாரே. அதையெல்லாம் படிக்க மாட்டீர்கள்? 
     அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் "பஞ்சம், படுகொலை, பேரழிவு - கம்யூனிசம்" என்ற நூலில் தோழர் காரல் மார்க்சே தனது வீட்டில் பணியாளாக இருந்த ஒரு பெண்ணைக் கர்ப்பிணியாக்கி அதை ஏங்கல்ஸ் தலையில் சுமத்தினார் என்று சொல்கிறார். தோழர் ஸ்டாலினுக்கு எத்தனை மனைவிகள் என்று சொல்கிறார். தோழர் ஸ்டாலின் தன் மனைவியை எப்படி நடத்தினார். தன் பிள்ளைகளை எப்படி நடத்தினார், சக தோழர்களை எப்படி நடத்தினார் என்பதைச் சொல்கிறார். தோழர் மாவோவுக்கு எத்தனை மனைவிகள் என்று சொல்கிறார். அவர்கள் எல்லாம் பெண்களை புரட்சியாளர்களாக, சக சிந்தனையாளராகப் பார்த்தார்களா என்ன? அவர்களும் பெண்களை போகப் பொருட்களாகத் தானே பார்த்திருக்கின்றனர். மார்க்சியவாதிகள், அந்தப் புத்தகத்தை வாசித்து விட்டு, அதற்கு பதில் சொல்லாமல் 5000 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பழைய கதையைக் குத்திக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். (ஏங்க! அந்த கதை நடந்த வருஷத்துல உங்க கொள்கை எங்கிருந்து ஏற்றுமதியாகுதோ அந்த தேசங்களில்லாம் மக்கள் காட்டுமிராண்டிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் இப்போது நம்மைக் காட்டுமிராண்டிகள் என்கின்றனர்.)
        முகநூலில் நான் இட்டிருந்த மறுமொழி பின்வருமாறு:
தோழர்! நீங்க எப்போதும் ரொம்ப பின்னாடியே பாக்குறீங்களே!எங்கள் கணக்குப்படி 5000 வருஷத்துக்கு முன்னால நடந்தது மகாபாரதம். இதோ 500 வருடங்களுக்கு முன்பு நடந்த இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் அடிமைகளாய் விற்கப்பட்டார்களே. வாள்முனையில் பெண்கள் சுல்தான்களின் அந்தப்புறங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்களே. இதோ சமீபத்தில் ஒரு பாதிரியார் ஒரு கன்னியாஸ்த்திரியை கதறக் கதற.......... நித்தியானந்தா விஷயம் போல் அது ஏன் பூதாகரமாக்கப்படவில்லை. அதுவெல்லாம் உங்களுக்குத் தெரியாதே. அதைச்சொன்னால் சிறுபான்மை ஓட்டு போய்விடுமே. இளிச்சவாயன், அமைப்பு இல்லாதவன் மண்ணின் மைந்தன் (இந்து) தானே. தோழர்களுக்கு எப்போதும் இறக்குமதி கருத்துகளில்தான் (இஸ்லாமியம், கிறிஸ்தவம், கம்யூனிசம்) மோகம் அதிகம். உலகத்துல இருந்த எல்லா சமூகத்திலேயும் பெண்கள் பொருளாகத்தான் பாவிக்கப்பட்டிருக்கிறார்கள். அது நியாயமா என்று கேட்காதீர்கள். சோசலிச நாடுகளில் விபச்சாரம் இல்லையா? அங்கு பெண்கள் போகப் பொருளாகப் பார்க்கப்படவில்லையா? டெல்லியில் கம்யூன்களாக செயல்படும் குழுக்கள் பெண்களை எப்படி நடத்துகின்றன என்பது செய்தித்தாள்களில் வருகின்றனவே. ஆனால் அவையெல்லாம் சிறு பெட்டி செய்திகளாக, முக்கியத்துவம் இல்லாத செய்தியாகவே வரும். போராளிக் குழுக்கள் பெண்களை எப்படிப் பயன்படுத்துகின்றன. ஆக எல்லா சமூகமும் பெண்களை போகப் பொருளாகத்தான் பார்த்திருக்கின்றன. பார்க்கின்றன. இந்து சமுதாயம் மட்டுமே அவர்களை கடவுளாகப் பார்த்தனர். தாயாக நினைத்தனர். இப்படிப்பட்ட சமூகம் (பெண் தெய்வ வழிபாடு) உலகெங்கும் இருந்தது. அதை அழித்தது ஆபிரகாமிய மதங்களும், பகுத்தறிவு பேசுபவர்களும்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. மண்ணின் மைந்தர்களைக் குறைசொல்ல உலகத்தில் யாருக்குத்தான் தகுதி இருக்க முடியும்.