நக்கீரன் இதழில் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய "இளமை எனும் பூங்காற்று" தொடரின் 26வது கட்டுரை "அழகின் மறுபெயர்'' படித்தேன். அது ஏழாம் கிளியோபாத்ரா பற்றிய ஒரு கட்டுரையாகும்.
ஆரம்ப வரியிலேயே சிந்திக்கத்தான் வைக்கிறார் பகுத்தறிவுக்காரர்,
"தாய்வழிச் சமூகமாக இருந்த வாழ்க்கை முறை மாறிப்போன பிறகு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்களின் ஆதிக்கமே உலகில் நிலைத்து நிற்கிறது என்று ஆரம்பிக்கிறார்.''
"தாய்வழிச் சமூகமாக இருந்த வாழ்க்கை முறை மாறிப்போன பிறகு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்களின் ஆதிக்கமே உலகில் நிலைத்து நிற்கிறது என்று ஆரம்பிக்கிறார்.''
தாய் வழிச்சமூகம் என்கிறீர்களே, அது எப்போது இருந்தது. அதை நிரூபிக்க ஏதாவது ஆய்வின் பலம் உங்களுக்கு இருக்கிறதா? "வால்காவிலிருந்து கங்கை வரை'' என்று முழுக்க முழுக்க கற்பனையினாலான ஒரு புத்தகம்தான் ஆதாரமா? (அதையே ஆய்வுப் புத்தகம்தான் என்கிறார்கள்.) அதேபோன்று Fiction வகை சார்ந்த இலக்கியங்கள்தான் ஆதாரமா? அல்லது உண்மையிலேயே ஏதாவது வரலாற்று ஆதாரம் உள்ளதா? எனக்குத் தெரியவில்லை. சரி அப்படியே இருந்தாலும் சமுதாயத்தின் முன்னகர்வில்தான் ஆணாதிக்கம் பிறந்திருக்கிறது (ஆணாதிக்கம் முற்போக்குதான்) என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும். அதையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது பிற்போக்கு கருத்து என்பார்கள்.
பெண்ணின் பெருமையைக் குறிப்பிட மேற்கண்ட வாசகத்தைக் கூறிவிட்டு அவர் வர்ணிக்கும் வர்ணனையைக் கவனியுங்கள்.
"வயது அவள் அழகை உதறிவிட முடியாது. அவள் தரும் முடிவற்ற பல்சுகம், அவளுடனான நீண்ட பழக்கத்தாலும் கூட சலிப்பைத் தராது.''
பாரதிதாசனின் வரிகளையும் வைத்து அந்த கருத்துக்குப் பலம் சேர்க்கிறார்.
"அன்றன்று புதுமையடி ஆருயிரே, நீ நல்கும் இன்பம் என்றான். - - - -
ஐயா உங்களுக்கு இதில் ஆணாதிக்கமே தெரியவில்லையா? பெண்ணை போகப் பொருளாகப் பார்க்கும் மனோபாவம்தானே இந்த வரிகளில் அதிகமாக, அல்ல அல்ல முழுமையாகத் தெரிகிறது. இனி அவர் சொல்லும் கதையின் சுருக்கம்
ஏழாம் கிளியோபாத்ரா 18ம் வயதில் தனது தம்பி 13ம் ப்தாலமியை மணக்கிறாள். நாட்டை ஆள்கிறாள், ஒரு உறையில் இரு வாள் இருக்கக்கூடாது என்றெண்ணி தனது தம்பியைக் கொல்ல சதி செய்ய சிரியா செல்கிறாள். சீசரின் வருகையை அறிகிறாள். சீசரைச் சந்திக்கிறாள். சீசருக்கு மனைவியாகிறாள். அதோடு மட்டுமல்லாமல் தனது இன்னோரு தம்பியான 14ம் ப்தாலமியையும் மணக்கிறாள். சீசர் வஞ்சகமாகக் கொல்லப்படுகிறான். மார்க் அந்தோணி சீசருக்கு நெருக்கமானவர்கள் எல்லோரையும் தண்டிக்கிறான். கிளியோபாத்ராவையும் தண்டிக்க அழைக்கிறான். ஆனால் அவள் அழகில் மயங்கி, அவளிடமே கட்டுண்டு கிடக்கிறான். சீசரின் மகன் அகஸ்டஸ் அந்தோணியை எதிர்க்கிறான். அந்தோணி சாகிறான். கிளியோபாத்ரா தற்கொலை செய்கிறாள் என்று கதையை முடிக்கிறார். பெண்ணின் பெருமையை உணர்த்த அதிஅற்புதமான (!) ஒரு கதையைச் சொல்லிவிட்டு, எப்படி முடிக்கிறார் என்றும் பாருங்கள்.
"கிளியோபாத்ராவின் அழகில் உலகு மயங்கினாலும், அதே உலகம் இன்னும் அவளைத் தூற்றிக் கொண்டுதான் உள்ளது. எகிப்து, ரோமாபுரி என இரு பழைய நாடுகளின் வரலாறும் அவளால் தான் மாறிப்போனது என்று பழி சொல்கிறது.
எனினும் உலகத்தின் மனசாட்சியை நோக்கி எழுப்ப வேண்டிய ஒரு கேள்வி மீதமிருக்கிறது.
மயக்கிய அவள் குற்றவாளி என்றால், அவள் அழகில் மயங்கி, தம் கடமைகளை எல்லாம் மறந்த மன்னர்கள் குற்றவாளிகள் இல்லையா?
வண்டு வந்து தேன் குடித்தால், மலருக்குத் தான் தண்டனையா?''
"நான் குற்றவாளின்னு நிரூபிக்க, காதல்ன்ற அந்த மலர்தான் கிடச்சுதா''ன்னு புதிய பறவை சிவாஜி மாதிரி எப்படி உருகுறாரு பாருங்க.
தனி மனிதனுக்கே மனசாட்சி இருக்குதா? இல்லையானு தெரியல. உலக மனசாட்சிக்கிட்ட பகுத்தறிவு மனசாட்சி இப்படிக் கேக்குது. "வண்டு வந்து தேன் குடித்தால், மலருக்குத்தான் தண்டனையா?'.
ஐயா, வண்டு போய் தேன் குடித்தால் அது இயற்கைதான். அதற்கு தண்டனை எப்படிக் கொடுப்பீர்கள்? (பழமொழி சொன்னா அனுபவிக்கனும் கேள்விலாம் கேக்கக்கூடாதுனு பகுத்தறிவு கமல் மாதிரி யாரும் கேட்றாதீங்க).
மலரல்லவா வண்டுகளைத் தேடி ஓடி ஓடித் தேனை விற்று வந்திருக்கிறது. இதற்கு நியாயம் வேறு கேட்கிறீர்களே. உங்கள் பகுத்தறிவு உங்களை எந்த எல்லைக்கெல்லாம் கொண்டு செல்கிறது என்று பாருங்கள். உண்மைப் பகுத்தறிவு அப்படி வழிகாட்டுமா? அந்தத் தேனை அன்பால் கொடுப்பது வேறு, விற்பதற்குத்தான் தண்டனை கொடுக்க வேண்டும். வேசிக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் பகுத்தறிவா?
நம் நாட்டுப் பகுத்தறிவுவாதிகள் நம் இலக்கியத்தில் ஒரு பெண் இப்படி இருந்தால் வேசி என்கிறார்கள், நாம் ஆழ்வார்களில் ஒருவராகச் சேர்த்து வழிபடும் ஆண்டாளை வேசி மகள் என்கிறார்கள். ஆனால், உண்மையான வேசியை முற்போக்கு சித்திரமாக்குகிறார்கள். என்னே நம் பகுத்தறிவுவாதிகளின் திறமை. அதுவும் அந்த வேசித்தனத்தில் எப்படி நியாயம் கற்பிக்கிறார் பாருங்கள்.
தன்னுடைய 18-வது வயதிலேயே தன் தம்பி பதிமூன்றாம் ப்தாலமியுடன் இணைந்து எகிப்தின் அரசியானார். பத்து வயதே நிரம்பிய அவன், அவளின் ஒன்றுவிட்ட தம்பி எனக் கூறுவோரும். உண்டு. எவ்வாறாயினும் அவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக இருந்தே நாடாண்ட கதை வியப்பாக உள்ளது. சகோதரர்களை மணந்து கொள்ளும் ஒரு விநோதமான மரபு, அப்பரம்பரையில் இருந்துள்ளது.
நம் இலக்கியங்களில் உள்ள கதாபாத்திரங்களுக்கு இப்படி வக்காலத்து வாங்க நம் பகுத்தறிவு நாவு வளைய மறுக்கிறது. அந்நிய தேசம் என்றால் எப்படியெல்லாம் வளைகிறது ? சரி... இந்தியாவே அந்நிய தேசம்தான் சொல்றவங்களுக்கு என்னதான் சொல்ல. இவர்களுக்கு இந்தியாவைத் தவிர மற்றதெல்லாம் முற்போக்குத்தான்.