என் தந்தை ஒரு ஆசிரியர். அவர் எனக்கு வகுப்பாசிரியராகவும் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் என் தந்தையிடம் வரும் மாணவர்களின் பெற்றோர் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் "சார் கண்ணை மட்டும் விட்டுவிடுங்கள் சார். தோல உரிச்சிடுங்க. என் பிள்ளைய படிக்க வைக்க நீங்க என்ன பண்ணினாலும் கேட்க மாட்டேன் சார்." என்று சொல்வார்கள்.
இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது.
பிள்ளைகளுக்கு ஆசிரியர் என்றால் மதிப்பு வரும்படி பெற்றோர்களே நடந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். பள்ளியில் பாடத்தைக் கவனிக்காத மாணவனை ஆசிரியர் கண்டித்தால், அன்று மாலையே "என் பிள்ளை அப்படித்தான் செய்வான். நீதான் அவனுக்குப் புரியும்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டும்" என்று கேட்கும் பெற்றோர்கள் அதிகரித்து விட்டார்கள். ஆசிரியரை ஒருமையில் அழைக்கும் பழக்கமும் அதிகரித்துவிட்டது.
மன்னாராட்சியில், நிலவுடைமைச் சமுதாயத்தில், மொகலாய அரசாட்சியில், ஆங்கில அரசாட்சியில் ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையில் பாதிகூட மக்களாட்சியில் இல்லை. இன்னும் ஜனநாயகத்தைவிட சோசலிசம், கம்யூனிசம் எல்லாம் வேறு இருக்கிறது என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலெல்லாம் ஆசிரியர்கள் நிலை என்ன ஆகுமோ தெரியவிலை.
கீழே உள்ள பத்திரிகை செய்தியைப் படித்துப் பாருங்கள். அங்கே குறிப்பிடப் படும் தலைமை ஆசிரியர் மிகவும் திறமை வாய்ந்த ஆசிரியராக இருந்து, இப்படி மன உளைச்சலுக்கு உள்ளானால் அவரது திறமை எதற்குத்தான் பயன்பட முடியும்?
நேற்று தினகரனில் ஒரு செய்தி படித்தேன். அதைக் கீழே பெட்டியில் கொடுத்திருக்கிறேன்.
சென்னை : பேனா விளையாட்டால் பள்ளி மாணவனின் கண் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகனின் மகன் கார்த்திக் (12). புரசைவாக்கத்தில் உள்ள எம்சிடிஎம் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 24ம் தேதி மாலை வழக்கம் போல மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு துள்ளிக் குதித்து உற்சாக குரல் எழுப்பியவாறு ஓட்டம் பிடித்தனர்.
அப்போது, பள்ளி வளாகத்திற்கு வெளியே கேட்பாரற்று கிடந்த பேனாவை கார்த்திக் எடுத்து, ''இது யாருடைய பேனா?'' என்று பலத்த குரலில் கத்தி கேட்டான்.
சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவன், ''அது என்னுடைய பேனா'' என்று பதில் அளித்தான். உடனே கார்த்திக் கையிலிருந்த பேனாவை தூக்கி எதிரே நின்ற மாணவனிடம் வீசினான். அப்போது, எதிர்பாராத விதமாக குறுக்கே ஓடிய அதே பள்ளியில் படிக்கும் டிபி சத்திரத்தை சேர்ந்த அரசு எழுது பொருள் கிடங்கில் எழுத்தர் ரவிச்சந்திரன் மகன் மகேஷ் (11) கண்ணில் பேனா குத்தி ரத்தம் பீறிட்டது. மாணவர்கள் இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜுக்கு தகவல் கொடுத்தனர்.அவர் விரைந்து சென்று மாணவனை மீட்டு எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
தற்போது ஆபத்தான நிலையில் தனியார் கண் மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மாணவ னுக்கு கண் பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விசாரணையில் இறங்கினர். பேனாவை தூக்கி எரிந்த மாணவன் கார்த்திக் ஏழை என்பதால் அவனை விட்டுவிட்டனர்.
ஒரு கும்பல் பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டி, பாதிக்கப்பட்ட மாணவனின் செலவை ஏற்பதாக கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதோடு பணம் கேட்டும் மிரட்டியது.
அதிர்ச்சி அடைந்த தர்மராஜ் நேற்று முன்தினம் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, ''எதிர்பாராத பேனா விளையாட்டால் மாணவன் மகேசின் கண் பாதிக்கப்பட்டுள்ளது. இது வேதனை அளிக்கிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் சிலரின் தூண்டுதலின் பேரில் போலீசார் என்னை பணம் கேட்டு மிரட்டுகின்றனர். மாணவர்களின் பேனா விளை யாட்டு பள்ளி வளாகத்திற்கு வெளியே நடந்துள் ளது. இதற்கு நான் என்ன செய்ய முடியும். மாணவனின் கண்ணில் காயம் பட்டது எதிர்பாராத விபத்து'' என்று கூறினார்.
இதற்கிடையில் பள்ளி தலைமை ஆசிரியரான தர்மராஜ் மீது மெத்தனமாக இருத்தல், பலத்த காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கேட்டபோது, ''பள்ளி நிர்வாகத்தை நம்பித்தான் மாணவர்களை படிக்க அனுப்புகிறோம். பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
- நன்றி தினகரன் 2.6.2012
ஒரே அடியாக ஆசிரியர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று கருதாதீர்கள். அன்று இருந்தது போல் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர்களும் இல்லை என்பதுதான் உண்மை. ஆசிரியர்ப்பணியைச் சேவையாகக் கருதாமல், தொழிலாகக் கருதும் ஆசிரியர்களே அதிகம் உள்ளனர்.
ஒரு பெண் ஆசிரியை சிறுவனை அழைத்துக் கொண்டு ஓடும் அவலம் ஆசிரியர் தொழிலுக்கே அவமானமாகும்.
தன்னிடம் கல்வி பயிலும் மாணவர்களைத் தன் குழந்தைகளாக பாவிக்கும் ஆசிரியர்களே நாட்டுக்கு மிகவும் அவசியம். அதே போல பிள்ளைகள் ஆசிரியர்களை மதிக்கும் அளவு நடந்து கொள்ளும் பெற்றோர்களும் நாட்டுக்கு மிக மிக அவசியம்.