"என்னடா பேரு இது மாடசாமி, குப்புசாமினு? ஸ்டைலா ராபர்ட், ரிச்சர்ட்னு வச்சா எப்படி இருக்கும்? இந்த மாதிரி பேருலாம் வச்சிருந்தா எந்தப் பொண்ணுதாண்டா ஒன்னத் திரும்பிப் பாக்கும்'' கோபமாகக் கேட்டான் பீட்டர்.
"டே நேத்து வரைக்கும் நீயே தண்டபாணிதான். இன்னிக்கு பீட்டர்னு பேர் மாத்திட்டா ஆச்சா?" என்றான் மாடசாமி
"நாங்கதான் மதம் மாறிட்டம்ல. எங்க சர்ச்ல இந்தப் பேரு கொடுத்தாங்க, இனி என்னை ஸ்டைலா பீட்டர்னே கூப்பிடு''
"ஏன்டா இவ்வளவுநாளா தண்டபாணின்னு கூப்பிட்டுட்டு, இப்படி திடீர்னு மாத்துணா எப்படிடா கூப்பிடுறது? என்னால முடியாது''
"உனக்கு பொறாமைடா அதான் மாட்டேன்ற, வேணும்னா நீயும் மதம் மாறி பேர மாத்திக்கோ. இதுக்குப் போயி ரொம்பதா அள்ட்ற"
"டே பேருக்காடா மதம் மாறச் சொல்ற. என்ன கொடுமடா இது"
"அது இல்லடா, இவ்வளவு நாள் நம்ம கும்பிடுறது எல்லாம் பேய் பிசாசாம்டா, நீ மட்டும் மதம் மாறிட்டா நம்ம ஏசப்பா எல்லா பேயையும் விரட்டிடுவாரு''
"டே மாடசாமின்றது என்னோட குல தெய்வம் பேரு மட்டுமில்லடா, எங்கத் தாத்தா ஞாபகார்த்தமா எங்கப்பா வச்சாரு? யாரோ ஒருத்தருக்காக ஏன்டா அந்தப் பேர மாத்தணும்."
"அப்ப போப்பா எங்கள எல்லாம் யேசப்பா காப்பாத்திடுவாரு, நீங்கதான் மாட்டிட்டு முழிக்கப்போறீங்க"
"நாங்க என்னடா தப்பு செஞ்சுட்டோம் மாட்டிட்டு முழிக்க''
"பின்ன பேயக் கும்பிட்டா யேசப்பா மன்னிப்பாரா?''
"டே நம்ம சாமிதாண்டா உண்மை. யேசப்பா நல்லவருதாண்டா, ஆனால் அவரு வேற நாட்டு சாமிடா"
"டே உனக்கு விஷயமே தெரியாதா? ஐயருங்க கொண்டு வந்த மதத்துல உள்ள சாமிங்களதான்டா நாம கும்பிட்டிட்டிருந்தோம். அவனுங்க ஏதோ ரொம்ப தூரத்துல இருக்கிற நாட்டுல இருந்துதான் வந்தானுங்களாம். அவங்கதான் இந்தப் பேய் பிசாசங்களக் கும்பிடுவாங்களாம். அப்படிப் பாத்தா நாமெல்லாம் இந்துவே இல்லைடா.''
மாடசாமி நினைத்தான் "நான் இந்துவா?"
மேற்சொன்ன கதை சிறு பிள்ளைகள் உரையாடலா இருந்தாலும், நான் இந்துவா? இது அனைத்து இந்துக்களின் மனதிலும் என்றேனும் ஒரு நாளாவது எழுந்திருக்கும் கேள்விதான். நாம கும்பிடும் சாமி மாடசாமி, இந்துமதப் புராணங்களில் ஒன்றிலும் இல்லையே. நாம் இந்துதானா? அவங்க கும்புடுறது வேற மாதிரி இருக்கு, நாம கும்பிடுறது வேற மாதிரி இருக்கு இப்படியெல்லாம் பலபேருக்கு பல குழப்பங்கள் இருக்கும்.
இப்படி பீட்டர்களின் பீட்டர்த்தனங்களில் ஏமாந்து பாம்பாட்டியின் மகுடத்திற்கு மயங்கும் பாம்பாக நாம் தலையை ஆட்டிக் கொண்டே இருக்கிறோம்.
அண்மையில் அந்நியமதங்கள் சிறுபான்மையா? என்ற பதிவிற்கு நண்பர் ஒருவர் இட்டிருந்த மறுமொழிக்கு, மற்றுமொரு புதிய பதிவாக அந்நியமில்லையா கிறிஸ்தவம்? என்ற பதிவை எழுதினேன். அடுத்தநாளே ஆண்டாளைப் பற்றிய சர்ச்சை வரவே. அதுகுறித்து மறுவாசிப்பாம் "நோன்பு" என்றப் பதிவை எழுதினேன்.
இந்த மூன்று பதிவுகளிலும் உள்ள கருத்தொற்றுமையைக் கவனித்தபோது, நாம் எழுதும் கருத்தை எங்கோ படித்தோமே என மனதில் எண்ணம் ஓடியது. திரு.ஜெயமோகன் அவர்களது வலைத்தளத்தை தினமும் படிக்கும் பழக்கம் எனக்கிருப்பதால், இன்று இந்துத்துவ முத்திரை என்ற அவரது பதிவைப் படித்துவிட்டு கீழே பார்க்கும்போது நான் இந்துவா? பதிவு கிடைத்தது. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு, அதில் திரு. காளிராஜ் கேட்டிருக்கும் கேள்வியைப் பாருங்கள் அப்படியே நம்ம மாடசாமிதான். ஆகவே, திரு.ஜெயமோகன் அவர்களின் பதிலைக் கவனியுங்கள். நமது தண்டபாணியை யார் இப்படியெல்லாம் பேச வைக்கிறார்கள் என்பது புரியும். (வசதியான பெரிய எழுத்துருவில் படிக்க வேண்டுமென்றால் திரு.ஜெயமோகன் அவர்களது வலைத்தளத்திற்கே (http://www.jeyamohan.in/?p=21656)சென்று படிக்க வேண்டுகிறேன்)
Oct 15, 2011
அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது.
முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற புறச்சக்தியின் மேல் நம்பிக்கை இல்லை. இது திராவிடக் கழக புத்தகம் படித்தும் ஏற்பட்டதல்ல. முழுக்க முழுக்க என்னுடைய சொந்த மனக்குழப்பத்தாலும், அதன் மூலம் எழுந்த சிந்தனையாலும் ஏற்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களின் சிந்தனைகளைப் படித்து அந்தக் கடவுள் என்ற வெளிசக்தி (external field) இல்லை என்ற உணர்வில் உறுதி ஏற்பட்டது. இதை சொல்வதற்குக் காரணம் நான் வறட்டு நாத்திகம் பேசுபவன் அல்ல என்பதை உணர்த்துவதற்காகவே.மற்றபடி பாரதியின் ‘காணும் இடமெல்லாம் நான்’ என்னும் கோட்பாடு, ஐன்ஸ்டினின் ‘உலகம் ஒரு சுழற்சி’, ராமகிருஷ்ணரின் ‘நிர்சலனம்’ என்ற உணர்வு ஆகியவை புரியாவிட்டாலும் அவைகளில் உள்ளவைகளை என்னால் இப்போதைக்கு மறுக்க முடியவில்லை. புரியாததால் அல்லது அனுபவிக்காததால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை. இப்போதைக்கு அவற்றை மதிக்க மட்டுமே முடிகிறது.
வேதங்களும், உபநிடங்களும் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் இப்போதைக்கு இல்லை.
என்னுடைய இந்தக் கடிதம் அது குறித்தான என்னுடைய முயற்சியின் முதல் கட்டம் என்றே நினைக்கிறேன். கேள்வி நேரடியாக இல்லாவிட்டாலும், எனக்குத் தெரியும் பதில் அதை நோக்கிய பயணமாகவே இருக்கும். கேள்விக்கே வருகிறேன். நான் ஏன் இந்து?. எனக்கு அது தாய் மதமா அல்லது அந்நிய மதமா?. அதுதான் இந்து மதத்தின் சக்தி என்று தயவு செய்து எல்லாரையும் போல் நீங்களும் சொல்ல வேண்டாம். (எனக்கு இது அபத்தமாகவே படுகிறது, பைபிளில் இப்போது ஒரு அதிகாரத்தை உருவாக்கி அதில் கருப்பசாமியைப் பற்றி எழுதி விட்டால் நான் கிறிஸ்துவன் ஆகி விடுவேனா? என்பது போல் கேள்விகளை எனக்குள் அவை எழுப்பும்.).
இந்து என்பதை வரையறுக்க முடியவில்லை என்ற ஒரு காரணமோ அல்லது அரசியல் அமைப்பு சட்டத்தில் புத்த, கிறிஸ்துவ, முஸ்லிமாக இல்லாதவர்கள் இந்து என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
எனக்கும் சக இந்துவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? மொழியில்லை, பொது உணவு இல்லை, பொது வழக்கம் (வழிபடுவதில் கூட) இல்லை, ஏன் பொதுக் கடவுளே கூட இல்லை. இதுதானே உண்மை?எனக்குத் தெரிந்து எனது தாத்தாவின் தலைமுறையில் குலதெய்வ வழிபாட்டைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை (அல்லது அவர்கள் சொல்லியும் கேட்டதில்லை). என் தலைமுறையில்தான் எங்கேயோ இருக்கும் திருப்பதியிலும், சபரிமலையிலும் இருப்பதைக் கடவுள் என்று எண்ணும் போக்கு என் போன்ற கிராமத்தின் வழி வந்தவர்க்கு ஏற்பட்டிருக்கிறது. திருச்செந்தூர் முருகன் வழிபாடு கூட நிறைய பிரசித்தி இல்லை, ஒரு தலைமுறைக்கு முன் வரை.
எனக்குத் தெரிந்து என் கிராம மக்கள் வணங்கியது இதுவரை கருப்பசாமி, சுடலைமாடன், கன்னியம்மன் போன்ற கிராம தெய்வங்கள்தான். மிஞ்சிப் போனால் இருக்கன்குடி கோவிலுக்குக் கடா வெட்ட சென்று வருவார்கள், அவ்வளவுதான். இவர்கள் (என்னையும் சேர்த்து) அனைவருக்கும் ராமாயணம் கதையாக மட்டுமே தெரிந்திருக்கிறது (அதுவும் கம்பரால், அல்லது பட்டி மன்றங்கள் மூலமாகவா என்று தெரிய வில்லை). எங்கள் கிராமத்தில் சுற்றியோ அல்லது எளிதில் அடையக் கூடிய தொலைவிலோ எந்த சிவன் கோவிலும், ராமர் கோவிலும் இல்லை (அல்லது இருந்தது இல்லை). எனக்குத் தெரிந்து என் மூதாதையரில் கீதையோ, வேதமோ படித்தவர்களோ அல்லது படிக்க நினைத்தவரோ கூடக் கிடையாது.
இப்போது என் கேள்வி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு இருந்தும் நான் ஏன் இந்து? அல்லது இந்து என்ற மதமும் பிற அந்நிய மதங்களை என் மேல் திணிக்கப்பட்ட மதமா?
அது எங்கிருந்து என்னை நோக்கி வந்த மதம்? கிறிஸ்துவத்திற்கும், இஸ்லாமிற்கும், பௌத்தத்திற்கும், இந்து மதத்திற்கும் தூரங்கள் மட்டும்தான் வித்யாசமா? ஒரு வேளை அது சமீப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வு என்றால், அதற்கு முன் என் மூதாதையர்களுக்கு எந்த மதமும் கிடையாதா? அவர்களுக்கு என்று எந்த வழிபாட்டு முறையும் கிடையாதா?. மனிதனின் ஆதி காலத்தில் மதம் இருந்திருக்காது, எல்லா மதங்களுமே பிற்பாடு வந்ததுதான் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
என் கேள்வி என்னுடைய கிராமத்திற்கு என்று தனிப்பட்ட வழிபாட்டு முறை இல்லையா? அல்லது கூடிய விரைவில் இல்லாமல் போகுமா?. இப்போது என் தலைமுறையில் நான் பார்க்கும் முக்கியமான மாற்றம் கோவிலில் படைக்கும் உணவு குறித்தது. படித்த (அல்லது அப்படி கூறிக்கொள்ளும்) வட்டம் கோவிலில் அசைவம் சாப்பிடுவதைப் பாவம் போல் பார்க்கத் தலைப்படுகிறது. அவர்களுக்குப் பெரிய கோவில்கள் எனப்படும் கோவில்கள்தான் அழகுடனும், சக்தியுடனும், தெய்வாம்சத்துடன் இருப்பதாகத் தோன்றுகிறது. நம்ம சாமிக்குப் பிடிச்சத நம்ம படைக்கிறோம் என்ற என் வாதம் அங்கு எடுபடவில்லை. (முற்றிலுமாக உடல்நலத்தைக் காரணம் காட்டி நான் அசைவத்தை மறுப்பதை ஆதரிக்கிறேன். ஆனால் இது வேறு. வீட்டில் சாப்பிடுவார்கள். ஆனால் கோவிலில் ஒரு குற்ற உணர்வோடுதான் சாப்பிடுவார்கள் அல்லது மறுப்பார்கள்).
அதே போல நீத்தார் கடன் கொடுக்கு வழக்கம் எனக்குத் தெரிந்து என் தாத்தாவோ, பாட்டியோ செய்ததில்லை. இறந்த பதினாறாம் நாள் காரியம் செய்ததோடு சரி என்பது அவர்களிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது. இப்போது அந்த வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த மாற்றங்கள் நல்லதா தீயதா என்பதல்ல என் கேள்வி. என் கேள்வி கீதையும், வேதங்களும் எனக்கு பைபிள் அல்லது குரானைப் போல மட்டும்தானா? அல்லது எனக்கும் இவைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதுதான்.
தெளிவாகக் கேட்டு விட்டேனா என்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அன்புடன்,
காளிராஜ்.
காளிராஜ்.
அன்புள்ள காளிராஜ்,
தமிழ்நாட்டில் ஏராளமான படித்த அடித்தளப் பின்னணி கொண்ட இளைஞர்களிடம் உள்ள குழப்பம்தான் இது. இந்தக்குழப்பம் சென்ற பல வருடங்களாக திராவிட இயக்கங்களாலும் இடதுசாரிகளாலும் வளர்க்கப்படுகிறது. அவர்களுக்குப்பின்னால் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு பெரும் நிறுவன வலிமையுடனும் பணபலத்துடனும் செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்கள் இந்த ஐயத்தை ஒரு கருத்துநிலையாக மாற்ற முயல்கிறார்கள்.
ஓர் உதாரணம் சொல்கிறேன், தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாடு இந்துமதத்துடன் இணைந்ததல்ல, இந்துமதத்துக்கு எதிரானதும்கூட என்ற குரலைப் பகுத்தறிவு பேசிய இடதுசாரிகளும் திராவிட இயக்க அறிவுஜீவிகளும் திடீரென்று வலுவாக எழுப்ப ஆரம்பித்தது தொண்ணூறுகளில்தான்.அதற்கு முன்னால் ஒட்டுமொத்தமாகவே அவற்றை மூடநம்பிக்கை என்றே சொல்லிவந்தார்கள்.
அந்த மாற்றம் நிகழக் காரணம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை ஃபாதர் ஜெயபதி என்பவரின் முன்னெடுப்பில் நடத்திய ’சனங்களின் சாமிகள்’ என்ற பத்துநாள் கருத்தரங்கம். அந்தக் கருத்தரங்கிலே நாட்டார்சாமிகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சாமிகள், இந்துமதம் ஒடுக்கும் சாமிகளின் மதம் என்ற பிரிவினை மிக எளிதாக நம் அறிவுஜீவிகளுக்குள் திணிக்கப்பட்டது. இதற்காகக் கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
அதைப்பற்றி நம் இடதுசாரி அறிவுஜீவிகளில் ஒருவரான ச.தமிழ்ச்செல்வன் சொல்வதைப் பாருங்கள். ‘பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் துடிப்போடு இயங்கிய அந்த நாட்களில் பத்துநாள் ’சனங்களின் சாமிகள்’ பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.அந்தப் பத்துநாட்கள் என் வாழ்வில் புதிய திருப்புமுனையான நாட்கள்.தெய்வங்கள், கடவுள்கள் பற்றிய புதிய பார்வையை அக்கருத்தரங்கு எனக்கு வழங்கியது. http://satamilselvan.blogspot.com/2009/04/blog-post_04.html கவனியுங்கள். தன்னுடைய சொந்தக் குலதெய்வங்கள் , தான் வாழும் சமூகம் பற்றிய வரலாற்றை யார் எங்கிருந்துகொண்டுவந்து கொடுக்கவேண்டியிருக்கிறது இந்த அறிவுஜீவிகளுக்கு என்று.
இந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களிடம் இந்த அறிவுஜீவிகள் ஒன்றை மட்டும் கேட்கவில்லை. அந்த அமைப்பாளர்களின் மதம் அந்த சிறுதெய்வ வழிபாட்டை ஆதரிக்கிறதா, அவர்களின் மதத்துக்கு மாறியவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டைத் தொடர அனுமதிக்கிறதா, முன்பு அவர்களிடம் மதம் மாறியவர்களின் குலதெய்வங்கள் என்னாயின, அப்படியென்றால் அச்சிறுதெய்வங்களை ஒடுக்கி அழிக்கும் உண்மையான ஒடுக்குமுறைமதம் எது? ஒரு மாணவர் மட்டும் எழுந்து அதைக் கேட்டார், அவர் வெளியேற்றப்பட்டார்.
நீங்கள் கேட்கும் இந்த கேள்வி உங்களை அறியாமல் உங்களுக்குள் விதைக்கப்பட்டுத் தொடர்ந்த பிரச்சாரம் மூலம் வளர்க்கப்படுவது, அதைச்செய்பவர்கள் மதமாற்ற சக்திகள் என்பதையே சுட்டிக்காட்டுகிறேன். படிக்கும் வழக்கமுள்ள உங்களுக்கு இருக்கும் இந்த ஐயமும் சஞ்சலமும் படிக்காத உங்கள் தந்தைக்கு இருக்காது. அவருக்கு அவர் இந்துவா இல்லையா என்பதில் ஐயமே இருக்காது. உங்கள் கேள்விக்கான பதிலை இந்தப் பின்னணியை விளக்காமல் சொல்லமுடியாது என்பதால் இதைச் சொல்ல நேர்கிறது.
உங்கள் கேள்வியின் அடித்தளம் என்பது மதம் என்பதற்கு நீங்கள் கொடுக்கும் வரையறை சார்ந்தது. மதம் என்றால் உறுதியான இறைக்கோட்பாடு, திட்டவட்டமான நிறுவன அமைப்பு, தெளிவாக எல்லை வகுக்கப்பட்ட ஆசாரங்கள் ஆகியவற்றைக்கொண்டதாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாம் இன்று காணும் பெரும்பாலான மதங்கள் அப்படித்தான் உள்ளன. ஆனால் எல்லா மதங்களுக்கும் இது பொருந்தாது. மதம் என்பதை இன்னமும் விரிவான நெகிழ்வான வரையறையுடன் புரிந்துகொண்டால்தான் நம்மால் இந்தியவரலாற்றை மட்டுமல்ல, ஆசிய ஆப்ரிக்க வரலாறுகளையும் புரிந்துகொள்ளமுடியும்.
தெளிவான மையமும் அதைச்சார்ந்த அமைப்பும் கொண்டவை இருவகை மதங்கள். ஒன்று யூதமதம்போல இனமதங்கள். யூதம் என்பது ஒரு இனம். அந்த இனத்தவரின் நம்பிக்கையே யூதமதம். அதற்குப் பிற இனத்தவர் மதம் மாறமுடியாது. பல ஆப்ரிக்கக் குறுமதங்கள் இவ்வகைப்பட்டவை. இந்த மதங்கள் தெளிவான எல்லை வரையறை கொண்டவையாக இருக்கும். இனமதங்களின் எல்லை இன அடையாளமே. அதற்கு வெளியே உள்ளவர்கள் அவர்களைப் பொறுத்தவரை அன்னியர் அல்லது பிறர். இனமதங்கள் மதமாற்றம்செய்வதில்லை.
இரண்டாவதாக தீர்க்கதரிசன மதங்கள். அந்த மதங்களை நிறுவிய தீர்க்கதரிசி அந்தமதத்தின் மையத்தையும் எல்லைகளையும் தெளிவாக வரையறைசெய்திருப்பார்.ஆபிரகாமிய மதங்களைப் பொறுத்தவரை ’நானே உண்மையான வழிகாட்டி, பிற எல்லாமே பொய்யனாவை’ என்ற வரியை தீர்க்கதரிசி சொல்லியிருப்பார், அல்லது சொன்னதாக எழுதப்பட்டிருக்கும். கிறிஸ்தவம், இஸ்லாம், மானிகேயன், பகாயி, அகமதியா மதங்களை இவ்வகையில்சேர்க்கலாம். இன்றும் இவ்வகை மதங்கள் தோன்றியபடியே உள்ளன
இந்த மதங்கள் தங்கள் மதநிறுவனர் மற்றும் அவரது நூல் மீதான முழுமையான நம்பிக்கையை விசுவாசிகளிடம் கோரும். அதை ஏற்காத அனைவரும் அன்னியர் அல்லது பிறர் என வரையறைசெய்யப்பட்டிருப்பார்கள். அந்தப் பிறர் அவர்களின் சொந்த நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் முழுமையாகக் கைவிட்டுத் தங்களுடன் இணைய வேண்டுமென அவை வற்புறுத்தும். அதற்கான எல்லா முயற்சிகளையும் அந்த மதங்கள் செய்யும். அந்தக் கடமை ஒவ்வொரு விசுவாசிக்கும் அறைகூவப்பட்டிருக்கும். அதனடிப்படையிலேயே அவை வளர்கின்றன.
இவ்விரு வகை மதங்களுக்கும் அப்பால் வேறு இரு வகை மதங்கள் உண்டு. ஒன்று தத்துவ மதங்கள். உதாரணம், பௌத்தம் சமணம் போன்றவை. அவையும் தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்டவையே. ஆனால் அவை நம்பிக்கையை முன்வைப்பதில்லை, தத்துவத்தையே முன்வைக்கின்றன. அவை முன்வைக்கும் இறைவன் கூட ஒரு தத்துவ உருவகமே. அவர்களின் பிரபஞ்சவிவரணை நம்பிக்கை சார்ந்தது அல்ல, தத்துவம் சார்ந்தது. அந்த தத்துவத்தை முழுமையாக நம்பி ஏற்கவேண்டுமென அவை சொல்வதில்லை. மாறாக அந்தத் தத்துவத்துடன் விவாதிக்க அறைக்கூவுகின்றன. கன்ஃபூஷிய மதம், தாவோ மதம் போன்றவையும் இவ்வகைப்பட்டவையே
தீர்க்கதரிசன மதங்கள் பரவுவதற்கும் தத்துவ மதங்கள் பரவுவதற்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. தீர்க்கதரிசன மதங்கள் பிறரிடம் அவர்களின் பழைய நம்பிக்கைகளை, ஆசாரங்களை முழுக்க உதறிவிட்டுத் தங்களிடம் வரும்படி சொல்கின்றன. முழுமையான நம்பிக்கையுடன் தாங்கள் சொல்வதை முழுக்க ஏற்றுக்கொள்ளும்படி ஆணையிடுகின்றன. நீங்கள் கிறித்தவராகவோ இஸ்லாமியராகவோ ஆனால் உங்கள் பழைய மதத்தின், குலதெய்வங்களின், ஆசாரங்களின் எந்த அம்சத்தையும் மிச்சம்வைத்துக்கொள்ள முடியாது. கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கைகளில் சிறிதளவேனும் ஐயம் கொள்ளமுடியாது.
ஆனால் தத்துவமதங்கள் அப்படிச் சொல்வதில்லை. உங்கள் சிந்தனையிலும் வாழ்க்கைமுறையிலும் அந்தத் தத்துவத்தை உள்வாங்கிக்கொள்வதையே அவை முன்வைக்கின்றன. சமணத்தின் ஐந்து ஆசாரங்களையும், அடிப்படை நெறியாகிய பிரபஞ்ச சுழற்சியையும் ஏற்றுக்கொண்டாலே ஒருவர் சமணராகலாம். அவர் அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு அவர் குலதெய்வத்தை வழிபடலாம். ஆசாரங்களைக் கடைப்பிடிக்கலாம்.அதாவது அவை பரப்புவது மதத்தை அல்ல, தத்துவத்தை
ஆகவேதான் பௌத்தமதத்தை எடுத்துப்பார்த்தால் இலங்கை பௌத்தமும் திபெத்திய பௌத்தமும் ஆசாரங்களிலும் நம்பிக்கைகளிலும் வேறு வேறாக இருக்கிறது. தாவோ மதத்தைச் சேர்ந்தவர் பௌத்தராகவும் இருக்கமுடிகிறது. ஷிண்டோ மதத்தை லௌகீகத்துக்கும் பௌத்தத்தை ஆன்மீகத்துக்கும் ஜப்பானியர் பயன்படுத்தமுடிகிறது. ஆனால் சாராம்சமாக ஓடுவது பௌத்த தத்துவதரிசனம்தான். பௌத்தம் செய்வது மதமாற்றம் அல்ல தத்துவப்பரிமாற்றம்.
இன்னொருவகை மதங்களைப் பொதுவாகத் தொகைமதங்கள் எனலாம். இந்துமதமே அதற்கு உலக அளவில் சிறந்த உதாரணம். ஜப்பானிய ஷிண்டோ மதம் சற்றே சிறிய ஒரு உதாரணம். இவை மையமான ஒரு தீர்க்கதரிசனமோ அல்லது மையமான ஒரு தத்துவமோ கொண்டவை அல்ல. இவை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச்சூழலால் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கின்றன.
இந்த மதங்களை நாம் ஆபிரகாமிய தீர்க்கதரிசன மதங்களுடன் வழக்கமாக ஒப்பிடுகிறோம். ஆகவே இவற்றின் மையத்தரிசனம் என்ன, மையநூல் எது, இவை உருவாக்கும் ‘பிறர்’ யார் என்றெல்லாம் கேட்க ஆரம்பிக்கிறோம். நாமே இந்த மதங்களின் மையமும் எல்லையும் இதெல்லாம்தான் என முடிவெடுக்கிறோம். உடனே இதனுள் உள்ள பிறர் யார் என்று குழம்ப ஆரம்பிக்கிறோம். உங்கள் கேள்வியில் இருப்பதும் அந்தச் சிக்கலே.
தொகைமதங்களுக்கும் அதற்கு முன்னர் சொல்லப்பட்ட இனமதங்கள், தீர்க்கதரிசன மதங்கள், தத்துவ மதங்கள் ஆகியவற்றுக்கும் இடையே என்ன வேறுபாடு? பிற மூன்று மதங்களும் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பித்து விரிந்துகொண்டே இருப்பவை என்பதுதான். இனமதம் இனம்சார்ந்த ஒரு சுய அடையாளத்தை மையமாகக் கொண்டுள்ளது. தீர்க்கதரிசன மதங்கள் அந்த தீர்க்கதரிசியின் மெய்யியலை மையமாகக் கொண்டுள்ளன. தத்துவ மதங்கள் அந்த தத்துவதரிசனத்தை மையமாகக் கொண்டுள்ளன.
அந்த மையத்தை அவை பல்வேறு பிற நம்பிக்கைகளுடன், பிற சிந்தனைகளுடன் உரையாடச்செய்கின்றன. தீர்க்கதரிசன மதங்கள் அந்த பிற நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் வென்று அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன. தத்துவ மதங்கள் அந்த பிற நம்பிக்கைகளையும் பிற சிந்தனைகளையும் தத்துவார்த்தமாக ஊடுருவி அவற்றின் மையத்தை மாற்றியமைத்துத் தன்னுடன் இழுத்துச்செல்கின்றன. அதாவது இரு வகைகளிலும் ஏற்கனவே இருந்த ஒரு மையமானது விளிம்புகள் நோக்கி பரவுகிறது.
உதாரணமாக சமணம் தென்னகத்துக்கு வந்தபோது இங்கிருந்த நாகவழிபாடு செய்யும் நாகர்களிடம் பரவியது. நாகர்களை அது சமண தத்துவத்தை ஏற்கசெய்தது. நாகர்களின் நாகவழிபாடு சமணத்தின் ஒரு பகுதியாக ஆகியது. பார்ஸ்வநாதரின் தலைக்குமேல் உள்ள ஐந்துதலை நாகம் நாகர்களின் கடவுள்தான். நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோயில் அவர்களுடைய கோயில்.
ஆனால் தொகை மதங்கள் அவ்வாறு முன்னரே தீர்மானிக்கப்பட்ட மையப்புள்ளி இல்லாதவை. அவை மிகமிகத் தொன்மையானவை என்பதனால் பெரும்பாலும் அவற்றின் மூலம் என்ன,தோன்றிய இடமென்ன என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களின் பழங்குடி மரபுகளும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் இணைவதன்மூலமாகத் தொகைமதங்கள் உருவாகின்றன என்று சொல்லலாம்.
ஒரு விரிந்த நிலப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் அவர்களின் வாழ்க்கையில் இருந்து தனித்தனியான வழிபாட்டுமுறைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். அவற்றை மதம் என்று சொல்லமுடியாது. அந்த மக்கள் பிற மக்கள் திரளுடன் தொடர்ந்து நெடுங்காலமாக உறவாடும்போது அவர்களின் நம்பிக்கைமுறைகள் உரையாடுகின்றன. கொண்டும் கொடுத்தும் வளர்கின்றன. இவர்களுக்குள் ஒரு பொதுமையம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதாவது மையம் இணைப்பின் மூலம் புதியதாக உருவாகிறது. இன்னொரு வழிபாட்டுமுறை இணையும்போது மூன்றுக்கும் பொதுவான மையம் உருவாகிறது.
இப்படி நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான வழிபாட்டுமுறைகள் இணைந்து இணைந்து தொகைமதம் உருவாகிறது. பெரும்பாலும் தொகைமதங்கள் அந்த இணைப்புச்செயலிலேயே தொடர்ந்து இருக்கின்றன. ஆகவே அவற்றின் மையம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த மக்களுக்குள் எந்தப் பிரிவு கருத்தியல் செல்வாக்குடன் இருக்கிறதோ, எது அதிகாரத்துடன் இருக்கிறதோ அதை நோக்கி மையம் நகர்கிறது.
இந்துமதம் என நாம் சொல்லும் இன்றுள்ள அமைப்பு ஆரம்பகாலம் முதலே இன்றுள்ள தொகைமதம் என்ற வடிவிலேயே உள்ளது. இந்துமதத்தின் மிகப்பழைமையான நூலான ரிக்வேதமே கூட இந்தத் தொகுப்புத்தன்மைக்கான உதாரணம்தான். அது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை அல்லது ஆசாரத்தை அல்லது தத்துவத்தை முன்வைப்பது அல்ல. அதில் அன்றிருந்த பல்வேறு வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் தத்துவங்களும் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று உரையாடுவதையும் இணைவதையும் நாம் ரிக்வேதத்தில் காணலாம்.
ரிக்வேதத்தின் இறுதிப்பகுதியில் இந்த இணைப்பின் விளைவாக உருவாகி வந்த ஒரு தோராயமான பொதுமையம் உள்ளது. அதை பிரம்மம் என்று சொல்லலாம். அதாவது பிரபஞ்சசாரமான கருத்தை அல்லது ஆற்றலை ஒரு அறியமுடியாமையாக உருவகித்து அதன் வெளிப்பாடாக இந்தப் பிரபஞ்சத்தை உணர்வது. இப்படி ஒரு மையம் உருவானதுமே அந்த மையத்துக்கும் வேறு மையங்களுக்குமான உரையாடல் ஆரம்பித்துவிட்டது. அதையே நாம் உபநிடதகாலகட்டத்தில் காண்கிறோம்.
இந்த உரையாடல் இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்துமதம் என்ற மையக்கட்டுமானம் பிற சிறிய கூறுகளை உள்ளிழுத்துக்கொள்கிறது என்று இதை சில இடதுசாரிகள் விளக்கினார்கள். அதையே பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளிழுக்கப்பட்டதாக இவர்கள் சொல்லும் எந்த வழிபாட்டுமுறையும் தன் சுய அடையாளத்தை இழக்கவில்லை. இரண்டாயிரம் வருடம் முன்பு அவ்வாறு உள்ளே வந்த நம்பிக்கைகளும் தத்துவங்களும் கூட அப்படியேதான் இருக்கின்றன. மையம் என்று இவர்கள் சொல்வதை வந்தவைதான் மாற்றியமைத்துள்ளன. அப்படியென்றால் அது உள்ளிழுத்தல் அல்ல. அது உரையாடலும் சமரசமும் மட்டுமே.
வரலாற்றைப்பார்த்தால் இந்துமதத்தின் மையப்பெரும்போக்கு என்பது இரண்டுமூன்று நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாகவே மாறிவிட்டிருப்பதைக் காணலாம். ஒருபுதிய மக்கள் திரள் உள்ளே வந்தால், ஒரு புதிய சிந்தனை உள்ளே வந்தால் அவர்களுடன் சமரசம்செய்துகொண்டு அது மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு நதி போல. நாம் கங்கை என்பது ஒரு நதி அல்ல, அது ஒரு நதித்தொகை. அதில் சேரும் நதிகளே அதன் திசையை வடிவை எல்லாம் தீர்மானிக்கின்றன. இந்துமதத்தில் ஒவ்வொரு தரப்பும் தாங்களே மையம் என்று சொல்லக்கூடும், ஆனால் அது எப்போதும் எல்லாம் அடங்கியதுதான்.
*
உங்கள் கேள்வியை இந்த பின்னணியில் ஆராயுங்கள். ’நான் இந்துவா?’ இந்த வினாவை சைவர்களும் வைணவர்களும் சாக்தர்களும் எல்லாம் கேட்டுக்கொள்ளமுடியும் அல்லவா? சைவ வழிபாடு வேறு வைணவ வழிபாடு வேறு அல்லவா? அப்படியானால் இந்து என்பவர் யார்? எல்லாரும் சேர்ந்தால்தான் இந்து. தனியாக இருந்தால் சைவரோ வைணவரோ சாக்தரோதான்.
இந்துமதத்தில் உள்ளதாக உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஓர் இருமையை. அதாவது பெருமதம x நாட்டார் மதம் [Theological religion x Folk religion] முரண்பாடு. இது இங்குள்ள வழிபாட்டுமுறைகளை ஆராய்வதற்கான ஒரு சமூகவியல் வழிமுறை, வெள்ளையர் உருவாக்கியது. ஆனால் இதைவைத்து இந்துமதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இங்குள்ள பெருந்தெய்வம் கொஞ்ச வருடம் முன்னால் நாட்டார் தெய்வமாக இருந்ததுதான். இன்று நாட்டார் தெய்வமாக இருப்பது பெருந்தெய்வத்துடன் இணைந்து பெருந்தெய்வமாக ஆகிக்கொண்டுமிருக்கும்.
சிவன் உங்கள் கருப்பசாமியைப்போல ஒரு நாட்டார் தெய்வமாக இருந்தவர்தான். இன்று சுடலைமாடசாமி அருள்மிகு சிவசுடலைமாடனாக ஆகிக்கொண்டிருக்கிறார். இந்தப் பரிணாமம் நடந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் நேற்றைய கருப்பசாமியைக் கும்பிடலாம் அல்லது நாளைய சிவனைக் கும்பிடலாம். அதாவது பைபிளில் ஒரு அத்தியாயத்தில் கருப்பசாமியை சேர்த்துக்கொண்டு அவரைக் கடவுளாக ஆக்க முடியாது, அதற்கு பைபிளில் குரானில் இடமில்லை. கீதையில் முடியும். ஆம் அந்த அம்சமே தொகைமதங்களை உருவாக்குகிறது.
இனி நீங்கள் சொல்லும் தகவல்கள். அவை பெரும்பாலும் உங்களுடைய சொந்த மரபைப்பற்றிய உங்கள் அறியாமையையே காட்டுகின்றன. உங்களுக்குப் பெரும்பாலும் உங்கள் ஊர், தெய்வங்கள், வழிபாட்டுமுறை எதைப்பற்றியும் தெரியாது. நீங்கள் மற்ற எல்லா இளைஞர்களையும்போல இதிலெல்லாம் ஆர்வமில்லாமல் வளர்ந்து நகருக்கு வேலைக்கு வந்திருப்பீர்கள். அதன்பின் நீங்கள் அங்கே இங்கே படித்தறிந்த ஒரு கிராமத்தை கற்பனை செய்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்
உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா? நாட்டார் தெய்வங்கள், அதிலும் குறிப்பாக நெல்லைகுமரி மாவட்ட நாட்டார் தெய்வங்கள் மற்றும் குலதெய்வங்கள் அனைத்தையும் நான் விரிவாகவே அறிவேன். நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களுடன் பத்தாண்டுகளாக நெருங்கி உரையாடி வருகிறேன். உங்கள் கிராமத்துக்கு மட்டுமே உரியவை ஒரு சில குலதெய்வங்கள் மட்டுமே. கருப்பசாமியும் மாடசாமியும் கன்னியம்மனும் மதுரைவீரனும் முத்துப்பட்டனும் எல்லாம் தெற்கத்திச்சீமை முழுக்க உள்ள தெய்வங்கள்.
இந்த தெய்வங்கள் அனைத்துக்கும் எழுதப்பட்ட வரலாறுகள் முந்நூறாண்டுகளாகவே கிடைக்கின்றன. நாட்டார் வாய்மொழி மரபில் அதற்கும் முன்னதாகவே இந்த தெய்வங்களைப்பற்றிய கதைகள் உள்ளன. சுடலைமாடசாமி கதைப்பாடல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கருப்பசாமி வில்லுக்கதை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நீங்கள் வாசித்துப்பார்க்கலாம். தென்னகத்து நாட்டார் தெய்வங்கள் அனேகமாக அனைத்துமே சைவ மரபைச் சேர்ந்தவை. இத்தெய்வங்களின் தெய்வமாக சிவன் சொல்லப்பட்டிருப்பான். அல்லது சிவனிடம் வரம் வாங்கி அவை தெய்வமாக ஆகியிருக்கும். அந்த தெய்வங்களைப்பற்றிய வில்லுப்பாட்டுகள் , கணியான்முடியேற்று முதலியவற்றில் அந்தக் கதைகள் இன்றும் பாடப்படுகின்றன.
நம் பண்பாட்டில் தெய்வங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு நாட்டார்தெய்வம் உருவாவதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, குறியீட்டு தெய்வம். அதாவது ஒரு நோயை குணப்படுத்த அல்லது விளைச்சலை அதிகரிக்க வழிபடப்படும் சிறுதெய்வம். மரங்கள் பாறைகள் ஆறுகள் போன்றவற்றை வழிபடுதல். இரண்டு, நீத்தார் வழிபாடு. அருங்கொலை செய்யப்பட்டவர்கள், போரில் இறந்தவர்கள் பிரசவத்தில் இறந்தவர்கள் போன்றவர்களின் நினைவைப் போற்றும்முகமாக அவர்களை தெய்வமாக ஆக்குதல். மூன்று மூத்தார் வழிபாடு, குலமூதாதையரைக் கடவுளாக்குதல். சாமியார்களை அடக்கம்செய்யுமிடங்கள் கோயிலாகின்றன
முதலில் இப்படி உருவாகும் தெய்வங்கள் அந்த தெய்வத்தை உருவாக்கிய ஒரு இனக்குழுவுக்குள் இருக்கின்றன. அந்த இனக்குழு பிற இனக்குழுக்களுடன் உறவாடும்போது அவை பிற தெய்வங்களுடன் இணைந்து பெருந்தெய்வங்களாகின்றன. இன்று நீங்கள் பெருந்தெய்வங்களாகக் காணும் எல்லா தெய்வங்களும் இப்படி உருவானவையே. ஒரு குடும்பத்துக்கு மட்டுமே உரிய தெய்வங்கள் மட்டுமே குலதெய்வங்களாக அவர்களுக்குள் மட்டும் நீடிக்கின்றன.
இந்த உறவாடல் ஆரம்பித்து எத்தனையோ தலைமுறையாகிவிட்டிருக்கும். சொல்லப்போனால் இங்கே ஒரு சிறுதெய்வம் உருவானதுமே அது சைவப் பொதுமரபுடன் இணைய ஆரம்பித்துவிடுகிறது. உதாரணம் சேர்மன் அருணாசல சுவாமி கோயில். ஏரலில் உள்ளது இந்த கோயில். அருணாச்சல நாடார் 1880 அக்டோபர் 2இல் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி-சிவனணைந்த அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். 1906, செப்டம்பர் 5இல் ஏரலில் பஞ்சாயத்துத் தலைவராக [chairman] பதவி ஏற்றார். திருமணம் செய்துகொள்ளவில்லை. மக்களுக்கு நன்மைகள் செய்தார். 1908 ஆடி அமாவாசையன்று இறந்தார். மக்கள் அவரைக் கடவுளாக நிறுவி வழிபட ஆரம்பித்தார்கள்
மெல்லமெல்ல சேர்மன் சாமி வழிபாடு சைவத்துடன் உரையாட ஆரம்பித்தது. சேர்மன் அருணாச்சல சாமி சிவனின் அவதாரமாக ஆனார். இன்று ஒரு முக்கியமான சைவத்தலமாக சேர்மன் அருணாசல சாமிகோயில் உள்ளது. இதுதான் இந்து மதம் உருவாகி வளர்ந்துகொண்டே இருக்கக்கூடிய விதம். இங்குள்ள எந்த வழிபாடும் இந்து மதத்துடன் உரையாடிக் காலப்போக்கில் அதனுடன் இணைந்துகொண்டே இருக்கும். இப்படி இணைவதன்மூலமே இந்துமதம் உருவாகி முன்செல்கிறது. ஒரு நிலத்தில் ஓடும் எல்லா நீரோட்டங்களும் எப்படியோ அங்குள்ள பெரிய நதியில் சென்று சேர்வது போல.
ஆகவே நீங்கள் நினைப்பது போல உங்கள் தெய்வங்கள் இந்து பொதுமரபுடன் உறவே இல்லாமல் தனியாக எங்கோ அந்தரவெளியில் நின்றுகொண்டிருக்கவில்லை. நீங்கள் இந்து மதத்தின் பொது அமைப்புடன் உரையாடாமலும் இல்லை. அது உங்களுக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான். குலதெய்வங்கள் கூட அந்தக்குலம் சற்றே பெரிதாக பரவி விரிந்தால் இந்து பொது வழிபாட்டு மரபுக்குள் இணைந்துவிடும். பிறதெய்வங்கள் அனைத்துக்குமே இந்து மரபு சார்ந்த ஒரு வரலாற்று விளக்கம் இருக்கும். மறுமுறை செல்லும்போது விசாரித்துப்பாருங்கள்.
நம்முடைய சிறுதெய்வங்களைப்பொறுத்தவரை ஊரில் சிலரே அவற்றைப்பற்றிய அறிதலுள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்கு அக்கறை கிடையாது. இதற்கு என்ன காரணமென்றால் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கே நிகழ்ந்த பெரும் பஞ்சங்களால் உருவான பண்பாட்டுப்பின்னடைவு. நம்மில் பெரும்பாலான குடும்பங்கள் அப்போது இடம்பெயர்ந்தவர்களாக இருப்போம். குலத்தின் வேர் வேறெங்கோ இருக்கும். விளைவாகக் குலதெய்வங்கள் கைவிடப்பட்டு மறக்கப்பட்டன. பாரம்பரிய வழிபாட்டுமுறைகள் அழிந்து போயின. மரபார்ந்த கதைகளும் ஞானமும் அழிந்தன. சென்றடைந்த இடங்களின் எளிய சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சின. நம்முடைய அப்பா தாத்தாக்கள் ஒரு பண்பாட்டு வெறுமையில் இருந்து மெல்ல அந்தந்த ஊர்களில் வேர்பிடித்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்காது.
உங்கள் மதம் எது என்பதில் என்ன ஐயம்? காளிராஜ் என்பது வேறெந்த மதத்தைச் சேர்ந்த பெயர்? காளி ஒரு இந்து தெய்வம் என்றாவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.திருசெந்தூர்கோயில் பற்றிச் சொன்னீர்கள். மிக எளிதாகவே இதை அறிய முடியும். உங்கள் சாதிக்குத் திருச்செந்தூர் திருவிழாவில் மண்டகப்படி போன்ற ஏதாவது சடங்கு செய்யும் உரிமை இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் நீங்கள் பத்தாம்நூற்றாண்டு முதல் இருந்துவரும் ஒரு மாபெரும் கோயில்சார்ந்த இந்து [சைவ] மத அமைப்பின் உறுப்பினர்தான். உங்கள் சாதிக்குரிய வழிபாட்டை உங்கள் அப்பாவோ தாத்தாவோ செய்யவில்லை என்றால் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைமட்டுமே.
எனக்கும் குலதெய்வம் உண்டு. இட்டகவேலி நீலியும் மேலாங்கோடு யட்சியும். அவர்களைத்தான் என் முன்னோர் வழிபட்டார்கள். அதேசமயம் அவர்கள் திருவட்டாறு ஆதிகேசவன் கோயிலின் பிரம்மாண்டமான அமைப்பிலும் ஒரு சிறுபகுதியாக இருந்தார்கள். எல்லா சாதிகளுக்கும் இந்த இரட்டை மதநம்பிக்கை இருக்கும். சிறுதெய்வங்கள் அவர்களுக்குரிய பிரத்யேகமான தெய்வங்களாக இருக்கும். பெருந்தெய்வக் கோயில்களுடன் அவர்கள் இணைக்கப்பட்டிருப்பார்கள்.
வேதம் வெறும் சடங்குகளுக்குரிய நூலாகவே இங்கே கொள்ளப்பட்டது. ஆகவே சடங்குசெய்பவர்களே அதைப் படித்தார்கள். கீதையும் வேதாந்தமும் எல்லாருக்கும் உரியவையாக சொல்லப்படவில்லை. பக்தி, வழிபாடு போன்றவற்றைத் தாண்டி வந்து ஞானத்தைத் தேடுபவர்களுக்கானவை அவை. எல்லாச் சாதியினரிலும் அவற்றை அறிந்தவர்கள் மிகமிகச் சொற்பமே.
புராண இதிகாசங்கள் இந்தியாவின் எல்லா மக்களுக்கும் அவரவர்களுக்குரிய வடிவில் சொந்தமானவையாக இருந்தன. புராணக்கதைகளுக்கு ஒவ்வொரு சாதியிலும் அவரவர்க்குரிய வேறுபட்ட வடிவங்களே உண்டு. அடித்தள மக்களுக்குப் புராணம் அறிமுகம் இல்லை, அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையம் , மதுரை இறையியல் கல்லூரி ஆகியவை உருவாக்கிய பித்தலாட்டம் மட்டுமே
தமிழ்நாட்டின் எல்லா நாட்டார்கலைகளுக்கும் முழுக்கமுழுக்க புராணங்களும் இதிகாசங்களுமே ஆதாரமானவை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, புள்ளுவன் பாட்டு, வில்லுப்பாட்டு என ஒரு இருநூறு நாட்டுப்புறக் கலைகள் நெல்லைவட்டாரத்தில் உள்ளன. எல்லாமே புராண இதிகாசக் கதைகளைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. இன்றும்கூட அவற்றில் நூற்றுக்குமேல் அழியாமல் நிகழ்ந்தபடி உள்ளன. எல்லா நாட்டார்தெய்வ கொடைவிழாக்களுக்கும் இருநூறாண்டுகளாக அவற்றைத்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.அவற்றில் வேடமிட்டு நடிப்பவர்களும் அவற்றைப் பார்ப்பவர்களும் அடித்தட்டு மக்கள்தான்
ஸ்பெஷல்நாடகங்கள் வந்தபோது அவையும் புராண நாடகங்களையே போட்டன. ஊமைப்படம் வந்தபோதும் புராணப்படங்களே. உங்கள் கிராமம் அல்லது உங்கள் குடும்பம் மிக ஆச்சரியமானதாகவே இருக்கிறது. உண்மையிலேயே இவை எதையுமே கொஞ்சம்கூட அறியாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏதோ விசித்திரமான பிரமையுலகில் இருக்கிறார்கள். அவர்களுடைய விசேஷநிலையைத் தனியாக ஆராயவேண்டுமே ஒழிய அதைக்கொண்டு இந்துமதத்தையோ தமிழ்ச்சமூகத்தையோ ஆராயமுடியாது.
நீங்கள் சொல்கிறீர்கள், இந்து வழிபாட்டுமுறைக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என. இது எதையுமே அறியாமல் வெறுமே செவிவழிப் பேச்சுகளை நம்பி சொல்லும் கூற்று. இந்துமதத்தின் இறையனுபவ முறைகள் நான்கு. ஒன்று, படையல் மற்றும் பலி. இரண்டு, பூஜை மற்றும் ஆராதனை. மூன்று, வேதவேள்விகள். நான்கு, தியானம் யோகம். எந்த நாட்டார் தெய்வமும் முதலிரு வழிபாட்டுமுறைக்குள்தான் இருக்கும்.
கருப்பசாமிக்கு என்ன தொழுகையா செய்கிறீர்கள்? அல்லது கூட்டு ஜெப ஆராதனையா? தீபமோ பந்தமோ ஏற்றுவீர்கள். மலர் சூட்டி, உணவைப் படையலிட்டு ,வாழ்த்தி வணங்குவீர்கள் அல்லவா? அந்த உணவைப் பிரசாதமாகப் பகிர்ந்து உண்பீர்கள். அது இந்து வழிபாடு அல்லாமல் வேறென்ன? அதைத்தான் பிஜி தீவிலும் தென்னாப்ரிக்காவிலும் நேப்பாளத்திலும் எல்லாம் இந்துக்கள் செய்கிறார்கள். திருச்செந்தூர் முருகனுக்கும் அதுதான் செய்யப்படுகிறது. கருப்பசாமிக்கும் சுடலைக்கும் திருநீறுதான் பூசப்படுகிறது. கருப்பசாமிகோயிலுக்குச் சென்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
கருப்பசாமி கோயிலில் உயிர்ப்பலியும் புலால் உணவும் இருக்கும். பெருந்தெய்வக் கோயிலில் சைவ உணவு படைக்கப்படும். பொருட்களில், சொற்களில் சில வேறுபாடுகள் இருக்கும் அவ்வளவுதான்.ஏனென்றால் திருச்செந்தூர் முருகன் சிலநூற்றாண்டுகளுக்கு முன்னர் இன்னும் அதிகமான மக்களுக்கான தெய்வமாக ஆனவர். ஆகவே அனைவருக்கும் பொதுவான வழிபாட்டுமுறைகளை நோக்கிச் சென்றவர். இன்றுள்ள பல இந்து பெருந்தெய்வ கோயில்களில் நூறு வருடம் முன்புவரை உயிர்ப்பலி இருந்திருக்கிறது.
எந்த சிறுதெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது. தலித்துக்களின் தெய்வங்கள், பழங்குடிகளின் தெய்வங்கள் கூட. இதுவே உண்மை. எந்த அளவுக்கு உள்ளே இருக்கும் என்பது அதை வழிபடும் சமூகம் எந்த அளவுக்குப் பெரியது, எந்த அளவுக்கு செல்வமும் படிப்பும் சமூகச் செல்வாக்கும் கொண்டது என்பதைப் பொறுத்தது. ஒரு இனக்குழு எந்த அளவுக்கு சமூக இடத்தை அடைகிறதோ அந்த அளவுக்கு அந்த இனக்குழுவின் தெய்வம் பெருமரபுக்குள் முக்கியத்துவம் பெற்று இணைகிறது.
அதாவது இந்து மதம் உங்கள்மேல் திணிக்கப்படுவதில்லை. அப்படித் திணிக்க யார் இருக்கிறார்கள்? யாராவது வீடு வீடாக வந்து மதம் மாற்றுகிறார்களா என்ன? துண்டுப்பிரசுரம் கொடுக்கிறார்களா, மைக் வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்களா? இந்துமதத்துக்கு என பிரச்சாரகர்களே கிடையாது. எதிர்ப்பிரச்சாரம் அதி உக்கிரமாக எல்லாத் தரப்பிலிருந்தும் நிகழ்கிறது.
நீங்கள்தான் உங்களை இந்து மதத்துக்குள் திணித்துக்கொள்கிறீர்கள். இது ஐயாயிரம் ஆறாயிரம் வருடத்து வரலாறு. ஒவ்வொரு இனக்குழுவும் சமூக அதிகாரத்துக்காகவே முட்டி மோதுகிறது. தன்னுடைய இடத்தை அது தேடுகிறது. அந்த இடத்தை அடைந்ததும் அங்கே தன்னை நிறுவிக்கொள்கிறது. உடனே அவர்களின் தெய்வங்கள் மையம் பெறுகின்றன. நாடார்களின் பத்ரகாளிகோயில்கள் இன்று பெற்றிருக்கும் பெரும் முக்கியத்துவம், வன்னியர்களின் மாரியம்மன்கள் பெற்றுவரும் முக்கியத்துவம் அதற்கான கண்கூடான சாட்சி.
சாலையோரங்களைப் பார்த்துக்கொண்டே செல்லுங்கள். புத்தம்புதிய அம்மன்களும் கருப்பசாமிகளும் கான்கிரீட்டில் எழுந்து நிற்பதைக் காண்பீர்கள். அந்த சாமிகளைக் கும்பிடும் இனக்குழுவில் கொஞ்சபேர் துபாய் போய் சம்பாதித்திருப்பார்கள். வியாபாரம் செய்து சம்பாதித்திருப்பார்கள். அவர்கள் சமூகப்படிநிலையில் மேலே சென்று அதிகாரத்தை அடைய அடைய அவர்களின் தெய்வம் இந்து மதத்தின் இன்றுள்ள மையம் நோக்கிச் செல்லும். அப்படி மையம் நோக்கிச் செல்லவேண்டுமென்றால் அது மையத்துடன் உரையாடவேண்டும். தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும். மையத்தை அது கைப்பற்றவேண்டும். அதுதான் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது
உங்கள்கிராமத்தில் நடந்துகொண்டிருப்பதும் அதுவே. சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகும்போது அவற்றின் தோற்றமும் சடங்குகளும் மாறுகின்றன. உயிர்ப்பலி கேட்கும் கருப்பசாமி பிரபஞ்சத்தை ஆளும் பரம்பொருளாக வழிபடப்படும்போது எல்லா உயிருக்கும் கருணை கொண்ட சாமியாக ஆகவேண்டியிருக்கிறது. அதன்பின் அதற்கு உயிர்ப்பலி கொடுக்க முடிவதில்லை. அது அருள்மிகு கருப்பசாமியாக ஆகிறது.
இதுசரியா தவறா என்ற கேள்விக்கே இடமில்லை. இதுதான் இந்தியப் பெருநிலத்தில் ஐயாயிரம் வருடப்பண்பாட்டுச் செயல்பாடாக இருக்கிறது. இப்படித்தான் இந்துமதம் உருவாகி வந்திருக்கிறது. இச்சமூகம் வளர்ந்து முன்னால் சென்றுகொண்டிருக்கிறது. இது பண்பாட்டு ஆதிக்கம் என்று கூச்சலிடும் நம் அறிவுஜீவிகள் வெட்கம் மானமில்லாமல் இந்த ஒட்டுமொத்த சிறுதெய்வ வழிபாட்டையே வேருடன் அழிக்கும் மதமாற்ற சக்திகளுடன் சேர்ந்துகொண்டு பஜனைபாடுகிறார்கள்.
ஆகவே நீங்கள் இந்துவா என்றால் ஆம் இந்துவே என்றுதான் சொல்வேன். இந்து மதம் என்பது எல்லை வகுக்கப்பட்ட ஒரு பிராந்தியம் அல்ல. பல்வேறு தரப்புகள் உரையாடிகொண்டே இருக்கும் ஒரு பரப்பு. உங்கள் தெய்வங்களும் நீங்களும் ஏற்கனவே அந்த இந்து மதப்பரப்புக்குள்தான் இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை வைத்துப்பார்த்தால் மேலும் மேலும் நீங்கள் பொதுப்போக்கு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்து மதத்துக்குள் மேலும் மேலும் ஆதிக்கம் கொண்டு தங்களை மையமாக ஆக்கிக்கொண்டிருக்கும் மக்கள்கூட்டத்தில் ஒருவர்.
ஜெ