17 Sept 2012

இராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை


இராமாயணம் ஒரு ஆய்வு என்ற ஒரு நூலை, ஆண்டு மலர்ப் புத்தகம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததற்காக தோழர் ஒருவர் எனக்குப் பரிசாகத் தந்தார். இராமாயண ஆய்வு என்ற தலைப்பைப் பார்த்ததுமே எனது ஆவல் மேலீட்டால் உடனே எடுத்து படிக்க ஆரம்பித்துவிட்டேன். விரைவாக முடித்தும் விட்டேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் எழுத்தாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தோழர் கே. முத்தையா என்பவர் அந்த புத்தகத்தின் ஆசிரியர். இதே ஆசிரியர் "சிலப்பதிகாரம் - உண்மையும் புரட்டும்" என்ற புத்தகத்தை இதற்கு முன் எழுதியிருக்கிறாராம். இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் "தீக்கதிர்" தினசரி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்திருக்கிறார். திரு.T.பரமசிவ அய்யர், திரு.T.அமிர்தலிங்க அய்யர், H.D.சங்காலியா ஆகியோரின் ஆங்கிலப் படைப்புகளைத் தழுவி தமிழகத்தின் வரலாறோடும், யதார்த்த நிலையோடும் பிணைத்து எளிதாகவும், தெளிவாகவும் தமது படைப்பைத் தந்துள்ளார் என்று புத்தகத்தின் பதிப்புரை கூறுகிறது.


"தமிழக படிப்பாளிகள் மத்தியில் தொன்றுதொட்டு நிலவி வந்த பழைய எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கவல்லவை இவரது கருத்துகள். அந்த வழியில் இவை தமிழகத்தின் பெரியதொரு சர்ச்சையைத் துவக்கி வைத்தால் நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம்" என்று பதிப்புரையை எழுதிய திரு. ஏ.ஏ.வஹாப் (கட்சிப் பதிப்பகத்திற்காக) கூறியுள்ளார்.

இப்புத்தகம் 1981ல் முதல் பதிப்பைக் கண்டிருக்கிறது. இரண்டாம் பதிப்பு 2003ல் வெளி வந்திருக்கிறது. அந்த இரண்டாம் பதிப்பே நான் படித்தது. இனி கதைக்கு வருவோம்.

புத்தகம் இராமாயண ஆய்வு என்ற பெயரில் இராமாயணம் எப்படியெல்லாம் புரட்டி எழுதப்பட்டிருக்கிறது என்பதை நிறுவ முயல்கிறது. புத்தகம் முழுவதும் வரும் "இராமாயணப் புரட்டர்கள்'"என்ற வார்த்தையை மட்டும் நீக்கினாலே 142 பக்க புத்தகம் 100 பக்கமாகிவிடும். கம்பர், துளசி தாசர் போன்றோர் எல்லோருக்கும், புத்தகத்தில் ஆங்காங்கே "இராமாயணப் புரட்டர்" பட்டம் வழங்கப்படுகிறது.

இலங்கைக்கு ஆதிகாலம் தொட்டே சிங்களம் என்ற பெயர் தான் இருந்து வந்ததாம். என்றைக்கு ராஜராஜசோழன் சிங்களத்தைப் பிடித்தானோ அப்போதிருந்துதான் ஈழம் என்றும் லங்கை என்றும் பெயர் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது என்று நிறுவ முயல்கிறார் ஆசிரியர்.

ராமன் விந்திய மலையைத் தாண்டியதே இல்லை. ராமாயணம் காட்டும் லங்கை விந்திய மலைக்கருகில் இருக்கும் லங்கையாகும், அதை இராமாயணப் புரட்டர்கள் சிங்களத்திற்கு மாற்றிவிட்டார்கள் என்பதே மையக்கரு.

ஆசிரியரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம் தந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி ஒரு பகுதியை மட்டும் விமர்சிக்க அல்ல, இவர் சொல்வதற்கும், இவரே ஏற்றுக்கொள்ளும் ஒரிஜினல் வால்மீகி இராமாயணத்தையும் ஓர் ஒப்பாய்வு செய்து காட்டலாம் என்று ஆரம்பிக்கிறேன். இந்தப் புத்தகத்தை முழுதும் விமர்சிக்க வேண்டுமானால் (புத்தகத்தின் பக்கங்கள் 142, அதை ஆதாரங்களுடன் விமர்சித்தால் 1000 பக்கம் தாண்டும் போல் தெரிகிறது.) இந்தப் பதிவு பத்தாது ஆகையால் ஓர் உதாரணம் மட்டும் தருகிறேன்.

புத்தகத்தின் 85வது பக்கத்தில் சூர்ப்பணகையை மானபங்கம் செய்தது தெய்வீக தர்மமா? என்ற தலைப்பில் ஒரு பகுதியை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அதில்...

(இனி, கீழ பச்சை நிற பின்வண்ணத்தில் இருக்கும் கருத்துகள் புத்தக கருத்துக்கு என் மறுப்பாகவும். பின்நிறமில்லாமல் இருக்கும் பாராக்கள் நான் விமர்சிக்கும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள் எனவும் கொள்க).

"இராமனைச் சூர்ப்பணகையை சந்தித்தது, தற்செயலாக நிகழ்ந்ததா? அல்லது காட்டில் வாழ்ந்த முனிவர்கள் திட்டமிட்டு இச்சந்திப்பு நிகழ ஏற்பாடு செய்தார்களா? என்பது பரிசீலனைக்குரியது" என்று கூறுகிறார் ஆசிரியர்.


அவர் நம்புவதாகச் சொல்லும் வால்மீகி இராமாயணத்தில் [வால்மீகியே மூலம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை] என்ன சொல்லியிருக்கிறது என்று பாருங்கள்)  

"இதேபோல் கதைகள் பேசிக்கொண்டு பர்ணசாலையில் உட்கார்ந்திருக்கும்போது தற்செயலாக (yadR^icChayaa = fortuitously) அந்த இடத்திற்கு ஒரு ராட்சசி வந்தாள். [3-17-5

"இராமனும் இலக்குவனும் ஒரு நாள் தாங்கள் தங்கியிருந்த பர்ணசாலைக்கு அருகில் சில முனிவர்களுன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். (இந்நிகழ்ச்சிகள் ஆரண்ய காண்டம் 17, 18லிருந்து 31வது சர்க்கம் வரை விபரிக்கப்படுகிறது.)
சூர்ப்பணகை பதில் சொல்கிறாள்: "நான் ஒரு ராட்சசி, என் பெயர் சூர்ப்பணகை. என்னைக்கண்டு எல்லோரும் அஞ்சுவார்கள். அரக்கர்களுக்கெல்லாம் அரசன் விஸ்வரசுவின் மகனான இராவணனைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அவன் என் தமையன். எனக்கு மேலும் இரு சகோதரர்கள் உண்டு. கரன் தூஷணன் என்பது அவர்களது பெயர்கள். உம்மை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். உம்மீது எனக்கு ஆசை. அதனால்தான் இங்கு வந்தேன். நான் மிகுந்த சக்தி வாய்ந்தவள். சீதையை நிராகரித்துவிட்டு என்னை உமது மனைவியாக்கிக் கொள்வீர். என்னை மனைவியாக்கிக் கொண்ட பின் நாமிருவரும் இந்தத் தண்டகாரண்யம் முழுவதும் ஆனந்தமாகச் சுற்றி வருவோம்" என்று கூறுகிறாள். என்று கூறுகிறது புத்தகம்.

3-17-20லிருந்து 24வரை உள்ள உரையைப் பாருங்கள். அதில் எங்கேனும் நான் மேலே கோடிட்டுக் காட்டியிருக்கும் வரி வருகிறதா என்று பாருங்கள். முதல் பார்வையிலேயே உன்னை எனக்குப் பிடித்துவிட்டது, அதனால்தான் நெருங்கினேன் என்று கூறுகிறாள் சூர்ப்பணகை. இதில் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என்று பொருள் வரும்படி ஏதாவது இருக்கிறதா?

"நான் உண்மைச் சொல்கிறேன ராமா, உண்மையைத் தவிர வேறில்லை. எனது பெயர் சூர்ப்பணகை. நான் நினைத்த தோற்றம் மாறக்கூடிய (kaama ruupiNii= by wish, guise-change) காமரூபினி. நான் தனிமையில் இந்த கானகம் எங்கும் சுதந்திரமாகச் சுற்றி வருவேன். [3-17-20, 21a]
பலம் வாய்ந்த விசுரவஸின் குமாரன், அரக்கர்களுக்கு மன்னன், ராவணன். நீகூட கேள்விப்பட்டிருக்கலாம். அவன் எனது தமையன்.  [3-17-21b, 22a]
எப்போது தூக்கத்திலிருக்கும் பெரும்பலம் வாய்ந்த கும்பகர்ணனுன் எனக்குத் தமையன். அறச்சிந்தனையுடையவனும், அரக்கர்குலத்திற்கு சற்றும் பொருந்தாததவனுமான விபீஷணனும் எனது தமையன். இரு சகோதரர்கள் கரன் மற்றும் தூஷணன் தங்கள் வீரத்திற்குப் பெயர் போனவர்கள். [3-17-22b, 23]
"ஆனால் வீரத்தில் அவர்களையெல்லாம் நான் மிஞ்சிவிடுவேன். ஓ ராமா! உன்னை பார்த்த முதல் பார்வையிலேயே நீ தான் எனக்கு கணவனாக இருக்க சிறந்தவன் என்று நினைத்தேன். அதனால்தான் உன்னை நெருங்கினேன். [3-17-24]

இதைக்கேட்டபின், இராமன் சூர்ப்பனகையிடம் பேசும் பேச்சு ஒருவித குரூரமான கிண்டலும், கேலியுமான சம்பாஷனையாகும். ஆரண்ய காண்டம் 18வது சர்க்கத்தில் உள்ள வால்மீகியின் வர்ணனையை அப்படியே தருகிறோம். "ஓ சூர்ப்பனகையே கேள்! நான் திருமணம் ஆனவன். அதோ நிற்கிறாளே சீதை, அவளை நான் மிகவும் நேசிக்கிறேன். இதோ பார் இங்கு உட்கார்ந்திருக்கிறானே என் தம்பி இலட்சுமணன், இவன் கல்யாணமாகாதவன் (க்ருத்தரக்), சௌந்தர்யமான வாலிபன் ஒரு மனைவிக்காக ஏங்கிக் கொண்டிருப்பவன். நீ எவ்வளவு அழகாயிருக்கிறாயோ, அந்த அளவுக்கு அழகுடையவன். அவனிடம் போ!" என்கிறான்.

[3-18-2 முதல் 5 வரை படித்துப் பாருங்கள்] ராமனின் பேச்சு குரூரமாக இருக்கிறது என்பதற்கான அடிப்படையே இல்லை. அவன் ஓ! சூர்ப்பணகையே கேள் என்றுகூட கூறவில்லை, பவதி என்கிறான். மதிப்புடையவளே என்கிறான். நான் தேடிய வரையில் ஆசிரியர் சொல்லும் க்ருத்தரக் என்ற சொல் அகப்படவில்லை. இதைப் படிப்பவர்களும் தேடிப்பாருங்கள். அகிருத்தா (akR^ita) அதாவது மனைவி இல்லாமல் இருக்கிறான் என்றே உள்ளது இரண்டுக்கும் பெருத்து வித்தியாசம் இருப்பதாக  உணரலாம். வாசகர்கள் நீங்களே ஆராய்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

"பவதி (மதிப்புடையவளே!), நான் திருமணமானவன், இவள் எனது அன்பான மனைவி, உன்னைப் போன்ற பெண்களுக்கு இவளுடன் சக்காளத்தியாக வாழ பிடிக்காது. அது மிகவும் கடினமாக இருக்கும். [3-18-2]
"இவன் எனது தம்பி லட்சுமணன், இவன் நன்னடத்தையுள்ளவன், அழகானவன், வீரன், மனைவியில்லாமல் இருக்கிறான்(a + kR^ita daaraH ca= not, made, wife – nearly, not with a wife). [3-18-3]
"மனைவியில்லாமல் இருக்கிறான் (a + puurvii= without, a wife), இளமையானவன், அழகானவன், அவன் உனக்கு கணவனாக இருக்க தகுதிவாய்ந்தவன். உனது பண்புகளுக்கு அவனே பொருத்தமானவன். [3-18-4]
"ஓ அகன்ற கண்களை உடையவளே (vishaalaakSi= oh, broad-eyed one;), சூரிய ஒளியைக் காணும் மேரு மலையைப் போல எனது தம்பியை எனது கணவனாக்க அவனிடம் உனது காதல் கோரிக்கையை வை. ஓ பெருத்த இடை உடையவளே! நீ சக்களத்தி இல்லாமல் இருக்கலாம். [3-18-5]


ஆசையினல் உந்தப்பட்ட சூர்ப்பனகை இலக்குவனைப் பார்த்து "என்னை உன் மனைவியாக்கிக் கொள்" என வேண்டுகிறாள். இலக்குவன் பதில் கூறுகிறான். "சூர்ப்பனகையே கேள், நீயோ அரசகுமாரி, இப்படிப்பபட்ட அந்தஸ்தில்உள்ள நீ ஒரு வேலைக்காரனுடைய மனைவியாக விரும்புகிறாயா? அது சரியல்ல? நீ இராமனுடைய மனைவியாக இருக்கத்தான் லாயக்கானவள். இராமனை மணந்து கொண்டால் அதன்பிறகு அவன் சீதையை மறந்துவிடுவான். ஆகையால் அவனிடம் போ" என்கிறான்.

[3-18-8 - 12 வரை படித்துப்பாருங்கள்] எங்கும் சூர்ப்பணகையை கௌரவக்குறைவாக லட்சுமணன் நடத்தியதாக எனக்குப் படவில்லை. சூர்ப்பணகையும் அப்படி நினைக்கவில்லை. தோழர் கே.முத்தையாதான் அப்படி நினைக்கிறார். தாமரை நிறத்தாளே (கமல வர்ணி)! என்று அழைக்கிறான். மற்றபடியெல்லாம் சீதையைக் குறைத்து, சூர்ப்பணகையைப் பெருமையாகத் தான் சொல்கிறான் (வஞ்சப்புகழ்ச்சியாகக் கூட இருக்கட்டும். ஆனால் அவளை எங்கும் தரக்குறைவாக நடத்தவில்லை. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் அடுத்த வரிகளைக் கவனியுங்கள்.

சூர்ப்பனகையை மையமாகக் கொண்டு இத்தகைய குரூரமான சம்பாஷனை நிகழும்போது இராமனுக்கருகில் அமர்ந்திருந்த முதியவர்களான முனிவர்க் தலையிட்டார்களா? இது தகாத செயல் எனக் கூறி தடுத்தார்களா? இல்லை, அவர்களது கேலி விளையாட்டை ரசித்துக் கொண்டு மௌனமாகவே இருந்தார்கள். இராமனும் இலக்குவனும் தெய்வப்பிறவிகள் "திருமாலின் அவதாரம்" என்றெல்லாம் இராமாயணத்தைத் திருத்திய இக்காலப் புராணப் பண்டிதர்கள், மகாவிஷ்ணுவின் அவதாரம் எவ்வாறு அந்நியப் பெண்ணிடம் இவ்வளவுக் கீழ்த்தரமான விவாதத்தை நடத்த முடியும் என்பதற்கு என்ன விளக்கம் தருகிறார்கள் தெரியுமா? "ஓ! இதெல்லாம் தெய்வத் திருவிளையாடல்கள்! அதில் தோஷமில்லை" என்றார்கள்

(3-17-1 முதல் 4 வரை படித்துப் பாருங்கள்) முந்தைய வரியில் முனிவர்களுடன் பேசுவதாகச் சொல்லிவிட்டு. அடுத்த வரியைக் கவனியுங்கள். தனது பர்னக சாலையில் சீதையுடனும் தம்பி லட்சுமணனுடன் உட்கார்ந்திருக்கும்போது என்றுதான் வருகிறது அப்போது முனிவர்களோ, முதியவர்களோ இருந்ததாக வால்மீகி கூறவில்லை. http://valmikiramayan.net என்று வலைத்தளத்திற்கும் சென்று மேற்குறிப்பிட்ட சர்கத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட பத்தியைப் பாருங்கள். முனிவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததைச் 4வது பத்தியில் சொல்லிவிட்டு, 5வது பத்தியில் At one time when Rama is sitting in hermitage என்று இருக்கும். மேலும் ஆசிரியர் அந்நியப்பெண்ணிடம் தெய்வபிறவிகள் என்று உங்களால் சொல்லப்படும் நபர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார்கள் என்கிறார். யார் கீழ்த்தரமாகப் பேசியது? மறுபடியும் அவர்களது உரையாடல்களைப் படித்துப் பாருங்கள். யார் ராமாயணத்தைப் புரட்டுவது? உங்கள் காழ்ப்புணர்ச்சி அல்லவா இதில் தெரிகிறது ஆசிரியரே. ஆசிரியர் இதோடு மட்டும் நிறுத்தவில்லை. மேலும் படியுங்கள்.

காட்டில் வாழும் ஒரு பெண் அழகான ஒரு மனிதனைப் பார்த்து ஆசை கொண்டு பேதலிக்கும்போது அவளை நிராகரிக்கும் பாணி இதுதானா? இதுதான் "தெய்வீக பாணி" என்று நியாயப்படுத்துவது அந்தக் கடவுளின் (?) பரிபாலனத்தில் பெண்ணின் கதி இதுதான் என்று கூறாமல் கூறுவதாகும். கீழ்ப்பிறவிகளான இந்தக் காட்டு மனிதர்களை எதிர்த்து "தெய்வீகப்' பிறவிகளான இராம இலக்குவனர்கள் எத்தகைய கீழ்மையான அணுகுமுறைகளையும் கையாளளாம் என்பதே இவர்களது வாதம். (இடையில் ஆசிரியர் வால்மீகியை சற்று புகழ்கிறார். அந்த வர்ணனையைத் தவிர்த்துவிட்டு மீதம் தொடர்கிறது) இங்கே மனித தர்மங்களுக்கு இடமே இல்லை. வர்க்க தருமங்களே அப்பட்டமாக - நிர்வாணமாக - காட்சி அளிக்கின்றன.

"என்ன கொடும சரவணன் இது" என்று கேட்கத் தோன்றுகிறது. இதைவிட நாகரிகமாக எப்படி மறுக்கமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் என் கவனத்துக்கு கொண்டுவரவும்.

இராமனும் இலக்குவனும் அளித்த பதில்களால் அலைக்கழிக்கப்பட்ட சூர்ப்பனகை கோபம் கொள்கிறாள். "எனது கேள்விக்கு நீங்கள் நேர்மையான பதிலளிக்காவிட்டால் இந்த இடத்திலேயே சீதையைக் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டுகிறாள். சீதையைப் பிடிக்கப் பாய்கிறாள். இராமன் விரைந்து சென்று சூர்ப்பனகையைப் பிடித்துத் தள்ளுகிறான். ஆரண்ய காண்டம் 18வது சர்க்கம் 13வது சுலோகத்தில் "நிக்ருஹ்ய" என்ற சொல்லை மகாகன சீனிவாசன் சாஸ்திரியார் குறிப்பிடுகிறார் இதன் பொருள் பிடித்துத் தள்ளினான் என்பதாகும்.

ஆசிரியர் கூறுவது போல் அது 13வது ஸ்லோகம் அல்ல 18வது ஆகும். 18. mahaabalaH raamaH= greatly, energetic, Rama; kupitaH= took umbrage; aa patantiim= coming, falling - swooping; mR^ityu paasha pratimaam= death’s, noose, like; taam vi gR^ihya= her, on checking; tataH lakSmaNam abraviit= to Lakshmana, said.

By that the great-energetic Rama took umbrage and checking her who is like the noose of death swooping down on Seetha said to Lakshmana. [3-18-18] என்றுதான் இருக்கிறது 

எங்கே "நிக்ருஹ்ய" என்ற சொல்லைக் காணோம். அதற்குள் இராமாயணப் புரட்டர்கள் திருத்திவிட்டார்களா என்ன? taam vi gR^ihya= her, on checking என்ற சொல்லே இருக்கிறது. என்ன தோழர் நீங்க நினைச்ச சொல்லெல்லாம் போட்டுப்பீங்களா? யார் உங்களக் கேக்கப்போறா? இந்து எவனுக்காவது இராமயணமோ மஹாபாரதமோ தெரிந்தால்தானே? உங்களத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு அதுவெல்லாம் அவனுக்குத் தெரியுமா? அப்படியே படித்தாலும் உங்க கண்ணாடியப் போட்டிட்டுதானே படிப்பான்.

சீதைக்கு எங்கே ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இராமனைப் பீடிக்கிறது. அரச வம்சத்திற்கே உரித்தான பாணியில் அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டு இலக்குவனைப் பார்த்து "இலட்சுமணா! மேலும் தாமதிக்காதே! விளையாடாதே! உடனடியாக அவளை அங்கஹீனப்படுத்தி (விருப்பமுள்ளவளாக்கி) விரட்டிவிடு" என்று உத்தரவிடுகிறான். இராமனின் சொல் பிசகாமல் தொண்டு புரிந்திடும் தம்பி இலக்குவன், மேலும் தயங்காமல் கட்டளையை நிறைவேற்றுகிறான். சூர்ப்பனகையின் கையைப் பிடித்து அவளது மூக்கையும், காதையும் அறுத்தெறிகிறான்.

அறுத்தெறிவதெல்லாம் ஓகேதான், அதென்ன அடைப்புக்குறிக்குள் விருப்பமுள்ளவளாக்கி, புரியவில்லையே. மானபங்கப்படுத்தினான் என்று சொல்கிறீர்களா? அதற்கு இராமாயண ஆதார ஸ்லோகம் எங்கே? எல்லாம் வாய்ப்புளிச்சதோ? மாங்கா புளிச்சதோ கதைதானா?

சரி இனி புத்தக வரிகள் இத்தோடு நிற்கட்டும். இந்தப் புத்தகத்தில் உள்ள இந்தப் பகுதியின் தலைப்புக்கு (சூர்ப்பனகையை மானபங்கம் செய்தது தெய்வீக தர்மமா?) நியாயம் கற்பித்துவிட்டார் பார்த்தீர்களா ஆசிரியர். இவர்களுக்கு பார்வையில் கோளாறா அல்லது என்னவென்று சொல்ல.

(இந்தப்பகுதியின் தலைப்புப்படி சூர்ப்பணகை மானபங்கம் செய்யப்படவில்லை. காதுகளும் மூக்கும் அறுபட்டாள். அந்த அறுப்பு சர்க்கம் 17, 18லேயே முடிந்து விடுகிறது. 31 வரை நான் மொழியாக்கம் செய்யவில்லை. ஏனென்றால், அதற்குப்பின் கரன் தூஷணாதி இராட்சதர்களின் வதம்தான் வருகிறது. அது இந்த விமர்சனத்திற்குத் தேவையில்லை விருப்பமுள்ளோர் http://valmikiramayan.net என்ற வலைத்தளத்திற்குச் சென்று ஆங்கிலத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எனது மொழிபெயர்ப்பில் சந்தேகமிருந்தாலும், அந்த வலைத்தளத்திற்குச் சென்று சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்)

இராமாயணத்தைக் குறித்து நியாயமான விமர்சனங்களை வைக்கக்கூடாதா? இப்படியா வரிக்கு வரி காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவது? இதுவரை இந்தப் புத்தகத்தில் இருக்கும் வரிகளையும், மூல வால்மீக இராமாயணத்தையும் ஒப்பாய்வு செய்தோம். உங்களுக்குக் குழப்பமாகக் கூட இருக்கலாம். ஆகையால், கீழே ஆரஞ்சு பெட்டிக்குள் இருக்கும் மேற்கண்ட அந்தக் குறிப்பிட்ட பகுதியான "சூர்ப்பணகை அங்க ஹீனத்தின்" மொழிபெயர்ப்பை தடையில்லாமல் படித்துவிட்டு, மறுபடியும் மேலே இருந்து படித்து வாருங்கள். அப்படிச் செய்தால் படிப்பவருக்குத் தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ் மொழிபெயர்ப்பு என்னுடையது. குற்றமிருப்பின் எனக்குத் தெரியப்படுத்தவும் சமஸ்கிருத வேர்ச்சொற்களைப் பிரித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்திருக்கும் http://valmikiramayan.net வலைத்தளத்திற்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.
ஆரண்ய காண்டம் - சர்கம் 17

ராமன் குளித்து முடித்ததும் கோதாவரி நதிக்கரையை விட்டு சௌமித்ரி (சுமித்திரையின் மகன் லட்சுமணன்) மற்றும் சீதையுடனும் தனது பர்னகசாலைக்கு சென்றான். 3-17-1

பர்னகசாலையை நெருங்குகையில் ராகவனும் லட்சுமணனும் தங்களது காலை சடங்குகளை முடித்து தங்கள் குடிலை அடைந்தனர். [3-17-2]

அங்கே பெரும் முனிவர்களால் கொண்டாடப்பட்டு அவர்களோடு பல கதைகளைப் பேசி நேரத்தைக் கடத்தினான். தனது பர்னக சாலையில் சீதையுடனும் தம்பி லட்சுமணனுடன் உட்கார்ந்திருக்கும்போது சித்திரை நட்சத்திரத்து நிலவாக மினுங்கினான். [3-1-7-3, 4]

இதேபோல் கதைகள் பேசிக்கொண்டு பர்னகசாலையில் உட்கார்ந்திருக்கும்போது தற்செயலாக (yadR^icChayaa = fortuitously) அந்த இடத்திற்கு ஒரு ராட்சசி வந்தாள். [3-17-5]

அவள் பத்து தலை ராவணனுடைய தங்கை சூர்ப்பணகை. வானத்திலிருந்து குதித்துவந்தவனைப் போல் (தேவலோகத்திலிருந்து வந்தவனைப் போல்) இருந்த ராமனைக் கண்டு வந்தாள். [3-17-6]

மினுங்கும் முகத்தோடும், நீளமான கைகளோடும், தாமரையையொத்த நீளமான கண்களோடும், யானை போன்ற நடையோடும், ஜடா முடியோடும் (jaTaa maNdala dhaariNam= hair-tuft), அழகான மன்னவன் போன்றும் நீலத்தாமரையைப் போன்ற நீல வண்ண மேனியோடும் (indiivara shyaamam= blue-lotus-like, deep-blue coloured) காம தேவனை ஒத்திருந்த, இந்தரனைப்போன்ற சிரிப்பையுடைய ராமனைப் பார்த்து காமத்தோடு வந்தாள் (raakSasii kaama mohitaa= demoness, love, sickened). [3-17-7, 8, 9a]

பயங்கரமான, பானைவயிறுடைய, சுருங்கியக் கண்களையுடைய, செம்பு போன்ற முடிகளையுடைய, அழகற்ற, வெண்கலக் குரல் உடைய, வயதில் மூப்புடையவளான, கரகர குரலுடைய, நன்னடத்தையில்லாத சூர்ப்பணகை, காம தேவனின் உந்துதலால் சுந்தரமான, மெலிந்த வயிறுடய, அகன்ற கண்களுடைய அழகான முடியையுடைய, மெலிதான குரலுடைய, இளமையான, மெலிதாகப் பேசும், நன்னடத்தையுள்ள ராமனிடம் பேசினாள். [3-17-9b, 11, 12a]

ஜடா முடி தரித்த சாமியாராக இருந்தாலும் (; jaTii= one with matted hair [ascetic])மனைவியுடன் இருக்கிறாய். கையில் வில் அம்புகளுடன் இருக்கிறாய் ஆனால் முனிவர் வேடத்தில் இருக்கிறாய், அரக்கர்கள் ஆட்சிக்குட்பட்ட இந்த இடத்திற்கு (raakSasa sevitam= by demons, frequented by; imam desham= this, province) நீ வந்த காரணத்தைச் சொல்[3-17-12b, 13]

சூர்ப்பணகையால் இப்படி கேட்கப்பட்ட எதிரிகளைப்பொசுக்கும் ராமன், நேரடியாக எல்லா செய்திகளையும் சொல்ல ஆரம்பித்தான். [3-17-14]

கடவுளைப்போன்ற சக்தியுடைய தசரதன் என்று ஒரு மன்னன் இருந்தார். நான் அவரது மூத்த மகன். மக்கள் என்னை ராமன் என்ற பெயரால் கேள்விப்பட்டிருக்கிறார்கள். [3-17-15]

இவனது பெயர் லட்சுமணன், எனது தம்பி, என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவன். இது எனது மனைவி, விதேக நாட்டு மன்னன் மகள், சீதை என்ற பெயரால் நன்கு அறியப்படுபவள். [3-17-16]

எனது தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டு, அந்த ஆணையை மெய்ப்பிக்க இந்த துறவிகோலம் பூண்டிருக்கிறேன். எனது தந்தை மற்றும் தாயின் வழிகாட்டுதல்படி (niyogaat tu= by directive, but) இந்த கானகத்தில் வசிப்பதற்காக வந்திருக்கிறேன். [3-17-17]

"நானும் உன்னைப்பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். யாருடைய மனைவி நீ? உனது பெயர் என்ன? அல்லது யாருடைய மகள் நீ? உன்னுடைய அழகு தோற்றத்தைப் பார்த்தால் ராட்சசியாகத் தெரிகிறாய். [3-17-18]

"எதற்காக இங்கு வந்திருக்கிறாய். சொல்வாய்'' என்று ராமன் அவளிடம் கேட்டான். ராமனின் சொற்களைக் கேட்ட ராட்சசி காமத்தில் நனைந்து (madana arditaa= by love, wetted;) இந்த வார்த்தைகளைச் சொன்னாள்[3-17-19]

"நான் உண்மைச் சொல்கிறேன ராமா, உண்மையைத் தவிர வேறில்லை. எனது பெயர் சூர்ப்பணகை. நான் நினைத்த தோற்றம் மாறக்கூடிய (kaama ruupiNii= by wish, guise-change) காமரூபினி. நான் தனிமையில் இந்த கானகம் எங்கும் சுதந்திரமாகச் சுற்றி வருவேன். [3-17-20, 21a]

பலம் வாய்ந்த வஸ்ரவசாவின் குமாரன், அரக்கர்களுக்கு மன்னன், ராவணன். நீகூட கேள்விப்பட்டிருக்கலாம். அவன் எனது தமையன்.  [3-17-21b, 22a]

எப்போது தூக்கத்திலிருக்கும் பெரும்பலம் வாய்ந்த கும்பகர்ணனுன் எனக்குத் தமையன். அறச்சிந்தனையுடைய, அரக்கர்குலத்திற்கு சற்றும் பொருந்தாத விபீஷணனும் எனது தமையன். இரு தமையன்கள் கரன் மற்றும் தூஷணன் தங்கள் வீரத்திற்குப் பெயர் போனவர்கள். [3-17-22b, 23]

"ஆனால் வீரத்தில் அவர்களையெல்லாம் நான் மிஞ்சிவிடுவேன். ஓ ராமா! உன்னை பார்த்த முதல் பார்வையிலேயே நீ தான் எனக்கு கணவனாக இருக்க சிறந்தவன் என்று நினைத்தேன். அதனால்தான் உன்னை நெருங்கினேன். [3-17-24]

"எனக்கென்று தனிப்பட்ட சக்திகள் இருக்கின்ற, நான் தனித்த பலத்தோடு (svacChanda bala gaaminii= with independent, might, goer [I operate]) ஆட்சி செய்ய முடியும். நீ என்னுடைய நிரந்தரக் கணவனாக இருந்துவிடு, இந்த சீதையை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும் உன்னால். [3-17-25]

"இந்த சீதையின் உருவமே சரி இல்லை, இவளையெல்லாம் நீ காதலிக்க முடியாது. இவளுக்கு உன் மனைவியாக இருக்க தகுதியில்லை. உனக்கு மனைவியாகத் தகுந்தவள் தனிமையில் இருக்கும் நானே. ஆகவே என்னை உன் மனைவியாக நடத்து. [3-17-26]

உருவம் ஒழுங்கற்ற, நேர்மையற்ற, இந்த சூனியக்கார (karaalaam= diabolical one) மனிதப் பெண்ணை, அந்த ஒடுங்கி வயிறுடைய உன்னுடைய தம்பியோடு சேர்த்து தின்று உன்னை விடுதலை செய்யவா? 3-17-27

"அதன்பிறகு விண்ணைமுட்டும் மலைமுகடுகள் மற்றும் இந்த தண்டக வனம் முழுவதும் என்னோடு காமங்கொண்டு சுற்றித்திரியலாம். [3-17-28]

இவ்வளவையும் கேட்ட ராமன் மோகத்தோடு தன்னைப் பார்ப்பவளிடம் கேலியாக இப்படிச் சொன்னான். [3-17-29]

சர்கம் - 18

 

ராமன் புன்னகையோடும், தெளிந்த குரலோடும், அமைதியாகவும், காமத்தில் கட்டுணடிருப்பவளிடம் பேசினான். [3-18-1]

"பவதி (மதிப்புடையவளே!), நான் திருமணமானவன், இவள் எனது அன்பான மனைவி, உன்னைப் போன்ற பெண்களுக்கு இவளுடன் சக்காளத்தியாக வாழ பிடிக்காது. அது மிகவும் கடினமாக இருக்கும். [3-18-2]

"இவன் எனது தம்பி லட்சுமணன், இவன் நன்னடத்தையுள்ளவன், அழகானவன், வீரன், மனைவியில்லாமல் இருக்கிறான்(a + kR^ita daaraH ca= not, made, wife – nearly, not with a wife). [3-18-3]

"மனைவியில்லாமல் இருக்கிறான் (a + puurvii= without, a wife), இளமையானவன், அழகானவன், அவன் உனக்கு கணவனாக இருக்க தகுதிவாய்ந்தவன். உனது பண்புகளுக்கு அவனே பொருத்தமானவன். [3-18-4]

"ஓ அகன்ற கண்களை உடையவளே (vishaalaakSi= oh, broad-eyed one;), சூரிய ஒளியைக் காணும் மேரு மலையைப் போல எனது தம்பியை எனது கணவனாக்க அவனிடம் உனது காதல் கோரிக்கையை வை. ஓ பெருத்த இடை உடையவளே! நீ சக்களத்தி இல்லாமல் இருக்கலாம். [3-18-5]

இப்படி ராமன் தெளிவாகச் சொன்னவுடன், காமத்தால் உந்தப்பட்ட ராட்சசி ராமனைத் தவிர்த்துவிட்டு, லட்சுமணனிடம் பேசினாள். [3-18-6]

"சிறந்த மேனி நிறத்தைக் கொண்ட (vara varNinii= best, complexioned one) நானே உனக்குத் தகுதியான அழகான மனைவியாக இருப்பேன். நீ மகிழ்ச்சியுடன் என்னுடன் தண்டகவனம் முழுவதும் சுற்றலாம்" [3-18-7]

அர்த்தமுள்ள வாக்கியங்களை உச்சரிக்கும் லட்சுமணனிடம் ராட்சசி இப்படிச் சொன்னவுடன், அந்த சுமித்திரை மைந்தன் புன்னகைத்து பதிலுரைத்தான். [3-18-8]

"ஓ தாமரை நிறத்தாளே! (kamala varNinii= oh, [black] lotus, coloured one) நீ என் மனைவியாக விரும்பினால், இங்கே ஒரு வேலைக்காரியாகத்தான் இருக்க முடியும்? என்னால் வழிபடப்படும் எனது அண்ணனுக்கு நான் ஒரு அடிமை. [3-18-9]

"ஓ அகன்ற கண் உடையவளே! உனது மேனி அழகுக்கு எனது அண்ணன் ராமன் தான் ஏற்ற துணையாக இருப்பான். என்னால் வழிபடப்படுபவருக்கு இளைய மனைவியாக நீ மகிழ்ச்சியுடன் இருக்கலாம். [3-18-10]

"அந்த கட்டுடலற்ற, நேர்மையற்ற, சூனியக்கார மூப்படைந்த மனைவியைத்தவிர்த்து, இந்த மெலிந்த வயிறுடைய ராமன் உன்னைமட்டுமே வழிபடுவான். [3-18-11]

"ஓ சிறந்த நிறத்தையுடையவளே, சிறந்த இடையை உடையவளே, எந்த முட்டாளாவது இப்படிப்பட்ட அழகுடைய பெண்ணை வேண்டாம் என்று சொல்வானா?" [3-18-12]

இப்படி லட்சுமணன் சொல்லக் கேட்ட அந்த ஒழுங்கெட்ட பருத்த வயிறு படைத்த சநசூர்ப்பணகை சற்றும் சந்தேகங்கொள்ளாமல் அந்த வார்த்தைகளை உண்மை என்று எண்ணினாள். [3-18-13]

சீதையுடன் தனது குடிலில் இருந்த எதிரிகளை அழிப்பதில் வல்லவனான ராமனிடம் காமபோதையில் இருந்த சூர்ப்பணகை பேசினாள். [3-18-14]

"அழகற்ற, நேர்மையற்ற, சூனியக்கார, மூப்படைந்த உனது மனைவியுடன் ஒட்டிக்கொள்கிறாயே தவிர என்னை உயர்வாக மதிக்கவில்லை நீ. [3-18-15]

"இப்போது இந்தப் பெண்ணை உன் கண் முன்பே தின்றுவிட ஆசைப்படுகிறேன். அதன்பிறகு உன்னோடு அன்பான மகிழ்வான வாழ்வை சக்காளத்திகள் இல்லாமல் வாழப்போகிறேன்." என்று சூர்ப்பணகை ராமனிடம் சொன்னாள். [3-18-16]

இப்படிப்பேசிக் கொண்டே பற்றி எரியும் கண்களோடு, மான் போன்று மருண்டு பார்த்த சீதையிடம் பெரிய விண்கல்லொன்று நட்சத்திரங்களிலேயே பளிச்சென இருக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் மோத விரைவது போல் விரைந்தாள். [3-18-17]

அந்நேரத்தில் அதிசக்தி வாய்ந்த ராமன் சீதைக்கும், மரணத்தைக் கொடுக்கும் தூக்கு கயிறு போல் இருக்கும் ராட்சசிக்கும் இடையில் வந்து லட்சுமணனிடம். [3-18-18]

ஓ, சுமித்திரையின் மைந்தா, இதைப்போன்ற ஆபத்தான மிருகங்களிடம் வார்த்தைகளால் விளையாடிக்கொண்டிருப்பது பொருத்தமற்றது. வைதேகியைப் பார், எப்படியோ பிழைத்திருக்கிறாள் (kathamcit jiivatiim vaidehiim pashya= somehow, surviving, at Vaidehi, see). [3-18-19]

"ஓ புலிபோன்றவனே, அவள் அனுமானிக்கமுடியாதவள், ஆண் தன்மை வாய்ந்த கீழானவள், வெளிப்படையான காமப்பித்து பிடித்தவள், நீ அங்க ஈனப்படுத்த தகுதிவாய்ந்த பெருத்த வயிறுபடைத்த ராட்சசி.  [3-18-20]

இதைக் கேட்டவுடன் பெரும்பலம்வாய்ந்த லட்சுமணன் கோபத்தில் வாளை உருவி அவளது காதுகளையும் மூக்கையும் ராமன் கண் முன்னே வெட்டி எறிந்தான். [3-18-21]

இப்படி காதுகளையும் மூக்கையும் பறிகொடுத்த பயங்கரமான சூர்ப்பணகை பயங்கரமாக அலறினாள். அவள் எப்படி வந்தாளோ அதேபோல் அதிவிரைவாக கானகத்திற்குள் ஓடிப்போனாள்.  [3-18-22]

அந்த பயங்கரமான ராட்சசி அங்க ஈனப்படுத்தப்பட போது குருதியால் நனைந்து போனாள் மேகங்கள் முட்டி இடி இடப்பது போன்று அலறினாள். [3-18-23]


முகநூலிலும் உங்கள் கருத்தைச் சொல்லலாமே!