4 Aug 2012

உழைப்புச் சுரண்டல் - எங்கே?

கம்யூனிசத் தொழிலாளர் சுமை"முதலாளித்துவம் என்பதன் அடிப்படையே லாப வேட்டை, அதற்கான உழைப்புச் சுரண்டல், இயற்கை வளக் கொள்ளை ஆகியவைதான்'' என்றுதான் தோழர்கள் நினைக்கிறார்கள்.
இதுவே ஒரு கம்யூனிச நாடாக இருந்தால் இவையெல்லாம் இருக்காதா என்ன? கம்யூனிச அரசாங்கங்கள் மனிதர்களைச் சுரண்ட மாட்டார்களா? இயற்கை வளங்களை கொள்ளையடிக்க மாட்டார்களா? ஐயோ உயிரையேச் சுரண்டிவிடுவார்களே! அப்புறம் எங்கிருந்து உழைப்பைச் சுரண்டுவது? காடாக இருந்ததை நாடாக்குகிறோம் என்று சொல்லி பாலைவனமாக்கி விடுவார்களே! அப்புறம் எங்கே வளத்தைக் கொள்ளையிடுவது?
செயற்கை பஞ்சங்களை உருவாக்க முதலாளித்துவ அரசுகள்கூட நினைக்காது, ஆனால் ஒரு பெரிய கம்யூனிச நாடு நினைக்கும். அதுவும் விவசாயிகளாக இருப்பவர்களைத் தொழிலாளர்களாக மாற்ற. தொழிலாளியாக மாறினால் அவர்களுக்கு என்ன லாபம்? அப்போது தானே முழு கம்யூனிசம் மலர முடியும், முதலாளிகள் அழிக்கப்படுவர். அப்படி அழிக்கப்பட்ட சமுதாயத்தில் அமையும் (கம்யூனிச) அரசாங்கத்தை ஏதாவது ஒரு திறமைசாலி(?) கைப்பற்றி சர்வாதிகாரம் செய்யலாம்.
 
சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும் என்று கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்கள். ஏதாவது இருந்தால்தானே சுரண்டிக் கொண்டிருக்க முடியும், அத்தனையும் அழித்துவிட்டால் சுரண்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை அல்லவா? ஊரையே அடித்து உலையில் போட்டுவிட்டால்!
ஒரு தோழர் இப்படிச் சொல்கிறார் "முதலாளித்துவ அமைப்பில் லாப வேட்டைச் சுரண்டலுக்கு முடிவு கட்டப்படுவதாக வைத்துக்கொள்வோம், அப்போது அது முதலாளித்துவ சமுதாயம் அல்ல, அதற்கு வேறு பெயர் சூட்ட வேண்டும் என்றுதான் பொருள். அதுதான் அடுத்த கட்டத்திற்கான சமூக உடைமை அமைப்பாகிய சோசலிசம். அதை உருவாக்குவதற்கும் அதை உருவாக விடாமல் தடுப்பதற்கும்தான் மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.''
தோழரே, லாபம் இல்லாமல் ஒரு தொழிலும் செய்ய முடியாதே, பிறகு எப்படி முதலாளித்துவ சமூகத்தில் அதை ஒழிப்பீர்கள். உங்களைப் போன்ற ஒரு கம்யூனிச சர்வாதிகாரி வந்தால் மட்டுமே அது சாத்தியம். கம்யூனிஸ்டுகள் ஆளும் தேசங்களில் உற்பத்தியை அரசாங்கமே செய்து (தொழிலாளர்களைக் கொண்டுதான் - அங்கெல்லாம் சங்கம் வேறு வைக்கமுடியாது - சுட்டு விடுவார்கள்), விற்பனையும் அதுவே செய்கிறது. அதைக் பெற்றுக் கொள்ள வரும் அடுத்த நாட்டுக்கு அப்படியே லாபம் இல்லாமலா கொடுத்துவிடும்? சரி லாபம் வைத்துத்தான் கொடுக்க முடியும். அதில் வரும் லாபம் யாருக்குச் சொந்தம்? மொத்தமாக எங்கள் நாட்டு மக்களுக்குத்தானே சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படும் என்று லேசாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அடுத்த நாட்டு தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி விற்றதாகத் தானே உங்களை பாஷையிலேயே அது அர்த்தம். லாபம் என்றாலே கொள்ளைதானே அவர்கள் அகராதியில்.

முழு முதலாளித்துவ நாடும் நம் கண்களுக்குத் தெரியவில்லை. முழு கம்யூனிச நாடும் தென்படவில்லை. எல்லாம் கலந்துதான் அரசுகள் இருக்கின்றன. இந்தக் கலப்பு பொருளாதாரமே பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றன. கம்யூனிச ரஷ்யா, சீனாவை விட, தொழிலாளர் சட்டங்கள் அமெரிக்காவில் சிறப்புடன் செயல்படுகின்றன. கம்யூனிச தேசங்களில் பிள்ளை பெற்றுக் கொள்ளக்கூட அனுமதி கேட்க வேண்டும். பத்திரிகையில் எழுத அனுமதி கேட்க வேண்டும். ஒரே கட்சி தான் தொடர்ந்து இருக்கும். இரு கட்சி என்ற சொல்லே அவர்களுக்கு நாராசமாகப் படும்போது பல கட்சி ஆட்சிகளை எப்படி ஏற்பார்கள்? அதுதான் ஜனநாயகத்தைவிட சிறந்த விஞ்ஞான கம்யூனிசம் என்றுவேறு பாடம் நடத்துகிறார்கள்.
ஆதிகாலத்தில் மனிதன் பகிர்ந்துண்டான். ஆகவே அதுதான் சிறந்தது என்று சொல்வது பிற்போக்காகப் படவில்லையா. புராதான பொதுவுடைமைச் சமுதாயத்தை மீட்டெடுக்கும் எங்கள் விஞ்ஞான கம்யூனிசம். பெரிய புரட்சிக்குத் தயாராகுங்கள். புரட்சி வரும் என்ற கூக்குரலிட்டுக் கொண்டே இருக்கும் குரலுக்கும், கர்த்தர் சீக்கிரத்தில் வந்துவிடுவார், இயேசு அருகிலிருக்கிறார் என்ற குரலுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லையே?
ரஷ்ய விவசாயி ஒருவரின் பிரசித்தி பெற்ற வாக்குமூலம் இது "அவர்கள் ஊதியம் கொடுப்பது போல் நடித்தார்கள். நாங்கள் வேலை செய்வது போல் நடித்தோம்."
உபரி மதிப்பை விளக்குவதற்கு கம்யூனிஸ்டுகள் அதிகம் பயன்படுத்துவது பென்சில் உற்பத்தியைத் தான். நாமும் அதையே எடுத்துக் கொள்வோம். ஒரு தொழிலாளி ஒரு பென்சிலில் ஒரு ஊக்கைப் பதிக்க ஒரு ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தொழிலாளி ஒரு நாளைக்கு 1000 பென்சிலுக்கு மேல் உற்பத்தி செய்ய வாய்ப்பளிக்கிறோம். வேலையை நுணுக்கமாகச் செய்தால் விரைவாக முடியும். ஆகையால் நுணுக்கமாகச் செய்ய கற்க வைக்கிறோம். (கற்க வைக்கிறோம் என்றால், நாம் கற்பிப்பது அல்ல, அதிகம் செய்ய வேண்டுமே என்பதற்காக லாவகமாக வேலை செய்ய தொழிலாளியே அதைக் கண்டுபிடிப்பான்). இப்படி புதிய தொழில்முறையை ஊக்குவிக்கிறோம். முடிந்தால் "அப்பா நீ வீட்டிலேயே இருந்து செய்து கொடு" என்றும் வசதி அளிக்கிறோம்.

அதே ஒரு தொழிலாளியைக் கூப்பிட்டு ஒரு நாளைக்கு 1000 பென்சில் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஊதியம் ரூ.1000 என்று சொல்லுங்கள். கண்டிப்பாக உற்பத்தி அந்த 1000 பென்சிலுக்கு மேல் தாண்டாது.
சரி, உற்பத்தியைப் பெருக்குவதில் எந்த முறை வலியது. எந்த முறை விஞ்ஞான ரீதியிலானது. எது முற்போக்கானது? எது பிற்போக்கானது? இந்த முறையைத் (சந்தை பொருளாதாராத்தைத்) தான் இப்போது சீன கம்யூனிச அரசாங்கமே பின்பற்றுகிறது. ஆனால் முதலாளித்துவ தேசத்தில் ஒரு பென்சிலுக்கு ரூ.1/- என்றால் செஞ்சீனத்தில் 0.20 பைசாவாக இருக்கும். இவர்கள்தான் உழைப்பைச் சுரண்டாதவர்கள். நம்புவோமாக. ஆமென்.