15 Oct 2012

மஹாளய அமாவாசை



இன்று மஹாளய அமாவாசை. பித்ருக்களுக்கு தர்ப்பனம் செய்வது இன்று மிகவும் முக்கியமானதாக பலரால் கருதப்படுகிறது. ஏன் தர்ப்பனம் செய்கிறோம்? நாம் செய்யும் தானங்களால் அல்லது முன்னோர்களுக்குப் பிடித்தமான நமது செயல்களால் அவர்களது ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செய்கிறோம்.

நான் காணும் பலர், பித்ருக்கள் என்று இன்று அறியப்படுபவர்களை அவர்கள் உயிருடன் இருக்கும்போது எப்படி நடத்தினார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்...

ஒரு வயதான நோயுற்ற பெண்மணி அவளது வீட்டின் வாசலிலேயே படுக்க வைக்கப்பட்டிருந்தாள். ஒரு நாள், இரு நாள் அல்ல, நான் பார்த்த வகையில் ஒரு பத்து ஆண்டுகளாவது அப்படித்தான் அந்த தாய் படுத்திருந்தாள். உள்ளே வீட்டில் இடமில்லாத காரணத்தால் அல்ல அவள் அப்படிக் கிடந்தது. அவள் அவளது பிள்ளைகளுக்குப்  பாரமாகத் தெரிந்ததால், தொந்தரவாகத் தெரிந்ததால் அவள் வாசலில் கிடத்தப்பட்டுக் கிடந்தாள். அவளுடைய நாளும் வந்தது. பரமேகினாள்.

இன்று அவளது புதல்வர்கள் அவளுக்குத் தர்ப்பனம் கொடுக்கிறார்கள். புது சேலை என்ன? வடை பாயாசம் என்ன? அவளுக்குப் பிடித்தமான பொருட்கள் அத்தனையும் வைத்துப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். உயிரோடு இருந்தவரை ஒரு டீ கொடுத்தாலும், "ஏ சனியனே! இந்தாப் பிடி" என்று கொடுத்தவர்கள். இன்று அவளுக்குப் பிடித்தமான உணவுகளுடன் அவள் நிழற்படத்திற்குப் படையலிடுகிறார்கள். கையெடுத்துக் கும்பிட்டு பயபக்தியுடன் அவளை வழிபடுகிறார்கள். எப்படி அவள் புதல்வர்களுக்கு இவ்வளவு பாசம் வந்ததது?

இது பாசம் அல்ல, வேஷமும் அல்ல. இது ஆசை. பேராசை... உயிரோடு இருந்த வரை அவளை எவ்வளவு கேவலமாக நடத்தமுடியுமா அவ்வளவு கேவலமாக நடத்திவிட்டு, இன்று அவர்களுக்குப் புண்ணியம் வேண்டுமாம் அவளது ஆசி வேண்டுமாம். "யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற" என்பது போல் ஆள் இருந்தபோது அவளை கவனிக்காமல் விட்டுவிட்டு, படத்திற்குப் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மஹாளய அமாவாசைக்கு பித்ரு பூஜை, தர்ப்பனம் செய்யக்கூடாது என்பதற்காக இதைச் சொல்லவில்லை. இப்படிப்பட்டவர்கள் அதைச் செய்துதான் என்ன பலன் என்ற ஆதங்கத்தால் சொல்கிறேன்.

இப்படி பூஜை, புணஸ்காரம் எல்லாம் செய்யாமல், அவளுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்தாலே அவளது ஆசி அவர்களுக்குக் கிடைக்குமே. அந்தத் தாய் கண்டிப்பாக தன் மக்கள் நன்மக்களாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்திருப்பாள். எல்லா தாயும் அப்படித்தான் நினைப்பார்கள். ஆகையால் இன்று வரை எப்படி இருந்தோமா? இனியாவது முடிந்த வரை நன்மக்களாக இருக்க முயற்சிப்போம். அதுவே நமக்குக் கோடானு கோடி புண்ணியங்களைத் தரும். இதுவும் பேராசைதான். ஆனால்... அதற்கு இது மேல்....