6 Sept 2013

பாண்டவர்கள் சிறுமையானவர்களா? அறமற்றவர்களா?



பாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து, ஏமாற்றியே தங்கள் எதிரிகளை  வீழ்த்தியிருக்கின்றனர். ஆகையால் யார் நல்லவர்கள் பாண்டவர்களா? கௌரவர்களா? என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது!


இதில் நான், கௌரவர்களைவிட பாண்டவர்கள் நல்லவர்கள் என்ற முடிவுக்கே வருகிறேன்.

இந்த முடிவை நான் அடைவதற்கு கீழ்க்கண்ட விபரங்களை அடிப்படைகளாகக் கொள்கிறேன்.

1. அந்த காப்பியம் முழுவதும் பாண்டவர்கள் குடும்ப ஒற்றுமைக்காகவே உழைத்தனர். தங்கள் பங்காளிகளால் இழைக்கப்பட்ட அநீதிகளை யாரிடமும் பேசாமல், அதை மறைத்து ஒற்றுமைக்காகவே பல இடங்களில் உழைத்தனர். கௌரவர்கள் அவர்களுக்கு விஷம் கொடுத்தனர்எரிக்கப் பார்த்தனர், நாட்டை இரண்டாகப் பிரிக்கும் போதும்கூட வளமற்ற பகுதியையே கொடுத்தனர், திறந்த சபைகளில் எப்போதும் பாண்டவர்களை கௌரவர்கள் அவமதித்தே வந்தனர்.

பாண்டவர்களின் முன்னேற்றத்தில் எல்லாவகையிலும் கௌவர்கள் தடைக்கல்லைப் போட்டுக் கொண்டே வந்தனர். இருப்பினும் பாண்டவர்கள் அமைதிக்காகவும், குடும்ப ஒற்றுமைக்காகவுமே உழைத்தனர். உ-ம்: அரக்கு மாளிகை இவர்களைக் கொல்லவே உருவாக்கப்பட்டது. இதை ஓரளவுக்கு அனைவரும் அறிவர். இருந்தும் அது குறித்துப் பாண்டவர்கள் எங்கும் பேசவில்லை.

ஏன் இதற்கெல்லாம் பயமா காரணம்? வெளியே நின்று மக்களிடம் பேசியிருந்தால். ஒரு புரட்சியே ஏற்பட்டுமக்களே கௌரவர்களைக் கொன்று பாண்டவர்களை அரியணையில் அமர்த்தியிருப்பார்களே!

2. துரியோதனனுக்கு பாண்டவர்களின் உதவி தேவைப்படும்போதெல்லாம் எந்த நிபந்தனையும் இன்றி அதைப் பாண்டவர்கள் செய்தனர். கானகத்தில் கந்தர்வன் ஒருவன் துரியோதனனைக் கட்டிப் போட்டு, அவனது மனைவிகளைக் கடத்திச் சென்றபோது, பாண்டவர்களே வந்து அவனைக் காப்பாற்றினர். அந்த நேரத்திலும் கூட  துரியோதனன் நிமித்தமாகவே அவர்கள் கானகத்தில் வாழ நேர்ந்தது. அப்போதுகூட துரியோதனன் அக்கானகத்திற்கு வந்ததன் நோக்கம் பாண்டவர்களைக் கொல்லவே.

3. பாண்டவர்கள் கௌரவர்களால் பலமுறை அவமானப்படுத்தப்பட்டும், தங்கள் மனைவி அவமானப்படுத்தப்பட்டும், பாண்டவர்கள், கௌரவர்களைப் போல அவர்களுக்குத் தீங்கு நினைக்கவில்லை.

4. பாண்டவர்கள் நினைத்திருந்தால் நாடு கடத்தலுக்குச் சம்மதியாமல், தங்கள் பலத்தால் ஆட்சியைப் பெற்றிருக்க முடியும். ஆனால் தாங்கள் கொடுத்த வார்த்தைக்காக அவர்கள்  
சொன்னபடி நடந்தார்கள். கௌரவர்களும் கொடுத்த வார்த்தைக்கேற்ப நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது முட்டாள்களின் கனவானது. அவர்கள் எப்போதும் தங்கள் பங்காளிகளின் நன்மையையும், அவர்களிடம் தங்கள் ஒற்றுமையையும் விரும்பினார்கள். கடைசி நிமிடம் வரை போரைத் தவிர்க்கப் பார்த்தவர்கள் பாண்டவர்கள்தான். கௌரவர்கள் அல்ல.

கடைசியாக "இருக்க ஒரு வீடும், வாழ ஒரு பசுவும் கொடு" என்று கேட்டனர். அதற்குக்கூட துரியோதனன் சம்மதிக்கவில்லை. அவன் போரையே விரும்பினான். பாண்டவர்களின் அழிவே  
அவனது நோக்கமாக இருந்தது.

5. போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகும், பாண்டவர்கள், போருக்கான வேர்க்காரணமான திருதராஷ்டிரனைத் துரத்திவிட வில்லை. அவர்களுடனேயே வைத்துக் கொண்டனர் {36 வருடங்களுக்கு}. அதன்பின்புதான் திருதராஷ்டிரன் கானகம் சென்று தனது தவத்தால் தனது உடலை எரித்துக் கொண்டான். தங்கள் பங்காளிகளை நம்பியிருந்தவர்களையும், அவர்களது மனைவியரையும் பாண்டவர்கள் எந்தத் தொல்லையும் கொடுக்காமல் தாங்கள் வாழ்ந்த காலம் வரை அவர்களை ஆதரித்து வந்தார்கள்.

6. பாண்டவர்கள் மூத்தவர்கள் {கௌரவர்கள் பக்கத்திலிருந்த} மதித்தார்கள், தங்களுக்கு முழுவதும் சாதகமாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களைக் கடைசி வரை மதித்தார்கள்.

அந்தப் பெரியவர்கள் அனைவரும் முறையானவற்றையே சொன்னார்கள். முறையானதையே பரிந்துரைத்தார்கள். ஆனால் நேரம் வந்த போது அவர்கள் அனைவரும் பாண்டவர்களுக்கு
எதிராகவே இருந்தனர். (உ-ம்) வாராணவத சதித்திட்டத்தை திருதராஷ்டிரன் அறிந்திருந்தும் அதைத் தடுக்கவில்லை. பொறுப்பு நிறைந்த பீஷ்மரும் அது குறித்து பெரிதாக ஆய்வு செய்யவில்லை.

பாண்டவர்கள் திரும்பி வந்த பிறகும் அவர்கள் நேர்மையாக நாட்டைப் பிரித்துக் கொடுக்கவில்லை.

சூதாட்டத்தை கௌரவப் பெரியவர்கள் தடுக்கவில்லை. தங்கள் மருமகன் சபையின் முன்பு அவமானப்படுவதை அவர்கள் தடுக்க முனையவில்லை. பாண்டவர்களை வெளிப்படுத்த நினைத்த
விராடப் போரில் அவர்களும் துரியோதனன் பக்கம் நின்றனர். கடைசிப் போரிலும் அந்தப் பெரியவர்கள் துரியோதனன் பக்கம் நின்று போரிட்டது சோகத்தின் உச்சம்.

வெளிப்படையாக அருளும் நல்வாழ்த்தும் தெரிவித்தார்கள், "உண்மை உங்களுக்குத் துணை புரியட்டும்", "நீங்கள் தான் எங்களுக்குப் பிடித்தமானவர்கள்" என்று அந்தப் பெரியவர்கள்
சொன்னார்களே ஒழிய அவர்களது செயல்களால் அதைச் செய்யவில்லை. வார்த்தைகள் வயிறை நிரப்புமா? அல்லது ஆழமான காயங்களை அவர்களது வார்த்தைகள் ஆற்றுமா? துரியோதனன் வெளிப்படையாகப் பகை பேசினான், கௌரவப் பெரியவர்கள் வெளிப்படையாக பாண்டவர்களை வாழ்த்திய பெரியவர்கள்தான் போரில் பாண்டவர்களுக்கு மறைமுக எதிரிகளாக இருந்தார்கள்.

இதையெல்லாம் அறிந்தும் கூட பாண்டவர்கள் கடைசி வரை அப்பெரியவரை மதிக்கவே செய்தார்கள். மறந்தும் ஒரு அவமரியாதையான வார்த்தையைக் கூட உச்சரிக்கவில்லை. ஏன்
அவர்களிடம் நியாயம் கூட கேட்கவில்லை. அவர்களின் வாழ்த்துகளை நாடியே எப்போதும் இருந்தார்கள். போரில் அர்ஜுனன் பல கட்டங்களில் பெரியவர்களைத் தவிர்க்கவே எண்ணினான்.

அவர்களுடன் நேரிடையாகப் போர் புரிய சங்கடப்பட்டான். விராட நகரத்தில் நடந்த போரில் கூட அர்ஜுனன் கர்ணன் மற்றும் துரியோதனனின் உடைகளைக் களைந்தானே தவிர, பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியர், அஸ்வத்தாமன் ஆகிய மரியாதைக்குரியோரின் உடைகளைக் களையவில்லை.

ஆனால் இந்தக் கௌரவப் பெரிவர்கள்தான் கௌரவர்களைவிட பெரிய எதிரிகளாக இருந்தார்கள். இருப்பினும் அந்தச் சகோதரர்கள் வார்த்தைகளாலும், செயல்களாலும் தங்கள் நினைவுகளை அசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை.

உங்கள் சொந்தப் பெரியவர்களே உங்களை எதிர்த்து நிற்கும் போது, உங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கும்?
கௌரவர்கள் மற்றும் கௌரவப் பெரியவர்களின் தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் மேலான காரணம் என்னவென்றால், அவர்களது நினைவுகள், வார்த்தைகள், செயல்கள்
ஆகியன ஒரே மாதிரியாக இல்லை. ஒருவர் குழப்பமான மனநிலையில் இருக்கும்போது அவர்களின் தலைமை எந்த அளவுக்கு வெற்றிபெறும்?

7. 18வது நாள் போருக்குப் பிறகு, அன்று இரவு அஸ்வத்தாமனும் குலகுரு கிருபாச்சாரியரும் பாண்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது தாக்கி பெரும் குற்றமிழைத்தனர். உறங்கும்
வீரர்களைக் கொல்வது யாராலும் ஏற்கத்தகாதது. ஒருவரைப் போரில் எதிர் கொள்ள முடியவில்லை என்றால், இதுபோன்ற ஈனச்செயல்கள் புரிவதைவிட தான் கோழை என்றே ஏற்றுக்கொள்ளலாமே

அஸ்வத்தாமனின் வெறுப்பு எந்த அளவுக்கு கீழ்நிலைக்குச் செல்கிறது என்று பாருங்கள். உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவைக் கூட அவன் கொல்ல நினைக்கிறான்.

இவையெல்லாம் நடந்த பிறகும் பாண்டவர்கள் அஸ்வத்தாமனை மன்னித்து அவனை உயிருடன் விட்டனர். மேலும் இவ்வளவுக்குப் பிறகும் கிருபாச்சாரியாரைத் தொடர்ந்து குல குருவாக ஏற்று, தங்கள் ஒரே வாரிசான தங்கள் பேரன் பரீக்ஷித்தை அவரிடம் கல்வி பெற வைக்கின்றனர்.

8. பாண்டவர்கள் எப்போதும் அமைதிக்காகவே உழைத்தனர், ஆனால் கௌரவர்கள் எப்போதும் போரையே எதிர்பார்த்தனர். ஐந்து கிராமங்களைக் கொடுத்தால் கூட பாண்டவர்கள் அமைதி
காத்திருப்பார்கள். ஆனால் துரியோதனன் ஒரு பொருளைக் கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்லி, பல கோடி மக்களின் சாவுக்குக் காரணமானான்.


9.பாண்டவர்களின் முக்கியமான குற்றம் சூதாடியதே! தர்மன் சூதுக்கு அடிமையாக இருந்தான்.

அதைத் துரியோதனன் பயன்படுத்திக் கொண்டான். ஆனால் அதிலும் விளையாட்டுக்காக சூதாடாமல் வஞ்சனையுடன் சூதாடிய துரியோதனன் மற்றும் சகுனியின் எண்ணம் பாண்டவர்களை விட தீமையானதே.

10. பாண்டவர்கள் போர் விதிகளை மீறினார்கள் என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு முறையும் அது கௌரவர்களால் மீறப்பட்ட பிறகே, அவர்களும் மீறினார்கள். பதிலடி கொடுத்ததை நாம் எப்படி பழி சொல்ல முடியும்?

வருடக்கணக்கான தங்கள் அமைதியைப் பாண்டவர்கள் கடைசியாகத்தான் உடைத்தார்கள். அதுவும் அதில் கிருஷ்ணனின் பங்கு மகத்தானது. வெற்றிக்காக சில வரம்பு மீறுதல்களை அவர்களும் செய்ய வேண்டியிருந்தது.

வாழ்வில் மனிதன் வெள்ளையாகவோ கருப்பாகவோ இருக்க முடிவதில்லை. சாம்பல் நிறத்தில்தான் இருக்கிறான். ஆனால் எவ்வளவு கருப்பாக இருக்கிறான் என்பதே கேள்வி. அப்படிப் பார்க்கையில் கௌரவர்களின் சாம்பல் நிறத்தில் அதிக கறுப்பும், பாண்டவர்களிடத்தில் குறைவான கறுப்புமே இருந்தது.

தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காகவும், அதர்மன் தோற்க வேண்டும் என்பதற்காகவும், கலிகாலத்தில் அநீதியின் வழிகளையும் பின்பற்றத்தான் வேண்டியிருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

பீஷ்மரை அர்ஜுனனால் எளிதாக வெல்ல முடியும். பலமுறை அவரை வென்றும் இருக்கிறான். ஆனால் அவனால் கண்டிப்பாகக் கொல்ல முடியாது. அவனுக்கு ஒரு கவசம் தேவைப்பட்டது. பாதுகாப்புக்காக அல்ல, ஒரு முகமூடிக்காக. சிகண்டியைக் கொண்டு தனது முகத்தை பீஷ்மருக்குக் காட்டாமல் பீஷ்மரைத் தனது கணைகளால் துளைத்தான்.

துரோணரைக் கொல்ல என்றே அவதரித்தவன் திருஷ்டத்யும்னன், அங்கும் பார்த்தன் நினைத்திருந்தால் துரோணரை எளிதில் வென்று விட முடியும். ஆனால் அதை அவன் செய்யத் துணியவில்லை. அது திருஷ்டத்யும்னனின் பொறுப்பு. அவனால் கொல்ல முடியாத போது அங்கே தருமனின் பொய் அவசியம் தேவைப்படுகிறது. அதற்கும் கிருஷ்ணன் தான் காரணமாக இருக்கிறான். அங்கேயும் பாண்டவர்களைக் குறை சொல்ல முடியாது.

அபிமன்யுவை யாரும் விதிமுறைக்குட்பட்டு கொல்லவில்லை. ஒருவனை பலபேர் சேர்ந்து கொன்றார்கள். அதில் கர்ணனுக்கும் பங்கு உண்டு. மகத்தான கர்ணன் அவ்விஷயத்தில் தலைகுணிந்தே நிற்கிறான். அவன் செய்த அநீதிக்கு பதில் அநீதிதான் கர்ணன் தேரை மேலெழுப்ப முயற்சிக்கும் சமயம் அவன் கொல்லப்பட்டது. அவன் அப்படிக் கொல்லப்படவில்லையெனில் அவனுக்கு மறுபிறப்பு அவசியமாகிறது. கர்ணனுக்கு தகன காரியங்களைச் செய்தவன் கிருஷ்ணன். கிருஷ்ணனால் தகனம் செய்யப்படுபவன் மறு பிறப்பு அடைய முடியாது. அப்படியென்றால் அவன் செய்த கர்மத்தை இங்கேயே தொலைத்துவிட்டு செல்லவேண்டும்.

திரௌபதி துயிலுரிப்பின் போது, துரியோதனன் தொடையைப் பிளந்து கொல்வேன் என்பது பீமனின் சபதமாகும். ஆகையால் இறுதியில் முற்றிலும் துரியோதனை வீழ்த்திய பிறகே. பீமன் அவனைத் தொடையில் அடித்துக் கொன்றான்.

பாண்டவர்களோ கிருஷ்ணனோ அதர்மத்தின் வழி நிற்கவில்லை. தர்மத்தின் வழி நின்று, தர்மத்தைக் காக்கவே சில கபட (ராஜதந்திர) வழிகளைக் கையாண்டனர்.

வெற்றிபெற்றவன் வடித்ததே வரலாறு என்பது ஆணித்தரமான உண்மை. ஆனால், உலக வரலாறுகளில் எடுத்துப் பாருங்கள். வென்றவன் முற்றிலுமான நல்லவன் என்றே காட்டப்பட்டிருக்கும். ஆனால், மாபாரதத்தில் அப்படி கிடையாது. நல்லவர்களின் முகத்திரையும் கிழித்துக் காட்டப்பட்டிருக்கும்.

கர்ணனைவிட பாண்டவர்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டும் கிடையாது. கர்ணனுடன் பாண்டவர்களை ஒப்பிட்டு சிறுமை படுத்துகிறோம் என்றால், துரியோதனை ஏன் சிறுமை படுத்தவில்லை? துரியோதனன் பாண்டவர்களை விட அவ்வளவு அறம்சார்ந்தவனா?

அறத்தின் விதிகள் மிக நுட்பமானவை. பல கோணங்களில் ஒரு சம்பவத்தைப் பார்க்க வேண்டும். நமக்கு அறம் எனப் பட்டது மற்றவருக்கு அறமில்லாமல் போகும். பொதுப்புத்திக்கு எது அறமோ அதுவே அறம். பிரபஞ்ச நன்மைக்கு எது அறமோ அதுவே அறம். கலிகாலத்தில் அறத்தை நிலைநாட்டக்கூட அநீதியை மேற்கொள்ள வேண்டியது விதியின் கட்டாயமாகும்.

மேற்கண்ட கருத்துகள் http://mahabharatham.arasan.info/p/blog-page_23.html#nabble-td32|a45 என்ற பகுதியில் நடக்கு விவாதத்திற்கு பதிலாகத் தயாரிக்கப்பட்டது.

நண்பர்களே!

மஹாபாரத மொழியாக்கத்தில் நான் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால், பல நாட்களாகத் தொடர்ந்து பதிவு ஏதும் இட முடியவில்லை. முடிந்த வரை இந்தத் தளத்தில் பத்து நாளைக்கு ஒரு முறையாவது பதிவு இட வேண்டும் என்றிருந்தேன். ஆனால் முடியவில்லை. இருப்பினும் ஒரு நாளைக்கு நூறு பேறாவது இங்கு வந்து பார்த்துச் செல்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நான் மொழிபெயர்க்கும் மஹாபாரத வலைப்பூவிற்கும் உங்கள்  ஆதரவைக் கோருகிறேன். ஆதிபர்வம் முடியப்போகும் தருவாயில் இருக்கிறது. அங்கே நடக்கும் விவாதங்களில் பங்கு கொள்ளவும் உங்களை அழைக்கிறேன்.