4 Nov 2013
அன்பு நாய்க்குட்டி
விதியின் போக்கை யார்தான் அறிவார்
இரண்டு கைக்குள் அடங்கும் அந்த ஜீவன்
செய்த சேட்டைதான் எத்தனை? எத்தனை?
சின்ன சின்ன பற்கள் கொண்டு
மெல்ல மெல்ல கடிப்பதும்
காதைக் காதை ஆட்டிக் கொண்டு
காலைத் தூக்கி அடிப்பதும்
அங்குமிங்கும் ஓடிக்கொண்டு
மலஜலத்தைக் கழிப்பதும்
பாலைக் கொட்டி வைத்தவுடன்
நக்கி நக்கி குடிப்பதும்
அந்தோ! எந்தப் பாவியின் நச்சுபார்வை
அதன்மேல் பட்டதோ
குடித்த பால் ஈரம் காயுமுன்னே
எமன் அடித்த விதம்தான் என்னே!
மின்சாரம் தடைபட்டுப் போனதுவும் விதியோ
அழகிய கயிறு கொண்டு கட்டியதும் விதியோ
இருளிலே சோறு போட போனதுவும் விதியோ
மாடிக்குப் போன மகனை விரைந்துவா என்று
அன்புக் கட்டளை இட்டதுவும் விதியோ
அம்மாவின் கட்டளைக்கு மகன் அடிபணிந்து வந்ததுவும் விதியோ
ஒரு நிமிட நேரத்திற்குள் அத்தனையும் முடிந்தது
செம்பவளக் காட்டிடையே வெண்சங்கு கிடந்தது போல்
உயிர் துடி துடித்து அடங்கியது
அத்தனை பேர் இதயமும் துடித்து அடங்கி இயங்கியது
உயிர் பிரிந்ததை அறிந்து பார்க்க வந்தது போல்
மின்சாரம் பளிச்சென்று பாய்ந்து வந்தது.
- மகனின் கால்பட்டு உயிரிழந்த நாய்க்குட்டியைப் பிரிந்த துயர் தாளாமல் எனது சித்தி N.பிரபா பிரேம்குமார் எழுதியது.