21 May 2014

கண்டேன் கங்கையை!

ஐந்தாம் தேதி இரவு ஒரு மணிவரை கடும் வேலை. அடுத்த நாள் காலை 7 மணி அளவில் கயா எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும். மாலையே பயணத்திற்கு வேண்டிய சில பொருட்களைக் கொள்முதல் செய்து வைத்திருந்தேன். இரவு 7 மணி முதல் 1 மணி வரை முடிக்க வேண்டிய வேலைகளை முடித்தேன். தூங்கச் செல்லும்போது மணி 2. பயணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் என் மனைவி தயார் செய்து வைத்திருந்தாள். காலை 4.30 மணிக்கு எனது மனைவியால் எழுப்பிவிடப்பட்டேன். அவசர அவசரமாகக் குளித்துக் கொண்டிருந்த போது, நண்பர் திரு.ஆர்.கே.கமலக்கண்ணன் அவர்களிடம் இருந்து தொலைபேசி.

"சார், ஏழு நாள் ஊரில் இருக்க மாட்டோம். கொத்தாரி கம்பனிக்கு ஒரு அப்ளிகேஷன் பாரம் தட்டச்சுச் செய்து அனுப்ப வேண்டும். அதை அனுப்பாமல் என்னால் காசிக்கு வர முடியாது" என்றார். "சரி பொறுங்கள்" என்று சொல்லி, குளித்து முடித்துவிட்டு, அந்த விண்ணப்பத்தைத் தட்டச்சுச் செய்து மின்னஞ்சல் அனுப்பினேன்.

திரு.ஜெகதீஷ் அவர்கள்
6.5.2014 காலை 5.30 மணிக்கு, நான், திரு.விக்ரம் சீனிவாசன், திரு.ஆர்.கே. கமலக்கண்ணன் ஆகியோர் விக்ரம் அச்சகத்தில் கூடி, தேரடியில் இருந்து எழும்பூர் செல்லும் பேருந்தில் காலை 6.00 மணிக்கு ஏறினோம். பேருந்தில் ஏறியதும் திரு.ஜெகதீஷ் அவர்களிடம் இருந்து தொலைபேசி, "என்னங்க, எல்லோரும் சரியான நேரத்துக்கு வந்துருவீங்களா?" "வந்திடுவோம். எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டோம்" என்று சொன்ன எனக்குத் திரு.ஜெயவேலன் அவர்கள் ஞாபகம் வந்தது.

பேருந்து சுங்கச்சாவடியைக் கடந்து கொண்டிருந்த போது, திரு.ஜெயவேலன் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தேன். "என்னங்க, கிளம்பிட்டீங்களா?" என்று கேட்டேன். "இல்லை. வீட்டுலதான் இருக்கேன். இனிதான் கிளம்பணும்" என்றார். "நேரம் ஆகுதுங்க சீக்கிரம் கிளம்புங்க" என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்தேன்.

ஏழு மணியளவில் எழும்பூரை அடைந்தோம். கயா எக்ஸ்பிரஸ் ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. நண்பர் திரு.ஜெகதீஷ் அவர்களும் அவரது குடும்பத்தாரும் எங்களுக்காகக் காத்திருந்தனர். பிறகு, நாங்கள் ஏற வேண்டிய கோச்சுக்கு சென்று ஏறினோம்.

திரு.ஜெயவேலன்
மணி 7.20. திரு.ஜெயவேலன் இன்னும் வரவில்லை. அவரை மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். "என்னங்க, இன்னும் உங்களக் காணும்?". "நான் ஸ்டேஷன்குள்ள நுழஞ்சுட்டேன். என்ன பிளாட்பாரம்?" என்று கேட்டார். "நான் ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரம்" என்றேன். "கோச் நம்பர் என்ன?" என்று கேட்டார். "நான் S3" என்று சொன்னேன். பிறகு அவர் இணைப்பைத் துண்டித்தார்.

ஐந்து நிமிடம் கழிந்தது. இப்போது அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். "என்னங்க 9ம் நம்பர் பிளாட்பாரம் S3லதான் இருக்கேன். உங்கள யாரையும் காணோமே. என்ன சீட் நம்பர்?" என்று கேட்டார். நான் "39" என்று சொன்னேன். "இல்லையே" காணோமே" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏங்க நீங்க நல்ல உயரமாச்சே, நீங்க எங்கிருந்தாலும் எனக்குத் தெரியுமே. இருங்க பிரதீஷிடம் கொடுக்கிறேன்" என்று சொல்லி, நண்பர் பிரதீஷிடம் கொடுத்தேன். அவர், "அண்ணா, எஸ்கலேட்டர் பக்கத்திலேயே கோச் இருக்கும்ணா" என்றார். அதற்கு அவர் "சென்டிரலில் ஏதுடா எஸ்கலேட்டர்" என்று கேட்டிருக்கிறார்.

அப்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது. அவர் எழும்பூருக்கு வராமல் சென்டிரலுக்குச் சென்றுவிட்டார் என்று. உடனே நிலைமையைப் புரிந்து கொண்ட திரு.ஜெயவேலன் அவர்கள். ஒரு ஆட்டோவைப் பிடித்து விரைவாக எழும்பூர் வந்து மேம்பாலத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, ரயில் புறப்பட ஆரம்பித்துவிட்டது. இவ்வளவு நேரமும் தொலைபேசியைத் துண்டிக்காமல் பிரதீஷுடன் தொடர்பிலேயே இருந்தார் திருஜெயவேலன். அவர் கீழே இறங்கி வருவதற்குள் ரயில் நடைமேடையைத் தாண்டிவிட்டது.

அனைவருக்கும் பெரும் வருத்தமாக இருந்தது. "சரி, டிரெய்ன் அடுத்து எந்த ஸ்டேஷன்ல நிக்கும்?" என்று கேட்டார் திரு.ஜெகதீஷ். யாரோ ஒருவர் "ஓங்கோலில்" நிற்கும் என்றார். உடனே திரு.ஜெயவேல் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, "அடுத்து ஓங்கோலில் நிற்குமாம். அங்க சீக்கிரமா வந்திடுங்க" என்றார்.

அரை மணி நேரம் கழித்து ஜெயவேலன் அவர்கள் தொடர்பு கொண்டு, "காரில் வேகமா வந்தாலும் ஓங்கோல்-ல டிரெயினப் பிடிக்க முடியாதுனு டிரைவருங்க சொல்றாங்க. கவலப்படாதீங்க. நான் உங்களுக்கு முன்னையே காசிக்குப் போயிடுவேன்" என்று சொன்னார்.

நாங்கள் 16 பேர் கொண்ட குழு, அதில் ஒருவர் ரெயிலைப் பிடிக்கமுடியவில்லை என்றதும் அனைவருக்கும் உற்சாகம் குறைந்தது. அதிகாலையிலேயே எழுந்து அரக்கபறக்க ஓடி வந்து ரெயிலைப் பிடித்து, கடைசி நேர பரபரப்புக்கு உள்ளானதால் அனைவரும் சிறிது களைத்துப் போனதாகத் தெரிந்தது.

ஒரு மணி நேரம் சென்றதும், "அவர் எப்படியும் வந்துவிடுவார்" என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டு மீண்டும் உற்சாகத்தை அடைந்தோம். அனைவருக்கும் RAC டிக்கெட்தான் ஆகையால், Side Seatகளில்அனைவரும் அமர்ந்திருந்தோம். 8 சீட்டுங்கள் கொண்ட எங்கள் பகுதியில் ஒரு உத்திரப் பிரதேசக் குடும்பம் அமர்ந்திருந்தது. அவர்கள் எங்களுக்குச் சிறிது ஒத்துழைப்புக் கொடுத்ததால், நான்கு பேர் ஒரு பகுதியில் அமரக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆகையால், ஆறு பேர் சேர்ந்து சீட்டு விளையாட ஆரம்பித்தோம்.

இரண்டு நாள் ரயில் பயணமும் சீட்டு விளையாட்டு, அரட்டை, உறக்கம் என்றே கழிந்தது. வழியில் பல ரம்மியமான இடங்களின் தரிசனமும் கிடைத்தது. வழியெங்கும் மனிதர்களின் முகத்தோற்றமும் மொழியும் மாறுகிறதேயொழிய இந்தப் பரந்த பாரதப் பெருநிலம் முழுக்க ஒரே தன்மை இருப்பதை உணர முடிந்தது.

ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல் ஆகிய பகுதிகளைக் கடந்தோம். மாலை 7 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் திரு.ஜெயவேலன் அவர்கள் தொடர்பு கொண்டு, தான் காசியை அடைந்துவிட்டதாகச் சொன்னார். ரெயிலை விட்ட உடனேயே நண்பர்களைத் தொடர்பு கொண்டு விமானத்தில் டிக்கெட் போட சொல்லி, சென்னை-டில்லி-அலாகாபாத் சென்று அங்கிருந்து வாரணாசியை அடைந்துவிட்டதாகச் சொன்னார். நாங்கள் அனைவரும் நிம்மதி கொண்டோம்.

இரவு உணவு உண்டு உறங்கினோம். நள்ளிரவில் ரயில் நாக்பூரை அடைந்தது. இதுவரை ஹைரதாபாதைக் கடந்திராத எனக்கு நாக்பூர் ஸ்டேஷனைக் கண்டதும் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. நாம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பே உவகையைத் தந்தது. Side Seatல் நானும் திரு.ஆர்.கே.கமலக்கண்ணன் அவர்களும் படுத்துக் கொண்டோம். நான் படுத்திருந்ததால் அவர் அமர்ந்து உறங்கினார். சிறிது நேரம் கழித்து அவரைப் படுக்க வைத்து விட்டு, நான் அமர்ந்த படியே உறங்கி வந்தேன்.

காலையில் "சாய், சாய்" என்ற குரலைக் கேட்டு விழிப்புத் தட்டியது. இரயில் இட்டார்சி நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அனைவரும் எழுந்து டீ குடித்து விட்டும் மீண்டும் அரட்டையில் இறங்கினோம். நாங்கள் படித்த புத்தகங்களைக் குறித்து விவாதித்தோம். மஹாபாரதம் குறித்து விவாதித்தோம். இன்றைய அரசியல், சமூகம் எனப் பல தலைப்புகளில் விவாதித்தோம். நால்வர் கூடி விவாதிப்பது என்பது அந்த நால்வருக்கும் எவ்வளவு புதிய தகவல்களைத் தருகின்றன? ஆனால் விவாதங்களில் ஈடுபடுவதற்குத் தான் நமக்கு நேரம் கிடைப்பதில்லை.

முதல் நாளை போலவே அன்றும் சீட்டு விளையாடினோம். நாங்கள் சீட்டு விளையாடுவதைக் கண்டு அருகில் இருந்த ஒரு உத்திரப்பிரதேச இளைஞன் எங்களுடன் சீட்டு விளையாட்டில் கலந்து கொண்டான். அவனைக் கண்டு இன்னொருவன் எங்கள் அருகிலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான். விளையாடிக் கொண்டே பேச்சுக் கொடுத்ததில் அவன், "நான் சென்னையில் தச்சு வேலை செய்கிறேன். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் செல்வேன். எங்கள் ஊரில் அவ்வளவு வேலை இருக்காது. ஊதியமும் குறைவு. சென்னையில் வேலை இல்லை என்ற நிலை இல்லை. ஊதியமும் திருப்திகரமாக இருக்கிறது" என்றான்.

அந்த இளைஞன் நண்பர்களுடன் வந்திருந்தான். திடீரென ரெயில் பெட்டியில் ஸ்குவாடு ஏறி டிக்கெட்டுகளைப் பரிசோதித்தார்கள். அப்போது அந்த இளைஞனுடன் வந்தவர்களில் இருவர் Confirm ஆகாத டிக்கெட்டுகளுடன் இருந்தது தெரிந்தது. ஆகையால் அந்த இளைஞன் Fine கட்டும்படி நேர்ந்தது. அது முதல் அவன் எங்களிடம் நெருங்கிப் பேசக் கூச்சப்பட்டான்.

சீட்டு விளையாட்டு, அரட்டை, உணவு, உறக்கம் என்றே அன்றும் கழிந்தது. இரவு ஏழு மணியளவில் முகல்சராய் இரயில் நிலையத்தை அடைந்தோம். வாரணாசிக்கு அருகாமையில் இருக்கும் இரயில் நிலையம் அது. அங்கே இறங்கினோம். வாரணாசிக்கு எப்படிச் செல்வது என ரயில் நிலையத்தில் விசாரித்தோம். வாரணாசிக்குச் செல்லும் ரயில் சிறிது நேரத்தில் வந்துவிடும். அதில் செல்லலாம் என்று அவர்கள் அறிவுறுத்தினர். திரு.ஜெகதீஷ் அவர்கள் ரயில் டிக்கெட் எடுத்துவந்தார். ரயில் வருவதற்கு வெகு தாமதமானது. சரி வெளியே சென்று ஆட்டோ பேசி பார்க்கலாம் என்று திரு.விக்ரம் சீனிவாசன் சென்றார். ஒரு ஆட்டோ டிரைவரிடம் பேசி மூன்று ஆட்டோக்கள் புக் செய்து அதில் சென்றோம்.

முகல்சராயில் இருந்து ஆட்டோவில் செல்லும் போது நான் கவனித்தது மோடிக்கு இருந்த வரவேற்பையும் பாஜகவின் செல்வாக்கையும் தான். எங்குத் திரும்பினாலும் மோடி மற்றும் பாஜக. வழியில் பல திருமணக் கொண்டாட்டங்களையும் கண்டோம். தமிழ்நாட்டில் உள்ளது போல இல்லாமல், தெருக்களில் நடைபெறும் திருமணக் கொண்டாட்ட ஆட்டங்களில் மகளிரும் பங்கு பெறுகின்றனர்.

வழியெங்கும் இருள். எந்தத் தெருவிளக்கும் எரியவில்லை. அந்தச் சாலை ஒரு நெடுஞ்சாலையைப் போலத் தான் இருந்தது. ஆனால் அச்சாலைகள் பள்ளமும் மேடுமாக கரடுமுரடாக இருந்தது. அதைக் காரிருள் மூடியிருந்தது.

வாரணாசியை நெருங்குமுன் ஆட்டோ ஒரு பாலத்தைக் கடந்தது. "இதுதான் கங்கை" என்றார் ஆட்டோக்காரர். அப்போது ஏற்பட்ட பரவசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பாலத்தைக் கடந்த பிறகும் கண்கள் காணும் வரை கங்கையை எட்டிப் பார்த்தபடியே வந்தேன். கங்கையைக் கடந்த வரும்போது ஆர்.கே.அவர்கள் "பாருங்க சார். பட்டுத்துணியால் மூடி பிணத்தை எடுத்து வருகிறார்கள்" என்றார். ஆனால் நான் பார்ப்பதற்குள் அக்கூட்டம் மறைந்து போனது. அதே போல மற்றுமொரு இடத்தில் திரு.ஜெகதீஷ் அவர்கள் "பிணத்தை எடுத்துச் செல்கிறார்கள்" என்றார் அதையும் என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது "காசியில் இறக்க வேண்டும்" என்ற மக்களின் நம்பிக்கையைக் குறித்துப் பேசிய படியும் கடைத்தெருக்களை நோட்டம்விட்டபடியும் ஆட்டோவில் பயணித்தோம்.

பயணத்தை ஏற்பாடு செய்திருந்த திருமதி.சுதா அவர்கள் நாங்கள் தங்குவதற்காகச் சங்கரமடத்தில் ரூம் புக் செய்திருந்தார்கள். ஆகவே சங்கரமடத்திற்கு வழிகேட்டபடியே பயணித்தோம். திரும்பினால் சங்கர மடம் அங்கே திரு.ஜெயவேலன் அவர்கள் எங்களை வரவேற்றபடி நின்று கொண்டிருந்தார். "என்னங்க இது. தாடியும், மீசையுமா?" என்றார். நான் வேண்டுதல் என்றேன். திருமதி.சுதா அவர்கள் சங்கர மடத்தில் பேசி அறைகளை உறுதி செய்வதற்குள் நான், திரு.ஜெயவேலன், திரு.ஜெகதீஷ், திரு.விக்ரம்சீனிவாசன், திரு.ஆர்.கே. திரு.பிரதீஷ் ஆகியோர் காபி குடிப்பதற்காகச் சென்றோம். மண் குவளையில் காப்பிக் கொடுத்தார்கள். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சிறு மண் குடுவையில் காபி என்றால் ரூ.10, பெரிய குடுவையில் என்றால் ரூ.30/ ஆம்.

அதற்குள் அறைகள் உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வரவே உடனே அறைக்குச் சென்று எங்கள் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, சோர்வு களைய ஒரு குளியலைப் போட்டு, பேண்டில் இருந்து கைலிக்கு மாறினேன். இரவு நேரத்திலேயே கங்கையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் எங்கள் குழுவில் இருந்த ஆண்கள் அனைவரும் கிளம்பினோம். மடத்தை விட்டு வெளியே வந்த போது, ஒருவர் இங்கே கைலி அணியக்கூடாது என்றார். ஆகவே உடனே அறைக்குச் சென்று வேட்டி கட்டி கொண்டு வந்தேன்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே அனுமான் காட்டும், ஹரிச்சந்திரன் காட்டும் (வாயில்கள்) இருந்தன. அனுமான் காட் வழியாகப் படித்துறையில் இறங்கினோம். கங்கையை அருகிலேயே கண்டோம். "கண்டேன், கண்டேன் கண்டேன்!! கண்ணுக்கினியன கண்டேன், தொண்டீர் எல்லோரும் வாரீர்" என்று எனக்குக் கூவத்தோன்றியது. கங்கையில் நீராட வேண்டும் என்ற ஆசை. ஆனால் இரவில் நீர்நிலைகளில் நீராடக்கூடாது என்று மகாபாரதத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. ஆகையால் அவ்வாசையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அனுமான் காட்டில் இருந்து ஹரிச்சந்திரன் காட்டுக்குச் சென்றோம். பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. "நான் கடவுள்" திரைப்படத்தில் கண்டது போல அக்காட்சி இருந்தது. அவ்வளவு பிணங்கள் அங்கு எரிகின்றன ஆனால் துர்நாற்றம் என்பது கிஞ்சிற்றும்  இல்லை.

ஹரிச்சந்திரன் காட்டைத் தாண்டி நடந்து கொண்டிருந்த போது திரு.ஜெயவேல் அவர்கள் சொன்னார், "நேற்றே வந்துவிட்டேனா, என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்று முழுவதும். இங்கே இருந்து நடந்தபடியே எல்லாப் படித்துறைக்கும் போய்ப் பாத்துட்டு வந்துட்டேன்" என்றார். "புண்ணியம் செய்தவர் ஐயா நீங்கள்" என்று நான் நினைத்துக் கொண்டேன்.

குமரகுருபரர் தங்கியிருந்த இடம் என்று சொல்லப்பட்ட இடத்திற்கு வந்ததும் சற்று நின்று கங்கையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நவநாகரிக அந்தணர் அங்கே வந்தார். அவரது மீசை "குரு" திரைப்படத்தில் வரும் கமலின் மீசை போல இருந்தது. ஆள் நல்ல வெளுப்பு, அட்சரச் சுத்தமாகத் தமிழ் பேசினார். உதட்டுக்குக் கீழே கருவண்டு போல முடியை மழிக்காமல் வைத்திருந்தார். வாயோரம் புகையிலை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆளைப் பார்த்தல் அந்தணர் என்று சொல்ல முடியாது, நவநாகரிக வியாபாரி போல இருந்தார்.

நாங்கள் தமிழ் பேசுவதையும், குமரகுருபரர் குறித்துப் பேசுவதையும் கேட்டு நின்ற அவர், "நீங்க தமிழ்நாடா? தமிழ்நாட்டுல எங்க?" என்று கேட்டார். நாங்கள் விபரங்களைக் கூறினோம். அவர் எங்களுக்குக் காசியின் பெருமையையும், சில வரலாற்றுக் குறிப்புகளையும் சொல்லிவிட்டு, தான் நீராடப் போவதாகச் சொன்னார். எங்கள் குழுவில் யாரோ ஒருவர் "இரவில் நீராடலாமா?" என்று கேட்டார். அதற்கு அவர், "காசியில் நவக்கிரகங்களும் சக்தியை இழக்கின்றன. ஆகையால் இங்கு அதுபோன்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை" என்று சொன்னார். இருப்பினும் நாங்கள் நீராடமலேயே அறைக்குத் திரும்பினோம்.