ஒருவர் இறந்துவிட்டால், தீர்ப்பு நாள் வரை அவர் மண்ணுக்குள் அமைதியாக உறங்குவார். வீட்டுச் சுவர்களில் அவரது நினைவாகப் புகைப்படங்கள் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஒருபோதும் அவர் வணங்கப்பட மாட்டார்.
அவரது நினைவு நாள்களில் இடுகாட்டுக்குச் சென்று "அவர் அமைதியாக உறங்க வேண்டும்" என்று கடவுளிடம் வேண்டுவர் குடும்பத்தார். நிச்சயம் அவர் அங்கே வணங்கப்படுவதில்லை. அவர் உறங்காமல் எழுந்துவிட்டதாகக் கருதப்பட்டால் வேறு வழியே இல்லை, அவர் பேயாக மட்டுமே பார்க்கப்படுவார்.
நிச்சயம் இந்நம்பிக்கை நம்மண் சார்ந்தது இல்லை.
இறந்தோரை நாம் ஒருபோதும் பேயாகக் காண்பதில்லை. பெரும்பாலான நாட்டுப்புறச் சிறுதெய்வங்கள் நம் மண்ணில் வாழ்ந்த மூதாதையரே. குல தெய்வங்களும் நம் மூதாதையரே.
"சிறுதெய்வ வழிபாடே நம் மண் சார்ந்தது, பெருந்தெய்வங்கள், வேதங்கள், இராமாயணம், மஹாபாரதம் மற்றும் ஏனைய இந்து மத சாத்திரங்கள் அனைத்தும் அந்நியமானவை" என்று நிறுவ சிலர் முனைகிறார்கள்.
அதாவது வேத மதம் வேறு, நம் மண்ணின் மதம் வேறு என்று நிறுவும் முயற்சி நடைபெறுகிறது.
உண்மையில் இங்கு மதம் என்ற ஒன்றே இருந்ததில்லையே.
வேதங்களும், இதிகாசங்களும், உபநிஷத்துகளும், பிற சாத்திரங்களும் இம்மண்ணின் வாழ்வு முறையைப் பிரதிபலிப்பவையே; நிச்சயம் மதநூல்களல்ல.
நேற்று மொழிபெயர்த்த மஹாபாரதச் சுலோகங்கள் இரண்டு பின்வருமாறு கூறுகின்றன.
//தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, கந்தர்வர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, பிசாசங்கள் அல்லது கின்னரர்களோ எவராக இருந்தாலும் ஒருவன் பித்ரு வழிபாட்டை எப்போதும் செய்ய வேண்டும்.(4)
மக்கள் பித்ருக்களை முதலில் வழிபடுவதும், அதன் பிறகு தேவர்களைத் துதித்து அவர்களை நிறைவடையச் செய்வதும் காணப்படுகிறது. எனவே, ஒருவன் மிகக் கவனமாக எப்போதும் பித்ரு வழிபாட்டைச் செய்ய வேண்டும்[1].(5)
- மஹாபாரதம், அனுசாஸன பர்வம் 87:4-5//
அதாவது தேவர்களை வழிபடுவதற்கு முன்பு பித்ருக்களை வழிபட வேண்டும் என்பது மஹாபாரதத்தில் நிறுவப்படுகிறது.
நீத்தார் வழிபாடு கிட்டத்தட்ட புறச்சமயங்கள் வேறெதனிலும் கிடையாது.
"சிறுதெய்வ வழிபாடு மட்டுமே இம்மண் சார்ந்தது" என்று இன்னும் சாதிப்பவரிடம் "உங்கள் குலதெய்வம் எது? இறுதியாக எப்போது வணங்கினீர்கள்?" என்று கேளுங்கள்.
"இல்லை, இல்லை அவர் புறச்சமயத்தவர்தான், ஆனால் அவர் இறந்துபோன தாய் தந்தையரையும், மூதாதையரையும் வழிபடுகிறார்" என்கிறீர்களா?
அதனால்தான் "இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள்" என்று சொல்லப்படுகிறது.