5 Jul 2020

வெண்முரசு - மஹாபாரதத்தின் அகமும், புறமும்!

Venmurasu - Jeyamohan

மஹாபாரதத்தின் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அந்தப் பாத்திரமாகவே நாமும் அமைந்து, அதன் பார்வையிலேயே படைப்பின் நிகழ்வனைத்தையும் கண்டால், மஹாபாரதத்தை மற்றொரு கோணத்தில் காணலாம். நம் மனத்தில் அந்தப் பாத்திரத்தின் மீதும், அதன் செயல்பாடுகளின் மீதும் நாம் கொண்டுள்ள ஐயம், உறுதிப்பாடு ஆகியவற்றுடன் படைப்பின் நிகழ்வுகளை ஒப்புநோக்கும்போது, அந்தப் பாத்திரத்தின் அகம் நம் நுண்ணுணர்வின் நுணுக்கமான பற்றுதலுக்கு உள்ளாகும். 

வெளிப்படையாகப் பார்க்கும்போது பல கதாபாத்திரங்களுக்குள் உள்ள உறவுமுறை புலப்படாது. மஹாபாரதத்தையும் தாண்டி அதன் கிலா பர்வமான ஹரிவம்சத்தையும், விஷ்ணுபுராணம், பாகவதம், தேவிபாகவதம் ஆகியவற்றையும், மகாபாரதம் தொடர்பாக வெளிவந்துள்ள பண்டைய படைப்புகள் பெரும்பாலானவற்றையும் சேர்த்து மஹாபாரதத்தின் மையக் கதையோடு ஒப்புநோக்கும்போது, குருக்ஷேத்திரப் பெரும்போரில் பங்கேற்றோர் பலரும், கண்டோர் பலரும் வர்ணப் பாகுபாடு கடந்த இரத்த உறவினர்கள் என்பதும், அவர்களுக்குள் இருந்த போட்டி, பொறாமை, வஞ்சம், அன்பு, மதிப்பு, அவற்றுக்கான காரணங்கள் என அனைத்தும் பெருஞ்சிக்கலாக மனத்தில் குவியும். இந்தச் சிக்கல்களை ஒவ்வொன்றாகக் களைந்து, நிகழ்வுகளையும், அவற்றில் நாம் நோக்கும் பாத்திரத்தின் செயல்பாடு, மற்றும் உணர்வு வெளிப்பாடுகளையும் கலந்து பார்க்கும்போதுதான் அந்தப் பாத்திரத்தை நம்மால் முழுமையாக உணர முடியும்.

இதே வகையில் மஹாபாரதத்ததின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நோக்கினால் பல கோணங்களில் மஹாபாரதம் விரிவடையும். இதற்கு ஆகும் நேரமும், அர்ப்பணிப்பும் ஒரு மனிதனின் வாழ்நாளைக் கோருவன. முழுமஹாபாரதத்தையும் முற்றாக உணர இதுவே சிறந்த வழி முறையாகும். கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றே நினைக்கத் தோன்றும். சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கும் பெருஞ்சாதனையைச் செய்திருக்கிறார் ஜெயமோகன். ஏழுவருட தவமாய் சொல்வேள்வியை நிகழ்த்தியிருக்கிறார்.

வெண்முரசு வரிசையில் வந்த சில நூல்களையும், மற்றவற்றில் இங்கொன்றும் அங்கொன்றுமாக உலவித் திரிந்தும் படித்திருக்கிறேன். வெண்முரசு மேற்கண்ட வகையிலேயே அமைந்திருப்பது பிரமிப்பைத் தருகிறது. இது மஹாபாரதமல்ல, மஹாபாரதத்தை நோக்கி வாசகனை உந்தித் தள்ளும் பெரும்படைப்பு. மஹாபாரதப் பாத்திரங்களின் அகம், புறம் காண்பது மகத்தான மானுட விடுதலைக்கு, முக்திக்கு வழிவகுக்கும். முன்பே சொன்னது போல இஃது ஒரு பிறவிக் காலத்தைக் கோருவது.

"வெண்முரசு" மானுடத்திற்கு விடுக்கப்படும் இலக்கிய அறைகூவல். இதற்காகத் தமிழ்ச்சமூகம் ஜெயமோகன் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்.


***

இவ்வருடம், குரு பூர்ணிமா (ஜூலை 5, 2020) அன்று, ஆசிரியருடன் ஜூம் மீட்டிங் மற்றும் யூடியூப் லைவ் வழியாக உரையாட உங்களை அழைக்கிறோம். தங்கள் கேள்விகள், கருத்துக்களை லைவின் கமெண்டில் இடலாம், வருக.

ஜூலை 5, 2020 –

முதல் அமர்வு :காலை 9 மணி