26 Aug 2020

ஜாபாலியின் நாத்திக வாதம் - இராமாயணம் - அயோத்யா காண்டம் - 108ம் ஸர்கம்


பிராமணர்களில் முதன்மையானவரான ஜாபாலி, அறமறிந்தவனும், பரதனைத் அமைதிடையச் செய்து வந்தவனுமான ராமனிடம் அறத்திற்கு மாறான பின்வரும் சொற்களைச் சொன்னார்,(1)

"ராகவா, புத்திக்கும், ஒழுத்திற்கும் புகழ்பெற்றவனான நீ பொது மனிதனைப் போலப் புத்தி கெட்டவனாக இராதே.(2) எவன் எவனுக்கு உறவினன்? எதனாலும், எவனாலும் அடையப்படக்கூடியது என்ன? ஒவ்வொரு உயிரினமும் தனியாகவே பிறந்து, தனியாகவே இறக்கிறது.(3) எனவே, ராமா, "இவன் என் தந்தை, இவள் என் அன்னை" என்று சொல்லி மற்றொருவரைத் தொற்றிக் கொள்ளும் மனிதன் மதியிழந்தவனாகவே அறியப்பட வேண்டும். எவனும் எவனுக்கும் உரியவனல்ல {உறவினனல்ல}.(4) காகுத்ஸா {ராமா}, ஒரு மனிதன், கிராமத்தில் ஓரிடத்தில் வசித்து, அடுத்த நாள் அந்த இடத்தை விட்டுப் பயணத்தைத் தொடர்வதைப் போலவே அன்னை, தந்தை ஆகியோரையும், இல்லத்தையும், உடைமைகளையும் மனிதர்கள் அடைகின்றனர். இவை வசிப்பிடங்கள் மட்டுமே. நல்லோர் இவற்றில் ஒருபோதும் பற்று கொள்வதில்லை.(5,6)

மனிதர்களில் முதன்மையானவனே, துன்பத்தைத் தருவதும், பயணிக்கக் கடினமானதும், முட்செடிகள் நிறைந்ததுமான தனிமையான காட்டில் வசிப்பதற்காக உன் தந்தைவழி நாட்டை நீ கைவிடாதே.(7) செழிப்பான அயோத்தியில் நீ திருநீராடல் {மன்னனாக அபிஷேகம்} செய்து கொள்வாயாக. உன் முடியைக் காணாமல் அந்நகரம் உனக்காகக் காத்திருக்கிறது {அயோத்தி உனக்காகக் காத்திருக்கிறாள்}.(8) இளவரசே, உனக்குத் தகுந்த அரச போகத்தை அனுபவிப்பாயாக. சொர்க்கத்தில் சக்ரனைப் போல நீ அயோத்தியில் விளையாடித் திரிவாயாக.(9)

உனக்குத் தசரதனும், அவனுக்கு நீயும் {உறவெனக் கொள்ள} ஏதுமில்லை. அந்த மன்னனும், நீயும் வெவ்வேறானவர்கள். எனவே, {நான்} சொன்னதைச் செய்வாயாக.(10) பிறவிக்குத் தந்தை வித்தாக மட்டுமே இருக்கிறான். அன்னையிடம் சரியான நேரத்தில் கலக்கும் சுக்லமே இவ்வுலகில் மனிதனாகப் பிறக்கிறது.(11) மனிதர்களின் தலைவனான அவன் {தசரத மன்னன்} எங்குச் செல்ல வேண்டுமோ அங்கே சென்றுவிட்டான். இதுவே {இவ்வாறு செல்வதே} அனைத்தின் இயல்பாகும். தேவையில்லாமல் நீ இன்னும் வருந்திக் கொண்டிருக்கிறாய்.(12)

அறத்திலும், பொருளிலும் {செல்வத்திலும்} அர்ப்பணிப்புள்ளவர்கள் இங்கே துன்புற்று, சடலமாகி, அழிவடைவதால் அவர்களுக்காக நான் வருந்துகிறேனேயன்றி (இன்பத்தில் அர்ப்பணிப்புள்ள) மற்றவர்களுக்காக அல்ல {நான் வருந்தவில்லை}.(13) இந்த மக்கள், "எட்டாம் நாளில் பித்ருதைவத்யம் {பித்ருக்களுக்கான சிராத்தம் செய்யப்பட வேண்டும்}" என்று சொல்கின்றனர். உணவுக்கு நேரும் துன்பத்தை {உணவு வீணாவதைப்} பார். இறந்தவன் உண்பானா?(14) இங்கே ஒருவனால் உண்ணப்படும் உணவு மற்றொருவனின் உடலை அடையுமென்றால், {தொலைதூரப்} பயணம் செய்பவர்களுக்குச் செய்யப்படும் சிராத்தம், பாதையில் அவர்களுக்கு உணவாகாதா?(15)

"வேள்விகளைச் செய், கொடையளி, உன்னைப் புனிதப்படுத்திக் கொள் {தீக்ஷை கொள்}, தபம் செய், துறவு கொள்" என்ற உரைகள் {கிரந்தங்கள்} பிறரைக் கொடையளிக்கச் செய்வதற்காகவே மேதாவிகளால் தொகுக்கப்பட்டன.(16) மதிமிக்கவனே, பரம் என்ற ஏதுமிங்கில்லை {இந்த அண்டத்தைத் தவிர வேறேதும் இல்லை} என்ற புத்தியை அடைவாயாக. உன் கண்ணால் காண்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அறிவுக்கு அப்பாற்பட்டவற்றில் இருந்து விலகிச் செல்வாயாக.(17) உலகம் முழுவதிலும் அப்பட்டமாகத் தெரியும் புத்தியில் உடன்பாட்டை அடைந்தவனாக, பரதனால் அமைதியடைந்தவனாக நாட்டை ஏற்பாயாக" {என்றார் ஜாபாலி முனிவர்}.(18)

மூலம்: https://www.valmikiramayan.net/utf8/ayodhya/sarga108/ayodhyasans108.htm

அடுத்த ஸர்கமான 109ம் ஸர்கம் - ராமனின் மறுமொழி