26 Aug 2020

ராமனின் மறுமொழி - இராமாயணம் - அயோத்யா காண்டம் - 109ம் ஸர்கம்


வாய்மையை ஆன்மாவாகக் கொண்டவர்களில் சிறந்தவனான ராமன், ஜாபாலியின் சொற்களைக் கேட்டு, பக்தியுடனும், கலக்கமடையாத தற்புத்தியுடனும் {பின்வருமாறு} சொன்னான்.(1)

என்னிடம் கொண்ட அன்பினால் இப்போது நீர் சொன்ன சொற்கள் செய்யத்தக்கன போன்று தோன்றினாலும் செய்யத்தகாதனவாகும். ஏற்புடையவை போன்று தோன்றினாலும் ஏற்கமுடியாதவையாகும்.(2) மதிப்பில்லாதவனும், பாவச் செயலுக்கு உடன்படுபவனும், கெட்ட பெயர் கொண்டவனும், தான் காணும் அனைத்திலும் வேறுபாட்டைக் காண்பவனுமான மனிதன், நல்லோரிடம் மதிப்பை ஈட்டமாட்டான்.(3) ஒருவன் நற்குலத்தில் பிறந்தவனென்றும், கெட்ட குலத்தில் பிறந்தவனென்றும், வீரனென்றும், ஆண்மகனென்றும், தூயவனென்றும், தூய்மையற்றவனென்றும் அவனது ஒழுக்கமே {ஆசாரமே} விளங்கச் செய்யும்.(4)

இழிந்தவனாக {அனார்யனாக} இருந்து கொண்டு உன்னதமானவனை {ஆரியனைப்} போலவும், நேர்மையற்றவனாக, தூய்மையற்றவனாக, நற்குணங்களற்றவனாக இருந்து கொண்டு நற்குணங்களைக் கொண்டவனைப் போலவும், கெட்ட நடத்தையுள்ளவனாக இருந்து கொண்டு நன்னடத்தையாளனைப் போலும், நன்மையை {நீதியைக்} கைவிட்டு, அதர்மத்தை {அநீதியைப்} பின்பற்றிக் கொண்டு நீதிமானைப் போலும் காட்டிக் கொண்டு, உலகத்தில் குழப்பத்தை உண்டாக்கி, ஒழுக்கவிதிகளை நான் புறக்கணித்து வந்தால், தக்கன தகாதனவற்றில் வேறுபாடு காணத் தெரிந்த {பகுத்தறிவுள்ள} எந்த மனிதன்தான் இவ்வுலகில் என்னை மதிப்பான்?(5-7)

இவ்வாறு நம்பிக்கையிழக்கும் வகையில் நான் நடந்து கொண்டால், {சாத்திரங்களில்} பரிந்துரைக்கப்படும் ஒழுக்கத்தை நான் எவனுக்கு அறிவுறுத்த முடியும்? நான் எப்படிச் சொர்க்கத்தை அடைவேன்?(8) மன்னர்களின் ஒழுக்கம் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறே குடிமக்களின் ஒழுக்கமும் இருக்கும் என்பதால் இவ்வுலகம் முழுவதும் தான் விரும்பிய ஒழுக்கத்தையே பின்பற்றும் {உலகத்தோர் யாவரும் விரும்பியவாறு நடக்கத் தொடங்குவார்கள்}.(9)

கொடுமையற்ற {இரக்கத்துடன் கூடிய} வாய்மையே தொன்மையான அரசவொழுக்கம் என்பதால் அரசாங்கமானது வாய்மையைத் தன் சாரமாகக் கொண்டிருக்க வேண்டும். வாய்மையிலேயே உலகம் நிலைத்திருக்கிறது.(10) ரிஷிகளும், தேவர்களும் கூட வாய்மையை மட்டுமே மதிக்கின்றனர். வாய்மை பேசுபவன் இவ்வுலகில் பரம நிலையை {உயர்ந்த நிலையை} அடைகிறான்.(11) பொய் பேசும் மனிதனைப் பாம்பைப் போலக் கண்டு {மக்கள்} அஞ்சுகிறார்கள். வாய்மையே உயர்ந்த அறம் என்றும், சொர்க்கத்தின் பிறப்பிடம் என்றும் சொல்லப்படுகிறது.(12) வாய்மையே ஈஷ்வரன். இவ்வுலகில் வாய்மையுடனே எப்போதும் பத்மா {அதிர்ஷ்டதேவி} தன்னை இணைத்துக் கொள்கிறாள். அனைத்தும் வாய்மையையே தங்கள் மூலமாகக் கொண்டிருக்கின்றன. வாய்மையைவிட உயர்ந்த நிலை வேறெதும் இல்லை.(13)

கொடைகள், யாகங்கள், படையல்கள் {ஹோமங்கள்}, தபங்கள், வேதங்கள் ஆகியன வாய்மையையே தங்கள் அடித்தளமாகக் கொண்டிருப்பதால் ஒருவன் வாய்மைக்கு முற்றாக அடிபணிய வேண்டும் {வாய்மையை ஒருபோதும் கைவிடலாகாது}.(14) {பயிலப்படும் வாய்மையின் அளவுப்படியே} ஒருவன் உலகை ஆள்கிறான், ஒருவன் குலத்தை ஆள்கிறான், ஒருவன் நரகில் மூழ்குகிறான், ஒருவன் சொர்க்கத்திற்கு உயர எழுகிறான்.(15) நானும் அதுபோலவே வாய்மைக்கு உண்மையாக இருக்கிறேன். வாய்மை பயின்ற என் தந்தையின் ஆணையை நான் ஏன் நிறைவேற்றக் கூடாது?(16) வாய்மைக்கு இணக்கமானவனான என்னால், பேராசை, மயக்கம், இருள் குணத்தோடு சேர்ந்த அறியாமை ஆகியவற்றின் காரணமாக என் தந்தையிடம் செய்து கொடுத்த உறுதி மொழியை உடைக்க முடியாது.(17) வாய்மையற்றவர்கள், நிலையற்றவர்கள், மனத்தில் உறுதியற்றவர்கள் ஆகியோரின் காணிக்கைகளை தேவர்களோ, பித்ருக்களோ ஏற்க மாட்டார்கள். இதுவே நமக்குக் கற்பிக்கப்பட்டது.(18)

வாய்மையின் வடிவிலுள்ள இந்த அறத்தை அண்டத்தில் படர்ந்து ஊடுருவியிருக்கும் ஆன்மாவாக நான் காண்கிறேன். எனவேதான், நோன்பென நோற்கப்படும் சுமை நல்லோரால் மதிக்கப்படுகிறது.(19) க்ஷத்திரிய அறம் என்று சொல்லப்படுவதும், அறமென்ற பெயரில் பாவச் செயல் செய்யும் மனிதர்களாலும், கொடூரர்களாலும் பயிலப்படுவதுமான இந்த மறத்தை நான் துறக்கிறேன்.(20) மனத்தில் கரு கொண்ட பிறகே, உடலால் பாவம் செய்யப்படுகிறது, நாவால் பொய்ம்மை சொல்லப்படுகிறது. இந்தப் பாதகச் செயல் (உடல், மனம், நாவைச் சார்ந்து) மூன்று வகையானது.(21) நிலம், புகழ், செல்வம், நற்பேறு ஆகியவை உண்மையில் மனிதனைக் கவர்ந்திழுக்கின்றன. அவை தொடர்ந்து {எப்போதும்} வாய்மையிலேயே நிலைபெற்றிருக்கின்றன. எனவே, வாய்மையை உறுதியுடன் பின்பற்ற வேண்டும்.(22) "இந்த நல்லதைச் செய்" என்று நல்லவையாக என்னிடம் நீர் சொன்னவை உண்மையில் தகாதவை (ஆரியமற்றவை).(23)

வனவாசம் செய்யப் போகிறேன் என்று என் தந்தையிடம் உறுதியளித்துவிட்டு, என் தந்தையின் சொற்களைக் கைவிட்டு பரதனின் சொற்களை எவ்வாறு நான் ஏற்பேன்?(24) என் தந்தையின் முன்னிலையில் நான் நிலையான உறுதிமொழியை ஏற்றபோது கைகேயி தேவி மகிழ்ச்சியடைந்தாள்.(25) நான் இவ்வகையில் வனவாசத்தை ஏற்றுக் கொண்டு, என் உலகப் பயணத்தைத் தொடர்ந்து, {மனத்தளவிலும், உடலளவிலும்} தூய்மையானவனாக, உணவுக் கட்டுப்பாட்டுடன், புண்ணியமான கிழங்குகள், மலர்கள், கனிகள் ஆகியவற்றைத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அளித்து, ஐம்புலன் அடக்கத்துடனும், வஞ்சகமில்லாமலும், முழுமையான அர்ப்பணிப்புடனும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற பகுத்தறிவுடனும் இருப்பேன் {இவ்வாறே என் காலத்தைக் கழிப்பேன்}.(26,27) இந்தக் கர்ம பூமியை {செயற்களத்தை} அடைந்தவன் அறச்செயல்களையே செய்ய வேண்டும். அக்னியும் {நெருப்பானவனும்}, வாயுவும் {காற்றானவனும்}, சோமனும் {நிலவானவனும்} தங்கள் செயல்களுக்கான கனியையே அறுவடை செய்கின்றனர் {பலனையே அடைந்து வருகின்றனர்}.(28) தேவராதன் {இந்திரன்} நூறு வேள்விகளைச் செய்துவிட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றான். மஹாரிஷிகள் கடுந்தபங்களைச் செய்து சொர்க்கத்திற்குச் சென்றனர்" {என்றான் ராமன்}.(29)

பேரொளியுடன் கூடிய அந்த இளவரசன் {ராமன்}, {ஜாபாலி சொன்ன} நாத்திகவாதத்தைக் கேட்டு, அவர் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் அவரை நிந்திக்கும் வகையில்,(30) "வாய்மை, அறம், ஆற்றல்மிகுவீரம், உயிரினங்களிடம் கருணை, இன்சொல், இருபிறப்பாளர்களையும், தேவர்களையும், {எதிர்பாரா} விருந்தினர்களையும் வழிபடுதல் ஆகியவை சொர்க்கத்திற்கான பாதைகளென நல்லோர் சொல்கின்றனர்.(31) எனவே, எதில் பொருள் {அர்த்தம் / பெரும்பயன்} உள்ளது என்பதை நன்கறிந்த கல்விமான்கள், தங்கள் நோக்கத்தை உறுதியாகப் பின்பற்றித் தங்கள் கடமையை முழுமையாகவும், கவனமாகவும் நிறைவேற்றி, உயர்ந்த உலகங்களை நாடுகின்றனர்.(32) அறப்பாதையில் இருந்து வழுவி விழுந்த உறுதியான நாத்திகரும், தவறான வழிவகுக்கும் புத்தியைக் கொண்டவருமான உம்மைப் பணிக்கு ஏற்றுக் கொண்டதில் என் தந்தையின் செயலை நான் நிந்திக்கிறேன்.(33) கள்ள புத்தனைப் போன்றவனே {போலியானவனே} நாத்திகனென அறிவதற்கு இஃது ஏற்ற சந்தர்ப்பமாகும். எனவே, ஒரு புத்தன் {நல்லோன்} மக்கள் நலனில் ஐயங்கொண்ட நாத்திகனுடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது[1].(34) உமக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள், இம்மையிலும் மறுமையிலும் (பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள்) அனைத்தையும் கைவிட்டு மங்கலச் செயல்கள் பலவற்றைச் செய்திருக்கின்றனர். எனவேதான், இருபிறப்பாளர்கள் புனித நெருப்பில் படையலிட்டு {ஹோமம் செய்து}, நற்செயல்களைச் செய்கிறார்கள்.(35) அறத்தில் அர்ப்பணிப்புள்ள முனிவர்கள், ஒளிபொருந்தியவர்களும், ஏராளமான கொடையளிப்பவர்களும், எதற்கும் தீங்கிழைக்காமல் களங்கத்திலிருந்து விடுபட்டவர்களுமான நல்ல மனிதர்களுடன் சேர்ந்து உலகத்தில் மதிக்கப்படுகிறார்கள்" {என்றான் ராமன்}.(36)

[1] "யதா² ஹி சோர꞉ ஸ ததா² ஹி பு³த்³த⁴ | ஸ்ததா²க³தம் நாஸ்திகமத்ர வித்⁴ஹி | தஸ்மாத்³தி⁴ ய꞉ ஶங்க்யதம꞉ ப்ரஜாநாம் | ந நாஸ்தி கேநாபி⁴முகோ² பு³த⁴꞉ ஸ்யாத் 2-109-34" என்பது மூலம் முதல் பத்தியில் வரும் " பு³த்³த⁴" என்பதற்கு நல்லபுத்தி என்றும் "சோர" என்பதற்குக் களவு என்றும் பொருள் கொள்ள வேண்டும். "நல்லபுத்தி கொண்டவன் போன்ற கள்வன்" என்பது பொருள். அதுவே இங்கே கள்ள புத்தன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பொருளை மேலும் நெருக்கமாகப் புரிந்து கொள்ள இந்த அத்தியாயத்தில் ஏற்கனவே 5-7 ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை மீண்டும் பார்க்கவும். இறுதி பத்தியில் வரும் "பு³த⁴꞉" புத்தன் என்பதற்கு நல்லோன் என்பது பொருள். இங்கே பௌத்தம் குறித்தோ, புத்தம் குறித்தோ, சார்வாகம் குறித்தோ ஏதும் சொல்லப்பட வில்லை. அறத்தில் நம்பிக்கையற்ற நாத்திகத்திற்கே பதில் சொல்லப்பட்டிருக்கிறது. 

தன்னிரக்கம் கொள்ளாதவனும், இது போலக் கோபமாகப் பேசியவனுமான ராமனிடம் அந்த விப்ரர் {ஜாபாலி}, வாய்மையுடன், தகுந்த சொற்களில் ஆத்திகத்தைச் சொல்லும் வகையில்,(37) "நான் நாத்திகம் சொல்ல மாட்டேன். நான் நாத்திகனல்ல. {பரலோகம்} ஏதுமில்லை என்பது உண்மையுமல்ல. காலத்தை {ஆபத்து காலத்தை} உணர்ந்தே நான் மீண்டும் நாத்திகனானேன்.(38) ராமா, அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் அது மெல்ல தானாக வந்து சேர்கிறது. நான் சொன்ன நாத்திகச் சொற்கள் நீ {அயோத்திக்குத்} திரும்ப வேண்டும் என்ற நோக்கில் உனக்காகவே சொல்லப்பட்டன" {என்றார் ஜாபாலி}.

மூலம்: https://www.valmikiramayan.net/utf8/ayodhya/sarga109/ayodhya_109_frame.htm

இதற்கு முந்தைய 108ம் ஸர்கம் - ஜாபாலியின் நாத்திக வாதம்