27 Aug 2020

ஈவெரா, ஷாலினி - இராமாயண விளக்கம்


இராமாயணத்தில் புத்தரைப் பற்றிக் கூறுகையில் புத்தர் ஒரு நாஸ்திகன், திருடன், அயோக்கியன் என்றும், புத்த பிக்குகள் நாஸ்திகர்கள், சாஸ்திர புராணங்களை வெறுப்பவர்கள் என்றெல்லாம் ஆத்திரத்துடன் இராமன் வாயினாலேயே சொல்லுவதாகக் காணப்படுகிறது.

- பெரியார், விடுதலை  - 28.05.1956

"வால்மீகி ராமாயணத்தில் புத்தரைத் திட்டியிருக்கிறார் ராமன். தட் மீன்ஸ், ராமாயணம் புத்தருக்குப் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. பர்ஷிய மன்னர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த பிறகுதான் தேவநாகிரி எழுத்தே உருவாகி இருக்கிறது. இவர்கள் வேத, பின் வேத காலம் என்று கதைவிட்டதெல்லாம் சுத்த கப்ஸா" என்று  மருத்துவர் ஷாலினி சொன்னதாக முகநூலில் ஒரு படப்படி உலவுகிறது. ஈவெரா சொன்னாரா? ஷாலினி சொன்னாரா? என்பதற்கு அந்தப் படப்படியைப் பகிர்பவர்களே பொறுப்பு.

***

இது சார்ந்த பகுதி இராமாயணத்தில் அயோத்யா காண்டம் ஸர்கம் 109, 34ம் ஸ்லோகத்தில் வருகிறது. இதைத்தான் ஈவெராவும், மருத்துவர் ஷாலினியும் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். 

அந்த ஸ்லோகத்தின் பொருளை ஆங்கிலத்தில் படிக்க https://www.valmikiramayan.net/utf8/ayodhya/sarga109/ayodhyasans109.htm#Verse34 என்ற சுட்டிக்குச் செல்லவும்.

ஆங்கிலத்தில் படிக்க இயலாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக அயோத்யா காண்டம் ஸர்கம் 108, 109 ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். 

மேற்கண்ட வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே மொழிபெயர்க்க முற்படாமல், அங்கே பதம் பிரிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும் ஸம்ஸ்கிருத ஸ்லோகங்களின் பொருள்களை எடுத்துக் கொண்டு மொழிபெயர்த்திருக்கிறேன்.

இதற்கு முன்பு வரும் 107ம் ஸர்கத்தில், காடு சென்று விட்ட ராமனிடம், தசரதன் இறந்ததைச் சொல்லி நாடு திரும்புமாறு பரதன் இறைஞ்சுகிறான். தந்தையை நிந்திக்கும் பரதனை இராமன் கடிந்து கொள்கிறான். அடுத்து வரும் 108ம் ஸர்கத்தில் ஜாபாலி முனிவர் நாத்திக வாதம் பேசி இராமனிடம் நாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு சொல்கிறார். அதற்கு அடுத்து வரும் 109ம் ஸர்கத்தில் ராமன் ஜாபாலியின் கூற்றை மறுத்து அவரைக் கடிந்து கொள்கிறான்.

109ம் ஸர்கத்தில் மேற்கண்டவர்கள் குறிப்பிடும் 34ம் ஸ்லோகத்தில் இருப்பது பின்வருமாறு. 

கள்ள புத்தனைப் போன்றவனே {போலியானவனே} நாத்திகனென அறிவதற்கு இஃது ஏற்ற சந்தர்ப்பமாகும். எனவே, ஒரு புத்தன் {நல்லோன்} மக்கள் நலனில் ஐயங்கொண்ட நாத்திகனுடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது[1].(34)

***

இங்கே பௌத்தம் குறித்தோ, கௌதம புத்தர் குறித்தோ, சார்வாகம் குறித்தோ ஏதும் சொல்லப்படவில்லை. அறத்தில் நம்பிக்கையற்ற நாத்திகத்திற்கே பதில் சொல்லப்பட்டிருக்கிறது. நாத்திகம் கண்டிக்கப்படுகிறது. ஒரு சில தமிழ் மொழிபெயர்ப்புகளில் இங்கே சார்வாகம், பௌத்தம் போன்ற சொற்கள் வலிய சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் முழு பொருளை முற்றாகப் புரிந்து கொள்ள மேற்சொன்ன 108, 109ம் ஸர்கங்களை முழுமையாகப் படிக்க வேண்டும்.

அயோத்யா காண்டம் 108ம் ஸர்கத்தை முழுமையாகப் படிக்க :

https://blog.arasan.info/2020/08/Nastika%20of%20Jabali.html

அயோத்யா காண்டம் 109ம் ஸர்கத்தை முழுமையாகப் படிக்க : 

https://blog.arasan.info/2020/08/Rama%20refutes%20Jabali.html

#இராமாயணம் #ஜாபாலி #ராமன்

முகநூல் பதிவின் சுட்டி: 
https://www.facebook.com/arulselva.perarasan/posts/3701311723230338